வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறு நான்கும் இறப்
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே
விளக்கம்
அஞ்சும் அஞ்சும் ஆறும் நான்கும் = இருபது கைகளும். ஆயிழை = ஆராய்ந்து தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த பார்வதி தேவி. பஞ்சினைப் போன்ற மெல்லிய விரலால் அரக்கனை அடர்த்தார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பெருமான் அதிகமாக அழுத்தம் கொடுக்கவில்லை என்று உணர்த்தும் அப்பர் பிரான், அவ்வாறு அதிகமாக அழுத்தம் கொடுத்து அரக்கனை அடர்த்திருந்தால் அரக்கனின் நிலை வேறாக இருந்திருக்கும் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும் நயம் போற்றத் தக்கது. பெருமான் வீற்றிருக்கும் திருமலை என்றும் கருதாமல், அதனை பேர்த்தெடுக்கத் துணிந்த வஞ்சனையான செயல் என்று அப்பர் பிரானால் கருதப்படுகின்றது.
கயிலாயம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் (4.47) அனைத்துப் பாடல்களிலும், பெருமான், தனது கால் பெருவிரலை அழுந்தி ஊன்றியிருந்தால் அரக்கன் கண் விழித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கன்றி = மிகுந்த கோபம் கொண்டு, தனது விமானம் சென்ற வழியில் கயிலை மலை குறுக்கிட்டது என்று அரக்கன் கருதியதால் மிகுந்த கோபம் கொண்டான். வென்றித் தன் கைத்தலம் = பல வெற்றிகள் கண்ட தனது கைகளால். வெருவுதல் = அச்சம் அடைதல். நக்கு = சிரித்து. மன்றித் தான் = அரக்கனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன். மறித்து நோக்கில்லை = மறுபடியும் அரக்கனைக் காணும் வாய்ப்பே எவருக்கும் இருந்திராது. இறைவன் சிரித்ததாக அப்பர் பெருமான் இங்கே கூறுகின்றார். இறைவன் சிரித்ததன் காரணம் யாது என்று அப்பர் பிரான் கூறவில்லை எனினும், நாம் ஊகிக்கலாம். அன்னை அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி நகைத்ததாகவும், அரக்கனின் முயற்சி வீணான முயற்சி என்று கருதி நகைத்ததாகவும் நாம் கொள்ளலாம்.
கன்றித் தன் கண் சிவந்து கயிலை நன் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத் தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
பொழிப்புரை
வஞ்சக எண்ணத்துடன் அரக்கன் இராவணன் கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, கயிலை மலை அசைவுற்றதால் அன்னை பார்வதி தேவி அச்சம் கொண்டாள். தேவி அச்சம் கொண்டதைக் கண்ணுற்ற பெருமான், ஆயிழையே அஞ்சேல் அஞ்சேல் என்று சொல்லியவாறு, மிகவும் இலேசாக தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்த, அரக்கனின் இருபது கைகளும் தலைகளும் கயிலை மலையின் கீழே இறுக்குண்டன. இவ்வாறு தனது தேவியின் அச்சத்தை தவிர்த்த பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.
முடிவுரை
இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் அன்னியூரனே என்றும் மற்றைய பாடல்கள் அன்னியூரரே என்றும் முடிகின்றன. பொதுவாக அப்பர் பிரானின் பதிகங்களில் அனைத்துப் பாடல்களும் ஒன்றுபோல் முடியும். ஆனால் இந்த பதிகத்தில் உள்ள மாற்றம், இறைவனை குறிப்பிடும்போது பன்மை விகுதி சேர்த்து, இன்பர், அன்பர், செற்றவர், என்ற சொற்களைக் கையாண்டமையால், அன்னியூரன் என்று கூறாமல் அன்னியூரர் என்று அப்பர் பிரான் கூறியுள்ளது அவரது புலமைத் திறத்தினை வெளிப்படுத்துகின்றது.
இந்த தலம் திருக்குறுக்கை வீரட்டம் தலத்திற்கு அருகில் உள்ளது. திருக்குறுக்கை வீரட்டத் தலத்தில், மன்மதன் எரிந்த சம்பவம் நிகழ்ந்தது. தனது கணவனை இழந்த இரதி தேவி, தனது கணவனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு இறைவனை வேண்ட, இறைவனும் அவளது வேண்டுகோளுக்கு இணங்கி, மன்மதனுக்கு மீண்டும் உயிரினை கொடுக்கின்றார். இவ்வாறு பெண்மையை மதித்த இறைவனின் பண்பு இந்த தலத்திற்கு வந்த அப்பர் பிரானுக்கு நினைவில் வந்தது போலும். இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்ற பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.
மேலும் பதிகத்தின் இறுதிப் பாடலில், இராவணன் கயிலை மலையை அசைத்தபோது, அச்சப்பட்ட தேவியின் அச்சத்தை நீக்கும் வகையில் அஞ்சேல் அஞ்சேல் என்று பெருமான் சொல்லியதையும் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். எல்லாம் வல்ல கடவுளாக தான் இருந்தாலும், பெண்மையை மதித்த பெருமானின் செயலை குறிப்பிட்டு, நாம் அனைவரும் அவ்வாறு நடக்க வேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் அறிவுரை, இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. நாமும் அப்பர் பிரான் காட்டிய வழியில் நடந்து பெண்மையை மதித்து போற்றுவோமாக, அவர்கள் அச்சம் கொள்ளும் நேரங்களில் அவர்களது அச்சத்தை அறவே நீக்கும் செயல்களில் ஈடுபடுவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

