சம்பிரதாயப் படங்கள் வேண்டாமே...
உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய சுஜாதா விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்தது. அழகிய பெரியவன், வண்ணதாசன், ஸ்ரீநேசன், ஜோ டி குரூஸ், மு.ஹரிகிருஷ்ணன், யு


உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய சுஜாதா விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்தது.
அழகிய பெரியவன், வண்ணதாசன், ஸ்ரீநேசன், ஜோ டி குரூஸ், மு.ஹரிகிருஷ்ணன், யுவகிருஷ்ணன் ஆகியோர் முறையே கட்டுரைக்கான விருதையும், சிறுகதைக்கான விருதையும், கவிதைக்கான விருதையும், நாவலுக்கான விருதையும், சிற்றிதழுக்கான விருதையும், இணையத்திற்கான விருதையும் பெற்றனர்.
சுஜாதாவின் பிறந்த நாளில் நடந்த இந்த விழாவில், விருது வாங்கிய படைப்புகளின் சிறப்பை விட, சுஜாதாவின் பன்முகத் திறமையை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வியந்து பேசியது, சுஜாதாவின் தீவிர ரசிகர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும். பல இளம் தலைமுறையைச் சேர்ந்த புதியவர்கள் சுஜாதாவின் படைப்புகளை நிச்சயம் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எஸ்.ராமகிருஷ்ணன் சுஜாதாவின் பன்முக ஆளுமைகளைத் தொகுத்து "என்றும் சுஜாதா' என்னும் நூலை வெளியிட்டது, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை அனைவரின் மனங்களிலும் நிறுத்தும் வகையில், புகழஞ்சலியாக அமைந்தது.
""நகுலன் வழி வந்தவர் சுஜாதா. பாரதிக்குப் பின் மொழியை எளிமையாக்கியவர் சுஜாதாதான். ஜனரஞ்சக எழுத்தாளராக சுஜாதா புகழ் பெற்றதால் அவரைக் கொண்டாடுவதற்கும் அவரது திறமைகளை மதிப்பதற்கும் தமிழகத்தில் இருக்கும் இலக்கியவாதிகளும் அறிவு ஜீவிகளும் தவறிவிட்டார்கள். தவிர்த்துவிட்டார்கள். இதற்காக சுஜாதா போராடியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. நேற்று மலையாளத்தில் எழுதும் ஒருவரின் நாவல் கூட, தமிழில் இன்றைக்கு மொழிபெயர்க்கப்பட்டுவிடுகிறது. ஆனால் தமிழில் இவ்வளவு புகழோடு விளங்கும் சுஜாதாவை கேரளாவில் இருப்பவர்களுக்குத் தெரியாது. நாம் தெரிவிக்கத் தவறிவிட்டோம். ஆர்தர் சி.கிளார்க்கின் "நைன் பில்லியன் நேம்ஸ் ஆஃப் காட்' என்னும் படைப்பை விட, சுஜாதாவின் "தேவன் வருகை' மிகச் சிறப்பானது. சுஜாதாவின் படைப்புகளை நம் மாநிலம் தாண்டி செல்வதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஏதாவது மாற்றம் செய்யவேண்டும்'' என்ற சாருநிவேதிதாவின் பேச்சில் உண்மையான ஆதங்கம் வெளிப்பட்டது.
""சில விருதுகளைப் பெறுவதின் மூலம் ஒருவர் மேல் இருக்கும் மரியாதை கூடும். குறையும். அந்த வகையில், சுஜாதா விருது பெற்றிருக்கும் அனைவரின் மீதும் மரியாதைதான் யாருக்கும் ஏற்படும். ஏனென்றால் இவை தரப்பட்ட விருதுகள்; வாங்கப்பட்டவை அல்ல!'' என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.
""கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், நகைச்சுவை, உளவியல்... என்று எண்ணற்ற துறைகளைப் பற்றி யோசித்திருப்பவர், அவற்றைக் குறித்து தம்முடைய படைப்புகளில் எழுதியிருப்பவர் என்பதே சுஜாதாவின் தனிச் சிறப்பு. அவர் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முக்கியமான விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். அவை, கவிதை, விஞ்ஞானம், துப்பறியும் கதைகள். அவரின் இந்தப் பிரமிக்கவைக்கும் பணியே, நான் "என்றும் சுஜாதா' நூலைப் படைப்பதற்கு ஆதாரமாக இருந்தது.
இலக்கணமே கவிதை நடையில் இருக்கிறதென்றால் அது, தமிழ் மொழியில்தான். தொல்காப்பியத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். இந்த நுட்பம் தெரிந்திருப்பதால்தான் சுஜாதா, கவிதைகளைக் கொண்டாடினார். நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். நாமும் கவிதைகளைக் கொண்டாடுவோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன் எஸ்.ராமகிருஷ்ணன்.
ஒரு நெருடல். சுஜாதா விருது பெற்றவர்களை, மேடையில் ஒரே வரிசையில் தங்கள் விருதுகளுடன் புகைப்படம் எடுப்பதற்காக நிற்க வேண்டினர், பல பத்திரிகைகளைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள். மனுஷ்ய புத்திரனோ, ""சங்கீத சபாக்களில் எடுப்பதைப் போன்ற சம்பிரதாயப் படங்கள் வேண்டாமே..'' என்றார்.
""இன்னார் இந்த விருதைப் பெற்றவர் என்பதை நாளிதழில் படக்குறிப்பாக எழுதவேண்டியது எங்களின் கடமை. அதைத் தடுக்காதீர்கள்'' என்று புகைப்படக் கலைஞர்கள் குரல் எழுப்பிய பின், மனுஷ்ய புத்திரன் அதற்குச் சம்மதித்தார்.
விருதைக் கொடுத்தவர்களும் அதைப் பெற்றவர்களும் ஒருங்கே சந்தோஷமாவது, விழாவுக்கு மறுநாள் நாளிதழ்களில் அச்சாகும் இந்தச் சம்பிரதாயமான புகைப்படங்களால்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...