புத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 3

மொழிக்கு மட்டும் அடிமை என்று இருப்பவனை – என் விழிக்கும் நீ அடிமை என்று சொல்லாமல் சொல்கிறாள்
புத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 3
Published on
Updated on
2 min read

புத்தரின் புன்னகை

கார்மேகப்    புன்னகைதான்   மின்ன   லாகும்;
         கதிரவனின்  புன்னகைதான்   விடிய  லாகும்;
சீர்திங்கள்  புன்னகைதான்  குளிர்வெ   ளிச்சம்;
         சிதறியேதான்  பூத்திருக்கும்   தார  கைகள்
பே(ர்)இரவின்  புன்னைகையே;  மண்ணின் இன்பப்
புன்னகைதான் மழைத்துளிகள்; இவைகள்   போன்று,
பார்போற்றும்   புத்தரவர்   புன்ன  கையும்
       பின்பற்றும்   பேரன்பே   என்று   ணர்வோம்!

மலராத   அரும்புகளின்   புன்ன    கைதான்
       மலர்ந்துமலர்  மணம்வீசும்   மாண்பே  யாகும்;
புலர்காலை   புன்னகையே   விடித   லாகும்;
       பெண்ணினது   புன்னகையே  இன்பங்   கூட்டும்;
இலக்கியத்தின்   புன்னகையே   நூல்க  ளாகும்;
         இருளகற்றும்    புன்னகையே   கல்வி  யாகும்;
கலர்நிலத்தில்   மகசூலாய்   விளைய  வைக்கும்
     கருணையன்பே  புத்தரவர்  புன்ன  கையே!

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

**

புத்தரின் புன்னகையால் இச்சகத்தின்
சூச்சம மறிந்தார் ||
இதயங்களை கவர்ந்தார் சரளமாய் இச் சகத்தார் இதயத்துள் ||
நுழைந்தார்; இதற்காய் கூலிகொடுத்து கூட்டம் கூட்டாதவர் ||
தீமைக்கு விருந்தாக அமைந்தவைக்கு
மருந்தாய் நின்றார் ||
பொய் புறட்டுகளை உணர்த்துவதில் விளக்கானார் "புத்தரின் ||
புன்னகை"யில் அர்த்தங்கள் ஆயிரத்தை
நெய்து முடித்தார் ||
நாதியற்ற போதிமரத்திற்கு புகழாரம்
மூலகாரணர் ஆவார் ||
அறிவை அறிவித்து அறிந்தப்பின் அறிந்தோரைக் கண்டு ||
புன்னகைத் தவர் உலக வளைவு நெளி வுகளில் நுழைந்து ||
வெளிவந்து பௌத்த மதம் உருவாக தூணாய் நிற்க  ||
புத்தரின் புன்னகை ஒன்றேயல்லாது
வேறொன்றுமில்லை ||
சொல்வதை கேட்டவன் கெட்டவனில்லை
கேட்டதை சொல்பவன் ||
அறிவாளி இல்லையாயினும் அவனோ
அனுபவசாலியாவான் ||
இனிமை புதுமை கார சாரம் அனைத் தையும் உள்ளடக்கி ||
ஒரு புன்னகை யில் கோர்த்து சரமாக்கி
சாதகமாக்கித் தந்த ||
இம்மண்ணாள விழிப்புடன் இருந்தது புத்தரின் புன்னகை ||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

                                     
புத்தரின் புன்னகை!
புத்தரின் புன்னகை புனிதமானது
கர்த்தரின் கனிவினைக் காட்டிநிற்பது
எத்தர்களையும் ஏங்கச் செய்வது
சித்தர்தாமும் சிறப்பென உணர்ந்தது!

ஆசையடக்கினால் அகிலத்தில் அமைதி
பசைபோல்தானும் பட்டென ஒட்டும்
இசையில்மகிழும் இனிய உலகாய்
வசைகளின்றி வாழும் அமைதியாய்!

பட்டம்  பதவி பரிசுத்தமனைவி
விட்டம் நீண்ட வெள்ளைஅரண்மனை
சட்டம்போடும் சரிவில்லா அதிகாரம்
கட்டம்போட்டுக் கடந்தே வந்தார்!

கட்டுப்பாட்டுடனே கனிவுடன் நாமும்
இட்டபணியை இதமுடன் செய்வதே
திட்டமிட்டு அரண்மனை துறந்த
கட்டழகு புத்தர்க்குக் காணிக்கையாகும்!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

பணம்கொட்டினால்
திருப்பதி உண்டியல் நிரம்பிவிடுகிறது
ஆனால்
ஆசையின் உண்டியல் நிரம்புவதே இல்லை

ஜீவ நதிகளும்
ஜீவ சமாதியாகிறது
வயது கடந்தாலும்
வற்றுவதே இல்லை
காமநதி
பதவி பறிக்கப்
பாவ ஏணியில்
ஏறுவதை யாரும் நிறுத்துவதே இல்லை
ஆயிரம் துயர்கள் வரும் எனினும்
யாரும் விடத் தயாரில்லை
ஆசையை
கல்லாப் பெட்டியின் மீது
புத்தர் பொம்மை
புன்னகையைக் காணவில்லை

- -கோ. மன்றவாணன்

**

இல்லறம் கண்டு
துறவறம் பூண்டு
நல்லறம் கொண்டு
வாழ்ந்த புத்தனின் சிரிப்பு,அது
உதட்டின் சிரிப்பல்ல!
உள்ளத்தின் சிரிப்பு!
காரணம்
ஆசைகளை விட்டு விட்டு
மன ஓசைகள் யாவையையும் கட்டுக்குள் வைத்து
போதி மரத்தின் அடியில் புத்தரின் சிறப்பு
அதுவே புத்தனின்
மனம்தனில் உண்டான
பலருக்கும் பயனான
பலமான உள்ளங்களை
செம்மைப்படுத்திய
அதனால் அனைவரும்
நன்றாக என்றாக
மாறவைத்த அக்( கா)கோலமே
அனைவரும் தவறாமல் புத்தனை மதிக்கத்தொடங்கிய
"புத்தன் அன்பு உள்ளத்தால்உலகத்தாருக்கு
 தந்திட்ட சிரிப்பு."என்ற அக்கோலம்.
அதுவே மாபெறும் சிறப்பு துவங்கிய பொற்காலம்.
மக்களின் மனமெல்லாம்
பூரிப்பு வந்த அக்காலம்.

- சுப்ரமணியம், களக்காடு

**
மாற்றம் ஒன்றே நிரந்தரம் ...வாழ்வில் 
மற்றவை  நிரந்தரம் அல்ல ! 
விதை விதைத்தவன் திணை அறுப்பான் 
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
அன்றே சொன்னார் புத்தர் ! இன்னும் 
அதன் அர்த்தம் தெரியவில்லையே  நமக்கு !
மோனோலிசாவின்  புன்னகை பார்க்க 
ஓடும் நமக்கு புத்தர் ஏன் சிரிக்கிறார் 
நம்மைப் பார்த்து என்று இன்னும் 
புரியவில்லையே !
புத்தரின் சிரிப்பு வெறும் புன்சிரிப்பு 
அல்ல ...பொருள் பொதிந்த  பொன் 
சிரிப்பு ! 

- கந்தசாமி நடராஜன் 

**

கடந்து  போவது தானே  
வாழ்க்கை  என உணர்ந்து!
புத்தர் சிலையைப் பார்த்தேன்,
வாழ்க்கை புரிந்து கொண்டாயா 
எனக் கேட்டது புத்தரின் புன்னகை,
தெளிவாகிறேன் தினம் தினம்
கடுகால் உணர்த்திய தத்துவம்
நினைவுக்கு  வர  
அசை போட்டபடி ஆசை கடக்கிறேன்

- ப்ரியா ஸ்ரீதர்

**

எனது விழிநீரில் கலந்துவிட்ட
எத்தனையோ துயர்களை
தூக்கியெறிகிறேன்
அனுபவத்தில் இல்லாத
ஆன்மிகம் சுமையே
எத்தனை பிறவிகள்
எத்தனை பாடுகள்
நித்தியத்தின் சாலைதேடி
நாட்களின் பெரும்தவம்
மின்மினிகளின் வெளிச்சத்தில்
வழிதேடி தொலைகிறேன்
நீள் இரவு விண்மீன்கள்
காட்டுவழிப் பாதை ஆயினும்
இப்பயணம் தொடர்கிறது
பிரபஞ்சத்தின் அணுக்களில்
நிதமும் அலைபாய்கிறேன்
காண்பேன் அப்பேருண்மையை
புத்தனாவது சுலபம்தான்!

- உமா ஷக்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com