புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வள்ளலார் எனும் தத்துவஞானி!

சென்னை முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளையும் சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் இணைந்து வள்ளலார் அவதார தின விழாவைக் கடந்த வாரம் அடையாறிலுள்ள திருவாடுதுறை(திருவாவடுதுறை என்பதுதானே சரி?) டி.என்.ராஜரத்தினம் கலையர

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:22 pm

சென்னை முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளையும் சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் இணைந்து வள்ளலார் அவதார தின விழாவைக் கடந்த வாரம் அடையாறிலுள்ள திருவாடுதுறை(திருவாவடுதுறை என்பதுதானே சரி?) டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடத்தின. விழாவுக்கு முனைவர் வை.ரத்தினசபாபதி தலைமையேற்க, முனைவர் ம.ராஜேந்திரன் முன்னிலை வகிக்க, ஜெய.ராஜமூர்த்தி மற்றும் சந்திரகுமாரி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியிலிருந்து...

சந்திரகுமாரி: அகவல் அருட்பாக்கள் எழுதுவது என்பது எளிதல்ல. வள்ளலார் இறைவனை சுவையோடு ஒப்பிட்டு அருமையாகப் பாடியிருக்கிறார். மனிதன் மரணத்தை எண்ணித்தான் பயப்படுவான் என்பதை உணர்ந்து அடிக்கடி மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்கிறார். ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு அல்லது மருந்து கொடுக்கும்போது பூச்சாண்டி என்று பயம் காட்டுவது மாதிரிதான் அது.

"ஆசையுண்டேல் வம்மின் இங்கே' என்று வற்புறுத்தி அழைப்பார். ஆயினும் மனிதர்கள் தயங்குவதைப் பார்த்து "எத்துணை கொள்வீர் பித்துலகீரே' என்று கேள்வி எழுப்புகிறார். மரணமிலாப் பெருவாழ்வு பற்றிப் பேசுகிறார். தன்னைத் திட்டுபவர்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. "வைதாலும் வைதிடுமின் மனம் நோக மாட்டேன்' என்று கூறுகிறார். "நான் உறவனன்றி பகைவனலன்' என்று பாடுகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் நம்மால் இயன்றவரை உதவி செய்ய வேண்டும் என்று கூறுகிறார். தில்லை நடராசனைப் பற்றிப் பாடும்போது "மின்னிடையாள் காண ஆடுகின்றாய் இணையடிகள் நோவாதோ?' என்று வருந்துகிறார். அவர் இறைவனிடத்தும் இரக்கம் காட்டியவர். இந்த உலகத்தை எண்ணி கண்ணீர் வடித்தவர் அவர். உலகத்தாராகிய நாம் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? அவரது பாடல்களை மனமுருகிப் படிப்பதுதான் அந்தக் கைம்மாறு. படித்துப் பாருங்கள். உட்பகைகள் விலகும்; அற்புதங்கள் நிகழும். இது எனது நம்பிக்கையல்ல; அனுபவம்.

ஜெய.ராஜமூர்த்தி: வள்ளலார் ஓர் ஈடிணையற்ற தத்துவ ஞானி. நாம் அனைவரும் மனித நேயத்தோடு வாழ்ந்தால் இந்தப் பூமியே சொர்க்கமாகிவிடும் என்பதை அன்றே கூறியவர். அவர் முத்தமிழுக்கும் தொண்டாற்றியவர்.

""கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே

உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்த மணமலரே!''

இப்படி எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான பாடல்கள். 5,818 பாடல்களை இயற்றமிழில் அருட்பாவாக தந்திருக்கிறார். அவருடைய அற்புதமான உரைநடையை "மனுமுறைகண்ட வாசகத்தில்' காணலாம். அதுபோலவே இசைத்தமிழையும் நன்று அறிந்தவர் வள்ளலார். சிதம்பரத்தில் வாழ்ந்த பிடில் நாராயணசாமி என்னும் பெரும் இசைக்கலைஞர் ""எனக்கு இசை சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை வள்ளலாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவேன்'' என்று கூறியதாக, பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பித்த திருவாசகத்தில் ஒரு குறிப்பு வருகிறது. "எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ' என்ற பாடலைப் பாடாத இசைமேடை எங்கும் இல்லை.

வள்ளலார் சமரச வாழ்வை வலியுறுத்துவார் என்பதை முன்பே அறிந்தோ என்னவோ அவரது பெற்றோர் அவருக்கு ராமலிங்கம் என்று சைவ வைணவ ஒற்றுமைப்பெயரை சூட்டியிருக்கின்றனர். சென்னை வந்தபின் அவர் ராமலிங்க அடிகள் ஆனார். அப்போது சிலர் அவரை ராமலிங்க சுவாமிகள் என்று அழைத்தபோது "அப்படி அழைக்காதீர்கள் கூச்சமாக இருக்கிறது' என்று கூறினார்.

பொருள் சேர்ப்பதில் அவருக்கு சிறிதும் ஆசை இருந்ததில்லை.

""பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலை நான்

படைத்த அப்பணங்களைப் பலகால்

கிணற்றில் எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்

கேணியில் எறிந்தனன் எந்தாய்!''

என்று பாடுகிறார். அவர் சிதம்பரம் வந்து வாழ்ந்தபோது வள்ளலார் ஆனார். ஆன்மிகத்திற்கு சங்கம் கண்ட முதல் தமிழர் அவர். அவர் அறிவின் சிகரம்; அன்பின் எல்லை; கடவுளை மறுப்பவர்கள்கூட இந்த ஞானியை ஏற்றுக்கொள்வார்கள். உலகில் வள்ளல்கள் பலர் இருக்கலாம். ஆனால் வள்ளலார் என்றால் நமது திருவருட்பிரகாச வள்ளலார் ஒருவரே. அவர் புகழ் போற்றுவோம். அவர் வழி நடப்போம்.

முனைவர் ம. ராஜேந்திரன்: நாம் ஒருவரை வள்ளல் என்று கூறினால் அவரிடம் நாம் கையேந்துகிறோம் என்பதுதான் பொருள். வள்ளலாரிடம் நாம் எதற்குக் கையேந்துகிறோம்? அவரது உயர்ந்த கருத்துக்களுக்காக. ஏராளமான சிறந்த கருத்துக்களின் கருவூலமாக அவர் எனக்குத் தெரிகிறார். சுருங்கச் சொன்னால் ஒரு நூலகம் போல் தெரிகிறார். ஆம். வள்ளலார் ஒரு நூலகம். பொது நூலகம். உலகத்தைப் பார்க்க கற்றுத் தருவது நூலகம். நமக்கு தன்மானத்தையும் சுயமரியாதையையும் உண்டாக்குவது நூலகம். ஒருவர் நூலகத்திற்குள் சென்று வந்தால்தான் அவருள் நிகழும் மாற்றத்தை அவர் உணரமுடியும்.

சில சாலைகளில் வைக்கப்படும் "விபத்துப் பகுதி கவனமாக செல்லவும்' என்கிற எச்சரிக்கைப் பலகை விரைவில் வழிபாட்டுத் தலங்களிலும் வைக்கப்படக்கூடும். மதம் மனிதநேயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக மனிதபேதத்தை உருவாக்கி விட்டது. இங்கு போரால் மடிந்த உயிர்களைவிட, மதத்தால் மடிந்த உயிர்களே அதிகம். வள்ளலார் கண்ட கடவுள் ஒளி வடிவம்தான். வெளிச்சம் என்பது நம்பிக்கை.

ஆன்மிகவாதிகள் முக்கியமான மூன்று நூல்கள் என்று உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை இவற்றைக் குறிப்பிடுவர். ஆனால் வள்ளலார் திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய மூன்று நூல்களைக் குறிப்பிடுகிறார். வள்ளலாருக்கு முன்பும் பக்தி நூல்கள் இருந்திருக்கின்றன. தேவாரம் முழுக்க பக்தி மணம்தான். திருவாசகமோ உருக்கம். ஆனால் வள்ளலார் பாடல்களின் அடிநாதம் இரக்கம் - உயிர் இரக்கம் - வள்ளலாருக்கு முன்பு பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் என்று இருந்தது. அதனை வள்ளலார் பசித்தோருக்கெல்லாம் அன்னதானம் என்று மாற்றினார்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வரியை படித்தபோது நான் வியந்து போனேன். ஆனால் உடனே ஓர் ஐயமும் எனக்கு வந்தது. பயிர் வாடினால் மட்டும்தான் மனம் வாட வேண்டுமா? களை வாடினாலும் வாட வேண்டாமா? களையும் ஓர் உயிர்தானே என்று தோன்றிற்று. ஆனால் சற்று சிந்தித்ததும் தெளிவு பிறந்தது.

நமக்குத்தான் இது பயிர், இது களை என்கிற பாகுபாடெல்லாம். வள்ளலாருக்கு எல்லா உயிரும் ஒன்றுதான். "புல்லும் மரனும் ஓர் அறிவினவே' என்றுதானே தொல்காப்பியமும் சுட்டுகிறது. வள்ளலாருக்கு சைவ சமயக் குரவர்கள் நால்வர் மீதும் பெரும் பற்று இருந்தாலும் சுந்தரரை மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம் இறைவனால் "அடிமை' என்று அழைக்கப்பட்டவர். பின்பு இறைவனை "பித்தா' என்று அழைத்துப் பாடும் நிலைக்கு உயர்ந்ததும் அதன்பின் இறைவனே "இவன் என் தோழன்' என்று கூறுமளவிற்குத் தம்பிரான் தோழனாக மாறியதும்தான். இத்தகைய சமரசத்தைத்தான் தன் வாழ்நாள் முழுதும் வலியுறுத்தி வந்தார் வள்ளலார். அவரை நாள்தோறும் பயிலவேண்டும். உருக்கமுடன் பயில வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.