ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 6

தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும்

Updated On :6 டிசம்பர் 2016, 6:30 pm

நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்ட புன்
            சடையினானே
அனைத்து உடன் கொண்டு வந்து அங்கு அன்பினால்
             அமைய ஆட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப்
            புணர மாட்டேன்
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனாரே

விளக்கம்

முந்தைய ஐந்து பாடல்களில், வலம்புரம் தலத்தில் இருந்த அடியார்கள் இறைவனைப் போற்றி வணங்கியதை குறிப்பிடும் அப்பர் பிரான், அவ்வாறு இறைவனை வணங்காத மனிதர்களை எண்ணுகின்றார். அத்தகைய அடியார்களின் நிலையை வெளிப்படுத்தும் பாடல் இது. தன்னை சுட்டிக் காட்டி அடுத்தவர்க்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. அதே பாணியை பின்பற்றி, இறைவனை வழிபடாத மனிதனாக தன்னை சித்தரிக்கும் அப்பர் பிரானின் பாடல். புன்சடை = செம்பட்டை நிறத்தில் உள்ள சடை. புணர = பொருந்த. புனைக்கின்றேன் = பெருக்குகின்றேன்.

பொய்ம்மையை பெருக்கி வீணான வாழ்க்கையை நடத்துவதாக அப்பர் பிரான் கூறுவது மணிவாசகரின் திருவாசகப் பாடல் (பிடித்த பத்து பதிகம்) ஒன்றினை நினைவூட்டுகின்றது. அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான்பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும்போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை = பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை. சுருக்கும் = வீணாக்கும். பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயபட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த
                                                          ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
        புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து
                                          அருளுவது இனியே

அடியார்கள் வழிபடுவதைக் கண்ட பின்னரும், தான் அவர்கள் போன்று இறைவனின் வழிபாட்டில் தனது சிந்தனையை செலுத்தாமல் இருக்கும் நிலையை நினைத்து வருந்தும் அப்பர் பிரான், தனது போக்கினை மாற்றவேண்டும் என்று இறைவனின் அருளினை வேண்டுகின்றார். இந்த நிலை, அவனது அருள் இருந்தால் தான் அவனை நாம் வழிபடமுடியும் என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றது.

பொழிப்புரை

செம்பட்டை நிறத்தில் நீண்டு காணப்படும் சடையை உடையவனே, உனது அடியார்கள் உன்னை வழிபடும் முறையைக் கண்ட அடியேன், அவர்கள் செய்த வழிபாட்டினை நினைத்துப் பார்க்கின்றேன். ஆனால் அந்த அடியார்கள் போன்று நீர் விருப்பமுடன் நீராடும் பொருட்களையும் மலர்களையும் திரட்டிக்கொண்டு வந்து அன்புடன் உன்னை வழிபடாமல், பொய்ம்மையை பெருக்கி வாழும் நான், மெய்ப்பொருளாகிய உன்னுடன் இணையாமல் இருக்கின்றேன். இவ்வாறு வீணாக பொழுதினைக் கழிக்கும் அடியேன், மெய்ப்பொருளினை புரிந்துகொண்டு, பொய்யான உலக வாழ்க்கையின் உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு, எனது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்ளும் வழி அறியாமல் திகைக்கின்றேன். இறைவனே நீர்தான் அருள் செய்து என்னை நல்வழியில் புகுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.