பாட்டுப் போராளி!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் எழுதிய பாப் மார்லி என்ற புத்தகத்தின் அறிமுகக் கூட்டம் சென்னை, எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளர் கமலாலயன் தலைமை வகித்தார். நூலை அறிமுகம் ச


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் எழுதிய பாப் மார்லி என்ற புத்தகத்தின் அறிமுகக் கூட்டம் சென்னை, எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளர் கமலாலயன் தலைமை வகித்தார்.
நூலை அறிமுகம் செய்து பேசிய அஜயன்பாலா, ""எனக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாப் மார்லி என்ற பெயர் அறிமுகமானது. அப்போது இன்றைய இணைய வசதிகளோ, டி.வி.டி.களோ கிடையாது. மூன்றாம் உலக நாடான ஜமைக்கா நாட்டில் பிறந்த அவர் அந்த நாட்டு இசையோடு வந்தார். அவர் அமெரிக்கா வந்த பிறகுதான் உலகப் புகழ் பெற்றார். அமெரிக்கா என்பது பல இன மக்கள் குடியேறிய நாடு. அமெரிக்காவுக்கு என்று தனி இசை கிடையாது. ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் இசை உருவாக்கப்பட்டு, அது டிரெண்டாக மாற்றப்பட்டது. இதற்கு போனியம், சிம்பொனி போன்ற இசைக்குழுக்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இன்று டி ஷர்ட்டுகளில் சேகுவேராவும் பாப் மார்லியும்தான் அதிகமாக இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாப் மார்லியின் இசை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்ததாலும் மக்களின் இசையாக இருந்ததாலும் அது காலத்தைக் கடந்து நிற்கிறது'' என்றார்.
தமிழில் இசை குறித்து தொடர்ந்து எழுதி வரும் ஷாஜி, ""65 வயதான வெள்ளைக்கார அப்பாவுக்கும் இருபது வயதான கருப்பின அம்மாவுக்கும் பாப் மார்லி பிறந்தார். மார்லி பிறந்தவுடனேயே அவரின் அப்பா, அவர்களைத் தவிக்கவிட்டுவிட்டுப் போய்விட்டார். இவர் எங்கும் யாரிடமும் இசையைக் கற்றுக் கொள்ளவில்லை. சிறு வயதில் படிக்க வசதி இல்லாததால் வெல்டிங் வேலைக்குச் சென்றார். நேரம் கிடைக்கும்போது அம்மாவை உட்கார வைத்து, தான் பாடும் பாட்டைக் கேட்கச் சொல்வார். இப்படியாக இவர்களின் வாழ்க்கை ஜமைக்காவில் உள்ள ஒரு சேரியில் கழிந்தது. தம்முடைய 16-ஆம் வயதில் இரு பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டார். இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 1965-ஆம் ஆண்டு "வெய்லர்ஸ்' என்ற இசைக் குழுவை உருவாக்கினார். அப்போது அவர் வெளியிட்ட "சிம்மர் டவுன்', "ரூல் தெம் ரூய்ட்', "இட் ஹர்ட் டு பி அலோன்' ஆகிய பாடல்கள் ஜமைக்காவில் பிரபலமாயின.
மார்லி அமெரிக்காவில் இருந்தபோது கிறிஸ்தவ மதத்தை துறந்து ரஸ்தஃபாரி மதத்தை ஏற்றார். அன்றைய எத்தியோப்பியா மன்னர் இதே மதத்தைச் சேர்ந்தவர்தான். ஜமைக்காவில் அதிகமாக கஞ்சா விளைந்தது. அது ரஸ்தஃபாரி மதத்தில் புனித பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் மூலிகையாகவும் தியான நிலைக்கு உகந்ததாகவும் கருதப்பட்டது. மேலும் இந்த மதத்தைப் பின்பற்றும் மக்களின் தலைமுடி சிக்கு பிடித்ததுபோல் இருக்கும். இந்த இரண்டையும் பின்பற்றினார் மார்லி. மார்லியின் இந்த சிகை அலங்காரம் பின்னாளில் உலகப் புகழ் பெற்றது. தம் தோழியும் ஒரு குழந்தைக்குத் தாயுமான ரீட்டாவைத் திருமணம் செய்து கொண்டார்.
முதலில் இவரது இசைத்தட்டுகள் விற்பனையில் சாதனை செய்யவில்லை. ஆனால் கவனத்தைப் பெற்றன. அமெரிக்காவுக்குச் சென்று வாய்ப்புகளைத் தேடும்போது ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்தார். ஆரம்பத்தில் சில கம்பெனிகள் ஒரு பாடலுக்கு இருபது டாலர் என்று ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் வெளியான பாடல்கள் விற்பனையில் சாதனை புரிந்தன. இதற்குப் பிறகு வந்த பாடல்களும் விற்பனையில் சாதனை புரிந்து மார்லியை பொருளாதார உச்சிக்கு எடுத்துச் சென்றன.
ஜமைக்கா நாட்டில் உள்ள "ரெகே' இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தவர் மார்லி. பாப் மார்லியின் பாடல்கள் காலமெல்லாம் மனிதர்களின் நீதிக்காகவும், அமைதிக்காகவும் நடத்தி வரும் அனைத்துப் போராட்டங்களையும் தொட்டுச் செல்பவை. மேலும் அவருடைய பாடல்களில் காதலும், கஞ்சாவும் இடம் பெற்றிருந்தன. அரசியல் கொந்தளிப்பு எப்போதும் உள்ள நாடு ஜமைக்கா. அங்கிருந்த இரண்டு கட்சிகளும் எப்போதுமே ஆயுதங்களால் மோதிக் கொண்டன. இந்த இரண்டு கட்சிகளையும் சமாதானப்படுத்தினார். அதற்காக ஐ.நா. சபையின் மூன்றாம் உலக அமைதிப் பரிசைப் பெற்றார். இன்னொரு புறம் சி.ஐ.ஏ.வால் சுடப்பட்டு தப்பினார். மார்லி உலக நட்சத்திரமாக மாறிய பின்பும், தாம் வாழ்ந்த ஜமைக்கா தெருவில் உலவுவதையும் நண்பர்களோடு மனம்விட்டுப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் இறக்கும் வரையில் 4000 குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றி வந்தார். 16 வயதில் பாட வந்த மார்லி 26-ஆம் வயதில் புற்றுநோயால் இறந்து போனார்.
மார்லியின் பாடல்களும் இசையும் கோடிக்கணக்கான மனிதர்களை உத்வேகமூட்டின. மார்லியின் பாடல்கள், கைவிடப்பட்டு தனித்து நிற்பவனை ஆரத் தழுவிச் செல்லும் தென்றல்போல ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதும் கண்ணீர் சிந்தும் கோடிக்கணக்கான பெண்களுக்காக "நோ வுமன் நோ கிரய்' என்ற பாடலைப் பாடினார். பத்தாண்டுகளில் தம் குரலால் உலகத்தையே வசீகரித்த பாப் மார்லி கருப்பின மக்களின் குரலாக ஒலித்தார்'' என்றார் ஷாஜி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினரான சிவ செந்தில்நாதன் விழாவை ஒருங்கிணைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...