சாகித்திய அகாதெமி சார்பில் சென்னை, கன்னிமரா நூலக அரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை கவிஞர் தமிழ்ஒளி இலக்கிய அரங்கம் நடைபெற்றது. அகாதெமியின் தென்மண்டல செயலர் அ.சு. இளங்கோவனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இராம.குருநாதன், "" தமிழ் ஒளியின் கவிதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பெரும் எழுச்சியை உண்டாக்கியவை. பாரதிதாசன், வாணி தாசன், புதுவை சிவம் என்று புதுச்சேரியோடு தொடர்புடைய கவிஞர்கள் பலர் இருப்பினும் தமிழ் ஒளிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மரபை நன்கு அறிந்து யாப்பை மீறாமல் சிறந்த கவிதைகளை தந்தவர் அவர். மரபின் தாக்கம், பாரதியின் தாக்கம் இரண்டையும் அவரது கவிதைகளில் காணலாம். கம்பனையும் இளங்கோவையும் காதலாகக் கற்றவர் தமிழ் ஒளி.
கவிதை படைப்பதில் அவர் குறிக்கோள் என்ன என்பதை அவரே ஒரு கவிதையில்...
ஊரை எழுப்பிடவே - துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் - தமிழ்ச்
சாதி விழித்திடவே!
என்று குறிப்பிடுகின்றார்.
நம் நாடு விடுதலையடைந்த நேரத்தில் ஒரு கவியரங்கில் அவர் பாடிய கவிதையில்,
மண்குடில் வாழ்ந்திடும் ஏழையும் - ஒரு
மாளிகை வாழ்ந்திடு செல்வனும்
அண்ணனும் தம்பியும் என்றிடில் - துயர்
ஆக்கிடு பேதம் பொருந்துமோ?
என்று வினா எழுப்புகிறார். இவரது தத்துவப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு "பட்டமரம்' என்கிற இவருடைய அருமையான கவிதை. இப்படி பன்முகத் திறமை கொண்ட கவிஞனைப் பற்றி பலரும் அறிந்து கொள்வதற்கு இதுபோன்ற விழாக்கள் பெரிதும் பயன்படும்'' என்றார்.
அடுத்துப் பேசிய செ.து.சஞ்சீவி ""தமிழ் ஒளி திராவிட இலக்கியத்திற்கும் பொதுவுடைமை இலக்கியத்திற்கும் கடுமையாக உழைத்தார். ஆனால் இரண்டு இயக்கங்களுமே அவரை ஆதரிக்காமல் விட்டுவிட்டன. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கவிஞர் தமிழ் ஒளி பற்றி குறிப்பிடும்போது, "பாரதியின் கவிதை, சித்தர் மரபின் கவிதை. பாவேந்தரின் கவிதைகள் சங்க இலக்கியத்தின் பெருமைகளை நமக்கு மீண்டும் தந்தன. ஆனால் சிலம்புக் கவிஞன் இளங்கோ, சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆகியோருடைய கவிதை மாயங்களை இன்றைய தமிழ் ஒளியின் கவிதைகள் மீட்டுக் கொணர்கின்றன' என்று கூறுகிறார்.
தமிழ் ஒளிக்கு போதிய ஆதரவு கிட்டியிருந்தால் மேலும் ஏராளமான படைப்புகளை அவர் படைப்பதற்கு ஊக்கம் கிடைத்திருக்கும். அப்படி நடவாதது நமது துரதிருஷ்டமே...'' என்றார் சஞ்சீவி.
கே.ஏ.குணசேகரன் பேசும்போது, ""புதுச்சேரியில் தமிழ் ஒளி வசித்த பகுதியில்தான் நானும் வசித்தேன். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பல கவிஞர்களுள் முக்கியமானவர் தமிழ் ஒளி. இவரது பொதுவுடைமை சிந்தனை சார்ந்த கவிதைகள் காலத்தைக் கடந்தும் நினைக்கப்படும் என்பது உறுதி'' என்றார்.
இறுதியாகப் பேசிய ஈரோடு தமிழன்பன், ""ஏராளமான கவிஞர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள் சிலர்தான். காந்தீய தாக்கத்தால் கவிதை எழுதிய கவிமணி, நாமக்கல் கவிஞர் போன்றோரை விடப் பெரும்புகழ் பெற்றவர் பாரதியார்தான். பாரதிக்குப் பின் எத்தனையோ கவிஞர்கள் வந்தாலும் பாரதிதாசன் போல் மற்றவர்கள் சிறப்படையவில்லை. அந்த பாரதிதாசனிடம் மாணவராக இருந்து சிறந்த கவிஞராக உருவானவர் தமிழ் ஒளி. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சார்ந்திருந்த இயக்கங்கள் அவரை ஆதரிக்கவில்லை என்று கூறுகின்றனர். உலகம் முழுக்க கலைஞர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. மேல்நாட்டு அறிஞன் ஹோமர் உயிர் வாழ்வதற்கு உணவு கிடைக்காமல், எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் அலைந்து திரிந்தானோ, அந்த நாடுகளெல்லாம் அவன் இறந்து அவன் புகழ் பரவிய பின்பு "ஹோமர் எங்கள் நாட்டுக்காரர்... ஹோமர் எங்கள் நாட்டுக்காரர்..' என்று பெருமை பேசின.
தமிழ் ஒளி மரபை நன்கு அறிந்த கவிஞர். அவரது கருத்துகளில் சிலருக்கு உடன்பாடு இல்லாதிருக்கலாம். ஆனால் அவரது கவிதைத் திறனையும் சிந்தனைப் போக்கையும் நாம் ஒதுக்கமுடியாது. இலக்கிய உலகில் பல போக்குகள் இருப்பது இயல்புதான். ஆனால் ஒன்றையொன்று மறுப்பது சரியன்று. தமிழில் பாரதி, பாரதிதாசன், சி.சு.செல்லப்பா போன்றவர்களுடைய போக்குகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையே. ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்னும் கருத்து இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது. கவிஞர் தமிழ் ஒளி குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோலவே கம்பதாசன், வாணிதாசன், முடியரசன் போன்ற பல கவிஞர்களையும் நாடு கொண்டாடவேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


