/

24. கருநட்ட கண்டனை - பாடல் 10

சிவபிரானின் நடனத்து அழகினை விவரிக்கும் இந்த பதிகத்தின் கடைசிப் பாடலில் நம்மை ஆட்கொண்ட பாதம் என்று சிவபிரானது

Updated On :9 மே 2016, 1:03 pm

பாடல் 10

சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே


விளக்கம்

சாடுதல் = கொலை செய்தல். வீடல் = உயிர்விடச் செய்தல்.

சிவபிரானின் நடனத்து அழகினை விவரிக்கும் இந்த பதிகத்தின் கடைசிப் பாடலில் நம்மை ஆட்கொண்ட பாதம் என்று சிவபிரானது பாதத்தினை குறிப்பிடும் அப்பர் பிரான், அவன் திருவடி தான் நாம் சரணடைவதற்கு ஏற்ற இடம் என்பதை சொல்லாமல் சொல்லும் அழகினை நாம் உணரலாம். பாளையுடைக் கமுகு ஓங்கி என்று தொடங்கும் தில்லைப் பதிகத்தின் பாடல்களில் சிவபெருமானின் பல அங்கங்களை குறிப்பிடும் அப்பர் பிரான் கடைப் பாடலில், அவனது பாதத்தின் திருவிரலை குறிப்பிடுவது போல் இந்த பதிகத்தின் கடைப் பாடலில் சிவபிரானின் திருப்பாதத்தினை குறிப்பிட்டுத் நாம் அடைக்கலம் புக வேண்டிய இடம் என்ன என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.

தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையால்
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள் கோன் சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பதென்னே

பொழிப்புரை

தக்கனது யாகத்தில் பங்கேற்ற சந்திரனை தண்டிக்க எடுத்தது சிவபிரானின் பாதம் தான். மார்க்கண்டேயரின் உயிரினைக் காக்கும் பொருட்டு எடுத்தும், பிரமனும் திருமாலும் தேடிக் காண முடியாதபடி எடுத்ததும் சிவபிரானின் பாதம்தான். அத்தகைய அரிய, பெருமை வாய்ந்த சிவபிரானின் பாதம் தில்லை சிற்றம்பலத்தில் எடுத்த பாதமாகத் திகழ்ந்து நம்மை ஆட்கொள்கின்றது.

முடிவுரை

நமது நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களோ நமது இல்லத்திற்கு வந்தால் அல்லது அவர்களை நாம் இருக்கும் இடத்தில் சந்திக்க நேர்ந்தால் நாம் அவர்களை நோக்கி கேட்கும் முதல் கேள்வி என்று வந்தாய் என்பதுதானே. தில்லை கோயிலில் நுழைந்த தன்னிடம் சிவபிரான் அவ்வாறு கேட்பதாக உணர்ந்த அப்பர் பிரான், தான் அப்போதுதான் வந்தேன் என்று தனது பதிலை பத்தனாய் பாடமாட்டேன் என்ற பாடலில் பதிவு செய்கின்றார்.

அப்பர் பிரான் தனது பெரும்பாலான பதிகங்களில் இராவணனின் கயிலை நிகழ்ச்சியை குறிப்பிடுவது வழக்கம். தன்னிடம் இறைவன் நேரில் பேசுவது போன்ற உணர்வை அடைந்த அப்பர் பிரான் அந்த மகிழ்ச்சியில் தனது பாணியில் இருந்து வழுவிவிட்டார் போலும். இந்த பதிகத்தின் கடைப் பாடலில் இராவணன் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.