புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மெட்ராஸ் டு சென்னை

சிரத்தா குழுவினரின் "மெட்ராஸ் டு சென்னை' நாடகம் (எழுத்தும் இயக்கமும் "பாம்பே' சாணக்யா) அண்மையில் சென்னை நாரத கான சபாவில் அரங்கேறியது. முதல் காட்சியில் ஒரு போட்டோ ஃபிரேம் போன்ற செட்டுக்குள் குடும்பத் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:40 am

சிரத்தா குழுவினரின் "மெட்ராஸ் டு சென்னை' நாடகம் (எழுத்தும் இயக்கமும் "பாம்பே' சாணக்யா) அண்மையில் சென்னை நாரத கான சபாவில் அரங்கேறியது.

முதல் காட்சியில் ஒரு போட்டோ ஃபிரேம் போன்ற செட்டுக்குள் குடும்பத் தலைவர் ஸ்ரீநிவாசன் அவர் மனைவி கல்யாணியில் தொடங்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக அறிமுகமாகும்போதே, இந்த நாடகம் "அரைத்த மாவு அல்ல' என்கிற நம்பிக்கை பிறந்து விடுகிறது.

வீட்டிற்கு அறுபதாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிற நாளில் (அந்த வீட்டுக்கு ஒரு பெயர் வைத்திருக்கலாம்) பிரிந்து போயிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் அந்த வீ ட்டில் ஒன்று கூடுகிறார்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கல்யாணி திடீரென இறந்துவிடுகிறாள். அதன்பின் ஸ்ரீநிவாசன் தன் பேரக் குழந்தைகளிடம் அந்த வீட்டின் அறுபது வருட நிகழ்வுகளில் முக்கியமானவற்றைப் பட்டியலிடுகிறார். அதுதான் "மெட்ராஸ் டு சென்னை'.

கல்யாணியாக வரும் ஷைலஜா, பாத்திரத்தின் கனத்தையும் ஆழத்தையும் உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். இரண்டு முறையும் ஒரே மாதிரி இறந்துபோவது குறிப்பிடப்பட வேண்டியது. வசன உச்சரிப்பும் சிறப்பு. "கையை ஓங்கினதுக்கு பிராயச்சித்தமா நீரஜா பொறந்தா' என்று கணவனிடம் கூறுமிடத்தில் உச்சரிப்பு சற்று மாறியிருந்தாலும் ரசக் குறைவாகியிருக்கும்.

பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டுவதற்கு கிடைத்த வாய்ப்பினை காத்தாடி ராமமூர்த்தி நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். "மனசுக்கு புடிச்சவா பக்கத்துல இருந்தா எந்த இடமும் போரடிக்காது' என்று ரொமான்ஸ் பேசுகிற இடத்திலும் சரி, "அந்தக் காலத்துல சம்பளத்த அப்பாகிட்ட தருவோம். செலவுக்குக் கேட்டு வாங்கிப்போம். இப்ப பசங்க என்ன சம்பாதிக்கறாங்கன்னே தெரியல' என்று புலம்புகிற இடத்திலும் சரி, புரிதல் வேறு ஆளுமை வேறு என்று விளக்கமாகப் பேசுகிற இடத்திலும் சரி, மனிதர் பிரமிக்க வைக்கிறார். சபாஷ் காத்தாடி.

இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில் நடப்பதும் அதைக் கல்யாணியும் ஸ்ரீநிவாசனும் பார்த்து (மனத்

திரையில்?) ரசிப்பதும் புதுமைதான். அந்த காட்சியில் இரண்டு ஜோடிகளைத் தவிர, வேறு யாருமே இல்லாமல் இருப்பது ஒரு "கிளாஸிக் டச்'.

சிவசங்கரின் பின்னணி இசை கவனத்தை ஈர்க்கிறது. சம்ஸ்க்ருத ஸ்லோகம், நாதஸ்வரம், நல்லதோர் வீணை, குறையொன்றுமில்லை என்று சம்பவப் பொருத்தமானத் தேர்வு. சில இடங்களில் நாம் யூகித்த மாதிரியே அமைந்துவிட்டாலும், காணாமல் போன சித்தப்பா ஊரெல்லாம் சுற்றிவிட்டு திரும்பி வீட்டுக்கு வரும்போது ஒலிக்கிற ஒற்றை வயலின் அருமை. (அவர் திரும்பி வந்ததால் "சுபம்' என்பதைத் தவிர கதையில் பெரிய "இம்பாக்ட்' எதுவும் இல்லை)

ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை என்பதால் பெரிய வீடு போன்ற செட் தேவைதான். ஆனால் அளவுக்கு மீறிய படாடோப செட்டில் இந்த எளிமையான கதை சிக்குண்டு விழி பிதுங்குகிறது. எதிர்நீச்சலுக்கோ, நவக்கிரஹத்திற்கோ இந்த மாதிரி செட் ஓ.கே., ஆனால் "மெட்ராஸ் டு சென்னை'க்கு டூ மச். அதுவும் ஒரு காட்சியில் கல்யாணி கூடத்தில் உட்கார்ந்து கல் இயந்திரத்தில் அரிசியைப் போட்டுச் சுற்றும்போது நமக்குத் தலை சுற்றுகிறது.

நாடகம் முழுக்க வசனம் நன்றாக இருக்கிறது, சில இடங்களில் பாலசந்தர் சாயலில் இருந்தாலும். "ஜாதி மதம் பாக்காம நம்ம நாட்டுல நடக்கறது ரெண்டு விஷயம். ஒண்ணு, காதல், இன்னொண்ணு கரப்ஷன்', "நான் இந்த வீட்டுக்குள்ள வரும்போதே விஎம்எஸ் எஸ்- ஐ வெளியே விட்டுட்டுத்தான் வருவேன்' (வெட்கம், மானம், சூடு, சொரணை), "ஓல்டு ஹோம் இருக்கறச்சே ஓல்ட் ஏஜ் ஹோம் எதுக்கடா?' போன்ற வசனங்கள், தொடக்க காட்சியில் போட்டோ ஃபிரேம் அறிமுகம் மற்றும் ஒரு பாத்திரம் இரண்டுமுறை இறப்பது போன்ற உத்திகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த நாடகத்தை கே.பாலசந்தருக்கு "டெடிகேட்' செய்திருக்கிறார்கள். நடுத்தர வர்க்க தமிழ்க் குடும்பத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை சென்னை சபாக்களில் மறு உருவாக்கம் செய்த கே.பி.க்கு பொருத்தமான மரியாதைதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.