கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லினால் சோறு உணாமே நீள்விசும்பு ஆளவைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே
விளக்கம்
எல்லி = மகா சங்காரத்தின் நேரத்தில் இருக்கும் இருண்ட நிலைழ; இரவு. சல்லி = கற்கள். கஞ்சி தாமுணும் = புத்தர்கள் கஞ்சி உட்கொள்ளும் பழக்கம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சோறுணாமே = உட்கொள்ள இருந்த, உணவினை விட்டுவிட்டு வந்தவர், சிவபெருமானின் காட்சி கிடைக்கபெற்று முக்தி பெற்றமையால், மறுபடியும் இல்லத்திற்குச் சென்று உணவு உட்கொள்ளவில்லை. இதனை உணர்த்தும்முகமாக சோறு உணாமே என்று குறிப்பிடுகின்றார்.
குறுக்கை வீரட்டனாரைப் புகழும் அப்பர் பிரானுக்கு அதிகை வீரட்டானாரின் நினைவு வந்தது போலும். சூலை நோய் தன்னை வருந்தியபோது, கூற்றாயினாவாறு என்று தொடங்கும் பதிகத்தினை கொல்லிப் பண்ணில் பாடிய தனக்கு அருள்புரிந்த பின்னர், சொல்வளம் நிறைந்த பாடலை பாடிய திருநாவுக்கரசே எழுந்திரு, உனது பெயர் ஏழு உலகங்களிலும் நிலை பெற்று விளங்கும் என்று அழைத்த சிவபிரான், தனது பாடலை விருப்பமுடன் கேட்டு மகிழ்ந்த செயல் நினைவுக்கு வரவே, கொல்லியாம் பண் உகந்தார் என்று இங்கே கூறுகின்றார். நேரிசைப் பதிகங்களை கொல்லி பண்ணில் பாடுவதும் உண்டு.
இந்த பாடலில் சாக்கிய நாயனரைப் பற்றிய குறிப்பு வருகின்றது. இதுவும் பெரிய புராணத்தில் கூறப்படும் நிகழ்ச்சி. தொண்டை நாட்டில் காஞ்சிக்கு அடுத்த சங்கமங்கை என்ற தலத்தில் அவதரித்த சாக்கியர், மெய்ப்பொருளை உணரும் வண்ணம் காஞ்சி அடைந்தார். அங்கே புத்தசமயத்தைச் சார்ந்து, புத்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். புத்த நூல்களில் காணப்பட்ட முடிவுகளை ஆராய்ந்த அவர், அந்த கொள்கைகள் மெய்ப்பொருளை உணர்த்தவில்லை என்ற முடிவுக்கு வந்தார். மேலும் சைவ சமயத்தின் கொள்கைகளுக்கு உள்ள சிறப்புத் தன்மை மற்ற சமயக் கொள்கைகளில் இல்லை என்ற முடிவுக்கு வந்தார். புத்த கோலத்தை விட்டு நீங்காதவராக இருந்தமையால், சிவலிங்கத்தைக் கண்டபோது, கல்லினையே மலராகக் கருதி லிங்கத்தின் மீது தினமும் எறிந்து வந்தார். ஒரு நாள் உணவு உட்கொள்ள இருந்தபோது, அன்று சிவபிரானை கல்லால் பூசிக்கவில்லை என்பதை உணர்ந்த அவர், உணவினை விட்டுவிட்டு மிகவும் அவசரமாக வெளியே வந்து லிங்கத்தின் மீது ஒரு கல்லினை வழக்கம்போல் எறிந்தார். அப்போது சிவபெருமான் இடபத்தின் மீது உமையம்மையுடன் அமர்ந்தவாறு வானில் தோன்றி காட்சி கொடுத்தார். பின்னர் சிவலோகத்தில் அவருக்கு இடமும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சி பெரியபுராணத்தில் மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது.
கொண்டதொரு கல்லெடுத்துக் குறி கூடும் வகை எறிய
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையொடும்
கண்டருளும் கண் நுதலார் கருணை பொழி திருநோக்கால்
தொண்டர் எதிர் நெடு விசும்பில் துணைவியொடும் தோன்றுவார்
சாக்கிய நாயனார் இட்ட கற்களை புதிய மலர்களாக சிவபிரான் ஏற்றுக் கொண்டார் என்று, அப்பர் பிரான் வீழிமிழலைப் பதிகத்தில் (6.52.8) கூறுகின்றார். இருப்புமனம் = இரும்பு மனம். வினையர் = வினைகளால் கட்டுண்டவர்.
மெய்த்தவன் காண் மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பிலா இருப்புமன வினையர்க்கு என்றும் பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண் உய்த்தவன் காண் உயர்கதிக்கே உள்கினாரை உலகனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும் வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண்ணிழி தண்வீழி மிழலையானே உண்மையான தவத்தில் ஈடுபட்டிருக்கும் அன்பர்களுக்கு உண்மையாக இருக்கும் சிவபிரான், தன்னை வழிபடாமல் இரும்பு போன்று கல் மனத்துடன் இருப்போர்க்கு, தனது இருப்பினைப் புலப்படுத்தாது மறைந்து நிற்பான். தான் உணவு உட்கொளும் முன்னர் தினமும் கல் எறிந்து வழிபட்டதுபோல் அன்றைய தினம் வழிபடாததை நினைத்த, சாக்கிய நாயனார் உடனே ஓடிச் சென்று எறிந்த கல்லினை புது மலர்களாக ஏற்றுக்கொண்டவன் சிவபெருமான். தன்னை தியானிப்பவர்களுக்கு உயர்கதி அளித்து உய்யச் செய்யும் அவன் உலகங்களை ஊழிக்காலத்தில் ஒடுக்கி, பின்னர் தோற்றுவிப்பவன் ஆவான்; அத்தகைய சிவபிரானை ஞானிகள் விரும்பி வழிபடுகின்றனர் என்று அப்பர் பிரான் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார்.
பொழிப்புரை
கஞ்சி உண்ணும் பழக்கம் கொண்டவராக இருந்த புத்த மதத்தைச் சார்ந்த சாக்கிய நாயனார், உணவு உட்கொள்ளும் முன்னர் சிவபிரானை கல் எறிந்து வழிபடுவதை ஒருநாள் மறந்ததை நினைத்து, உணவு உட்கொள்வதை விடுத்து மறவாது கல் எறிந்தபோது அவருக்கு காட்சி அளித்து பின்னர் முக்தியையும் அளித்தவர் சிவபிரான். சாக்கியருக்கு முக்தி உடனே கிடைத்தமையால் அவர் மறுபடியும் தனது இருப்பிடம் சென்று உணவு உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; இத்தகைய கருணை உள்ளம் கொண்ட சிவபிரான், ஊழிக்காலத்தில், உள்ளங்கையில் தீயினை ஏந்திய வண்ணம் அழகிய நடனம் ஆடுகின்றார். இவ்வாறு வல்லமையும் பெற்று கருணை உள்ளத்துடன் திகழும் குறுக்கை வீரட்டனார், கொல்லிப் பண்ணில் நான் பாடிய கூற்றாயினவாறு என்று தொடங்கும் பாடலை மிகவும் உகந்து ஏற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

