நெல்லுக்கிறைத்த நீர் நிறை வாய்க்காலைத் தாண்டி
புல்லையும் நெல்லையும் விளைவித்தது ; அவ்வை போலும்
நல்லார் இருந்தமையால் மும்மாரி பொழிந்தது,
நாடும் வீடும் செல்வச் செழிப்புடன் கொழித்தது.
வள்ளலுக்கு வாய்த்த செல்வம் வரம்பில்லா ஈகையாகி
வறுமைமிகு மக்களுக்கும் வாழ்வு கொடுத்தது.
பிச்சைப் புகினும் கற்கை நன்றெனக் கற்றோர்க்கு
சென்ற இடமெலாம் சிறப்பைப் பெற்றுக் கொடுத்தது.
இரக்கமிகு உழவன் வீட்டுணவு எல்லை தாண்டி
ஏழையின் பசித்தீயை முற்றாய் அணைத்தது.
உழவும் தொழிலும் ஒரு சேர வளர்ந்து
வளத்தைத் தந்தது ; வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்தது.
அரசை ஏமாற்றி ஆசையாய்ச் சேர்த்த செல்வம், இன்று
அந்நிய நாட்டில் கள்ளப்பணமென சேமிப்பாகிறது ;
நாட்டுப் பற்றெனும் நற்பண்பு எங்கோ மறைந்தொழிந்தது;
காட்டிக் கொடுக்கும் தீயவர் கூட்டம் பரந்துவிரிந்தது .
செல்வம் செல்வரை மேலும் பெருஞ்செல்வராக்கி
இல்லாரின் ஏழ்மையை பெருக்கி வைத்தது;
பணமில்லா ஏழையருக்கு மேற்படிப்பு வாய்ப்பைக்
குதிரைக் கொம்பாய் இன்றது மாற்றி வைத்தது.
நல்லார் எண்ணிக்கை நலிவடைந்து போனதால் பெரும்
பொல்லாங்கு பூமியைச் சூழ்ந்து கொண்டது; என்றும்
அவ்வை போன்ற நல்லோர் மிகுவராயின் அவனியில்
செவ்வை நெறிகள் சீராகும் ; கவ்விய இருளகலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.