புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா
வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே
விளக்கம்
மாலியவான் புஷ்பதத்தன் என்ற இருவரும் சிவபிரானுக்கு கயிலை மலையில் சேவை செய்து கொண்டு இருந்தவர்கள். இருவரும் சிவபிரானுக்கு பக்தியுடன் சேவை செய்து கொண்டு இருந்த போதும் அவர்களுக்குள் எப்போதும் ஒரு போட்டி, இருவரில் பக்தியில் மிஞ்சியவர் யார் என்ற போட்டி இருந்து வந்தது. இந்த போட்டியால் அவர்களிடம் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருந்தது. ஒரு நாள் சண்டையில், ஒருவரை ஒருவர், சிலந்தியாக பிறக்குமாறும் யானையாக பிறக்குமாறும் சாபம் இட்டனர்.
ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக்கொண்ட இருவரும் சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்து ஆனைக்கா வந்து அடைந்தனர். சென்ற பிறவியில் சிவபிரான் மீது அவர்களுக்கு இருந்த பக்தி இந்த பிறவியிலும் தொடரவே யானையும் சிலந்தியும் சிவனைத் தொழ ஆரம்பித்தன. யானை தினமும் தனது தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து இறைவனை நீராட்டி வழிபட்டு வந்தது. நாவல் மரத்தின் கீழ் இருந்த லிங்கத்தின் மீது மரத்திலிருந்து உதிரும் பழுத்த இலைகளும் குப்பைகளும் இறைவனின் மேனியின் மீது விழாத வண்ணம் தனது வாயினால் ஒரு பந்தல் போன்ற அமைப்பு அமைத்து சிலந்தி வழிபட்டு வந்தது. சிலந்தியின் எச்சிலால் பின்னப்பட்ட வலை லிங்கத்தின் அருகில் இருப்பது, இறைவனுக்கு செய்யும் அபசாரம் என கருதிய யானை, அந்த வலையை கலைத்தது. தான் பக்தியுடன் அமைத்த வலையை கலைத்த யானையின் மீது பகை கொண்ட சிலந்தி யானையுடன் சண்டை இடத் தொடங்கியது. சிலந்தி யானையின் தும்பிக்கையில் புகுந்து கடிக்க, வலி தாள முடியாமல் யானை தும்பிக்கையால் தரையில் ஓங்கி அடிக்க, யானையும் சிலந்தியும் அந்த இடத்திலே ஒன்றாக மடிந்தன. இருவரின் பக்தியை மெச்சிய சிவபிரான் யானைக்கு முக்தி அளித்து சிலந்தியை அடுத்த பிறவியில் அரசனாக பிறக்கச் செய்தார். இது தான் திருவானைக்காவின் தல வரலாறு. இந்த வரலாறு அழகாக பெரிய புராணத்தில் கூறப்படுகின்றது.
எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமையான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உருத்து எழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்ததால்
தரையில் புடைப்பக் கை புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும்
வரம் கொடுத்து
முறையில் சிலம்பி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள
நிலத்தின் கண்
யானையாக பூஜை செய்து வழிபட்ட புஷ்பதத்தன் முக்தி பெற்று சிவகணமாக மாறினான். கோயில் கட்டி (பந்தர் அமைத்து வழிபட்ட சிலந்தி) வழிபட நினைத்த மாலியவான், தனது எண்ணம் நிறைவேறாத காரணத்தால் மறுபிறப்பில் மன்னனாக பிறந்து எழுபது கோயில்கள் கட்டி தனது ஆசை நிறைவேறிய பின்னர் முக்தி பெற்று சிவகணமாக மாறினான் என்பர். கோச்செங்கட் சோழன் மூன்றாம் நூற்றாண்டில் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டான். இந்த நிகழ்ச்சி பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடும் அப்பர் பிரான், தினமும் காலை நேரத்தில் பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், சிலந்தியாக இருந்ததால் அவ்வாறு செய்ய முடியாமைக்கு வருந்தி, இறைவனை வலம் வந்து பந்தல் அமைத்ததாக கூறுகின்றார். சிலந்தியின் இயலாமையை குறிப்பிடும் முகமாக, அப்பர் பிரான், மனிதர்களாக பிறவியெடுத்த நாம் அனைவரும் தினமும் பூவும் நீரும் கொண்டு சிவபெருமானை வழிபடவேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.
நனிபள்ளி தலத்தை குறிப்பிடும் அப்பர் பிரான், சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி என்று கூறுகின்றார். பொதுவாக தலங்களின் இயற்கை அழகினை அப்பர் பிரான் தனது பாடல்களில் குறிப்பிடுவதில்லை. ஆனால் நனிபள்ளியின் இயற்கை அழகு, மற்ற தலங்களிலிருந்து வேறுபட்டது. பாலையாக இருந்த நிலம் சம்பந்தர் தேவாரத்தால், சோலையாக மாறியது. எனவே அந்த நிகழ்ச்சியை உணர்த்தும் வண்ணம், சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் போலும்.
பொழிப்புரை
தினமும் காலைப்பொழுது புலர்ந்த நேரத்தில், பூவும் நீரும் கொண்டு, சிவபெருமானை வழிபட முடியாத சிலந்தி, பெருமானை வலம் செய்து, தனது வாயிலிருந்து வரும் நூலினைக் கொண்டு, வட்டமாக பந்தல் அமைத்து, திருவானைக்கா தலத்தில் உள்ள பெருமானின் மீது இலைச் சருகுகளும் குப்பைகளும் விழாமல் பாதுகாத்தது. இவ்வாறு தொண்டு புரிந்த சிலந்தியை, அடுத்த பிறவியில், சோழ அரசனாக பிறக்க வைத்து அருள் புரிந்தவர், சிவபெருமான். இவர் வளமான சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி தலத்தில் உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

