(கழிப்பாலை - பண்: காந்தாரம்)
முன்னுரை
தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் பிரான் அருகில் இருந்த வேட்களம், கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார். கழிப்பாலையில் பல பதிகங்கள் அருளியதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். நமக்கு தற்போது கிடைத்துள்ள அப்பர் பிரானின் பதிகங்கள் நான்கு.
சிவபிரான் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் நிலை கண்டு அவளது அன்னை கூறும் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தனது தலைவன் தன்னுடன் வந்து இணையாததால் மனவருத்தம் அடையும் அப்பர் நாயகி, உடல் மெலிகின்றாள். இதனைக் கண்ட அவளது அன்னை, தனது மகளின் உடல் மெலிவுக்குக் காரணம் ஆய்ந்து அறியும்பொருட்டு, மகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கின்றாள். தனது மகள் எப்போதும் சிவபிரானின் நினைவாகவே, அவனது உருவ அடையாளங்களைச் சொல்லி பிதற்றுவதை உணர்ந்த தாய், அந்த அடையாளங்களைக் கொண்டு தனது மகள், கழிப்பாலையில் உறையும் சிவபிரானைக் கண்டு காதல் கொண்டுள்ளாள் என்ற முடிவுக்கு வருகின்றாள். இதனை விவரிக்கும்விதமாக, அனைத்துப் பாடல்களும் அமைந்து ஒரு அகத்துறைப் பதிகமாக அமைந்துள்ளது.
பாடல் 1
வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்
சினபவள திண்தோள் மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின்றாளால்
அனபவள மேகலையொடு அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றாளால்
கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

கன பவளம் = பெரிய பவளம். தானவன் = தேவர்களுள் ஒருவனாக கருதப்படாமல், தனியாக நிற்கும் ஒப்பற்ற தலைவன், சிவபெருமான். எனவே வானவர்களில் ஒருவனாக அவரை எண்ணுதல் தகாது, அவர் மற்றைய தேவர்களிளிருந்து மாறுபட்டவர் என்று இங்கே அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். தக்கனது பதவிக்கு அஞ்சி, சிவபிரானை புறக்கணித்து அவன் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெறுவது தவறு என்று தெரிந்தும், அதனைத் தவிர்க்க முடியாமல், அவனது யாகத்திற்குச் சென்ற தேவர்கள், பாற்கடலில் நஞ்சு திரண்டு எழுந்த போது, தங்களை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது தெரியாமல், மிகுந்த பயம் கொண்டு சிவபிரானிடம் முறையிட்டனர். அடுத்தவரின் பதவியை நினைத்து அவர்க்கு பயப்படுவதும், தங்களை காப்பாற்ற வேறொருவர் தேவைப்படும் நிலையில் இருப்பதும் தெய்வத்தின் குணங்கள் அல்லவே: இந்த இரண்டு நிகழ்ச்சிகளே, தேவர்களும், உலகில் உள்ள மற்ற உயிர் வகைகளில் ஒருவர் என்பதை புலப்படுத்துகின்றது. உண்மை நிலை இவ்வாறு இருந்தாலும், இதனை மறந்து, மூவரில் ஒருவராக சிவபிரானை நினைத்து, அவரைப் போன்று தாங்களும் தேவர்கள் என்று சொல்லித் திரிவது எத்தைகைய பாவம் என்று மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தில் கூறுகின்றார். தகர் = ஆடு. தகர் தின்று = வேள்வியில் பலியாக இடப்பட்ட ஆட்டினை அவிர்பாகமாக ஏற்றல். பண்டைய நாட்களில் வேள்வியில் ஆட்டினை பலியாக கொடுத்தல் வழக்கமாக இருந்தது தெரியவருகின்றது.

சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண் மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமானை அப்பாலைக்கு அப்பாலன் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கிவிடுகின்றன. அவ்வாறு தன்னிடம் ஒடுங்கியுள்ள உயிர்கள், தங்களது ஆணவ மலத்தினை நீக்கிக்கொண்டு உய்யும்பொருட்டு சிவபிரான் மறுபடியும் ஐந்தொழில்கள் ஆற்ற முனைகின்றான். இந்த ஐந்து தொழில்களை ஆற்றுவதற்கு இடமாக உள்ள இடம் சுத்த மாயா பிரபஞ்சம் அல்லது சுத்த மாயா புவனம் எனப்படுகின்றது. இதனைத்தான் அப்பர் பிரான் இங்கே பிரளயத்திற்கு அப்பாலோர் அண்டம் என்று நின்ற திருத்தாண்டகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த புவனத்தில் உள்ள தத்துவங்கள், சுத்த தத்துவங்கள் என்று அழைக்கப்படும். சிவம், சத்தி, சதாசிவம், ஈசுவரம், சுத்தவித்தை என்பவை இங்குள்ள தத்துவங்கள் ஆகும். பிரளயத்திற்கு அப்பால் உள்ள சுத்த மாயா புவனத்தில் இருந்துகொண்டு, தான் நினைத்த மாத்திரத்தில் உலகங்களை எல்லாம் மீண்டும் படைத்து, உயிர்களை அவைகளின் வினைகளுக்கு ஏற்றவாறு உடல்களுடன் பொருத்தும் சிவபெருமான் என்பதால் அப்பாலைக்கு அப்பாலன் என்று இங்கே கூறுகின்றார். நின்ற திருத்தாண்டகத்தின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மண்ணாகி விண்ணாகி மலையுமாகி வயிரமுமாய் மாணிக்கம் தானேயாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக் கலையாகிக் கலைஞானம் தானேயாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப் பிரளயத்துக்கு அப்பாலோர் அண்டமாகி
எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே

இவ்வாறு அண்டங்களுக்கு அப்பாலிருக்கும் சிவபிரானின் தன்மை, அப்பாலன் என்றும் அப்பாலைக்கு அப்பாலன் என்றும் பல பதிகங்களில் அப்பர் பிரானால் குறிப்பிடப்படுகின்றது. பாதித்தன் திருவுருவில் என்று தொடங்கும் ஒரு ஆரூர் பதிகத்தின் (6.26.4) பாடலில் அப்பர் பிரான், சிவபெருமானை அப்பாலைக்கு அப்பாலான் என்று குறிப்பிடுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். வைப்பான் = படைப்பான்.

மெய்ப்பால் வெண்ணீறணிந்த மேனியானை வெண்பளிங்கினுள் பதித்த சோதியானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை உத்தமனை நித்திலத்தை
உலகமெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை

எனது மகள், தனது பவளம் போன்று அழகிய உதடுகளைக் கொண்ட வாயினால் சொல்லும் சொற்களை நான் கூறுகிறேன். நீங்கள் கேட்பீர்களாக, தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாக விளங்குபவன் என்றும், சினம் கொள்ளும் சமயத்தில் சிவந்து பவளம் போன்று காட்சி அளிக்கும் திண்ணிய தோள்களின் மேல் சேர்ந்து விளங்கும் வெண்மையான திருநீறு அணிந்தவனே என்றும், அன்னம் போன்ற நடையினையும் பவளங்களின் நிறம் கொண்ட மேகலையை உடையாக அணிந்த உமையம்மையுடன் அண்டங்களையும் கடந்த இடத்தில் உறைபவனே என்றும், எனது மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டே இருக்கின்றாள். பெரிய அளவிலான பவளங்களைக் கரையில் கடல் சேர்க்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு