பாடல் 9
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
அங்கண் ஞாலமது ஆகிய வீரட்டம்
கங்குலாக என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

அதிகை வீரட்டத்து வீரச் செயலினை பல பாடல்களில் உணர்த்தும் அப்பர் பிரானுக்கு, மற்றோர் வீரட்டத் தலமாகிய வழுவூர் நினைவுக்கு வந்தது போலும். வழுவூர்த் தலத்தில் புரிந்த வீரச் செயலினையும், யானையை உரித்து போர்த்துக்கொண்ட வீரச் செயலை, இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கங்குலாக = இருளினால் மறைக்கப்பட்ட இரவுப் பொழுது. செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால். இந்த பாடலில் அப்பர் பிரான் திருமாலை இடபமாகக் கொண்டு அதன் மீது ஏறிய செய்தியை குறிப்பிடுகின்றார். இந்த நிகழ்ச்சி முப்புரங்களுடன் சிவபெருமான் போர் தொடுத்துச் சென்றபோது நடைபெற்ற நிகழ்ச்சியாகும். பல தேவாரப் பாடல்களில் திருமாலை, பெருமான் வாகனமாக ஏற்ற செய்தி குறிப்பிடப்படுகின்றது. திருவாசகம் திருச்சாழல் பதிகத்தில், மணிவாசகப் பெருமான், திருமால் விடையாக மாறிய நிகழ்ச்சியை குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். யானை தேர் குதிரை ஆகியவற்றை வாகனமாகக் கொள்ளாமல் ஏன் எருதினை வாகனமாக ஏற்றான் என்ற கேள்விக்கு விடையாக, திருமால் ஒரு சமயத்தில் இறைவனை விடை உருவில் தாங்கிய வரலாற்றை நினைவூட்டும் வண்ணம் எருதினை வாகனமாகக் கொண்டுள்ளான் என்று இங்கே கூறப்படுகின்றது.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாமே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பேடீ
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ

சிவபெருமான் முப்புரத்து அரக்கர்களுடன் போர் புரியச் சென்ற போது, தேவர்கள் அனைவரும் அந்த சண்டையில், சிவபெருமானுக்கு உதவியாக பங்கேற்க விரும்பினார்கள். முப்புரத்து அரக்கர்களுடன் நடந்த யுத்தம், மிகவும் விரிவாக கந்தபுராணம் ததீசிக் காண்டத்தில் கூறப்படுகின்றது. மேருமலை வில்லாகவும், வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், அக்னி வாயு திருமால் ஆகிய மூவரும் அம்பின் முனை, இறகுகள் மற்றும் தண்டாகவும் இருக்க, பெருமான் அமருவதற்காக தயாரிக்கப்பட்ட தேரினில் பூட்டப்பட்ட குதிரைகளாக நான்கு வேதங்களும், பிரமன் தேர்ப்பாகனாகவும் பங்கேற்றனர். விந்திய மலையை தேரின் அச்சாகவும், பூமியை தேர்த் தட்டாகவும், ஆகாயத்தை தேரின் கூரையாகவும், சந்திர சூரியர்கள் தேரின் சக்கரங்களாகவும் அமைக்கப்பட்ட அந்த தேரினை, தேவர்கள் அனைவரும் சூழ்ந்து சிவபெருமானை தேரினில் ஏறி அமருமாறு வேண்டினார்கள். அப்போது அவர்களின் மனதினில், தாங்கள் சிவபெருமானுக்கு உதவி செய்கின்றோம் என்ற எண்ணம் மிகுந்தது. இதனை உணர்ந்த சிவபெருமான், எவருடைய உதவியும் இல்லாமல், திரிபுரத்து அரக்கர்களை வெல்லும் வல்லமை தனக்கு உண்டு என்பதை அனைவருக்கு அறிவிக்கத் திருவுள்ளம் கொண்டார். அப்போது அவர் தேர்த் தட்டினில் தனது காலை எடுத்து வைக்க, அவரது பாரம் தாளாமல், தேரின் அச்சு முறிந்தது. இந்த செய்தியை மணிவாசகர் திருவுந்தியார் பதிகத்தில் கூறுகின்றார். அந்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தைத்து என்ற சொல்லின் திரிபே தச்சு என்பது. பல பாகங்களை ஒன்று சேர்த்து அழகுபடுத்தி இணைத்தல் என்று பொருள். பல விதங்களில் தேவர்கள் பங்கேற்ற பகுதிகள் கொண்ட தேர் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது. தேரின் அச்சு முறிந்த உடன் அருகில் இருந்த திருமால், இடபமாக மாறி, சிவபெருமானைத் தாங்க, சிவபெருமான் தனது சிரிப்பினால் முப்புரங்களையும் எரித்து அழித்தார் என்பது புராணம். தேரின் அச்சு முறிந்ததால் திரிபுரத்தை வெற்றி கொள்வது தடைப்படவில்லை என்பதை, நயமாக, அழிந்தன முப்புரம் என்று சுருங்கச் சொல்லும் நேர்த்தியையும் நாம் இங்கே காணலாம்.

தச்சு விடுத்தலும் தாம் அடி இட்டலும்
அச்சு முறிந்தது என்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீப்பற

பெருமான், தனது கையில் இருந்த வில்லினையும் அம்பினையும் பயன்படுத்தவில்லை என்ற செய்தியும் திருவுந்தியார் பதிகத்தில் காணப்படுகின்றது. திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழிப்பதற்கு ஒரு அம்பே போதுமானது என்பதால் மற்றொரு அம்பினை இறைவன் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்தும் வகையில், ஈரம்பு கண்டிலம், ஏகம்பர் தமது கையில் ஓரம்பே இருந்தது என்று கூறும் மணிவாசகர், அந்த ஒரு அம்பும் மிகையாக மாறியது; தேவையற்றுப் போனது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற

வானோர்கள் சிவபெருமானுக்கு உதவியாக, தேரின் பல பாகங்களாக செயல்பட்டமை பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.11.6) பாடல் ஒன்றினில் ஞானசம்பந்தர் இந்த செய்தியை கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். வானோர் எல்லாம் ஒரு தேராய் என்று வானோர்களும் மற்றோரும் தேரின் பல பாகங்களாக செயல்பட்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அயன் மறை பூட்டி நிற்ப = பிரமன் தேர்ப் பாகனாக நான்கு வேதங்களையும் குதிரைகளாக தேரினில் பூட்டி நிற்க, வல் வாய் = அம்பின் வலிமையான முனைப் பகுதி. எரி = அக்னி. ஈர்க்கு = இறக்கைகள். கோல் = அம்பின் தண்டுப் பகுதி. கல் = மேரு மலை.

கல்லால் நிழற்கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல் வாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம்மிழலையே

ஒளிவளர் விளக்கே என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் பத்தாவது பாடலில் திருமாளிகைத் தேவர், திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்ற போது, வேதங்கள் குதிரைகளாக இருந்த தன்மையை குறிப்பிடுகின்றார். மறைகள் குதிரைகளாக இருந்த காரணத்தால் இந்தப் பாடலில், வைதிகத் தேர் என கூறும் பாங்கு நோக்கத்தக்கது. இரணியன் என்ற சொல்லுக்கு வடமொழியில் பொன்னிறம் படைத்தோன் என்று பொருள். இரணியன் என்ற சொல் அதே பொருள்படும்படி கனகன் என்று மிக அழகாக மாற்றப்பட்டுள்ளது.

மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருளார்
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிகத் தேர் ஏறிய ஏறு சேவகனே
அடங்க வல் அரக்கன் அருள் திரு வரைக் கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே

அப்பர் பிரானும் சிவபிரானை, ஆனைக்கா மீது அருளிய, ‘முன்னானைத் தோல் போர்த்த’ எனத் தொடங்கும் பதிகத்தின் (6.63) ஒரு பாடலில், தெய்வ நான் மறைகள் பூண்ட தேரான் என்று குறிப்பிடுகின்றார். எல்லாப் பொருள்களுக்கும் சிவபிரான் பற்றுக்கோடாய் இருக்கும் காரணத்தால், சிவபிரான் இல்லாமல் வேறு எந்தப் பொருளும் இல்லாத நிலையை உணர்த்தும் முகமாக, ‘தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா’ என்ற தொடரை அப்பர் பிரான் கையாண்டுள்ளார்.

கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னைக் காதில் வெண் குழையானைக் கமழ் பூங்கொன்றைத்
தாரானைப் புலி அதளின் ஆடையானைத் தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை மணி ஆர மார்பினானைப் பிஞ்ஞகனைத் தெய்வ நான் மறைகள் பூண்ட
தேரானைத் திரு ஆனைக்கா உளானைச் செழு நீர்த் திரளைச் சென்று ஆடினேனே

பொழிப்புரை

சிவந்த கண்களை உடைய திருமால், திருபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்றபோது, தேரின் அச்சு முறியவே, இடபமாக மாற, அவரைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனும், பசிய கண்களை உடைய மதயானை தன்னைத் தாக்க வந்தபோது, அதனைக் கொன்ற பின்னர், உதிரம் ஒழுகும் தன்மையால் ஈரப்பசை மாறாதிருந்த அதன் தோலினைத் தனது உடலில் போர்த்தவனும், அழகிய உலகம் எங்கும் பரவியிருப்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் திருவதிகை வீரட்டம். இந்த திருக்கோயிலுக்குச் சென்று அங்குள்ள இறைவனைக் காணாவிடில் எனது கண்கள் துயில் கொள்ளாது. எனவே நான் பலமுறையும் அங்கே சென்று, அவரது திருக்கோலத்தை எனது கண்கள் குளிர காண்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு