மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

83. பெருந்திரு இமவான் - பாடல் 1

அவமானத்திற்கு உட்பட்ட தாட்சாயணி

News image
Updated On :21 டிசம்பர் 2017, 6:30 pm


முன்னுரை:

தன்னை வணங்கித் தொழுத அடியார்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்த செயல்கள் பல இந்த பதிகத்தில் சுவையாகவும் விரிவாகவும் சொல்லப் படுகின்றன. 

பாடல் 1:

பெருந்திரு இமவான் பெற்ற
         பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய
         மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன் பால்
         அங்கொரு பாகமாகத்
திருந்திட வைத்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வனாரே

விளக்கம்:

தனது தந்தை தட்சன், சிவபெருமானை புறக்கணித்து நடத்திய யாகத்திற்குச் சென்ற தாட்சாயணி, அங்கே சிவபெருமான் அவமதிக்கப் படுவதை பொறுக்க முடியாமல் தந்தையிடம் வாதம் செய்தாள். ஆனால் தட்சன் தனது மகள் என்றும் பாராமல் உமையம்மையும் தாழ்த்திப் பேசலானான்; மேலும் சிவபெருமானை, அனைவர் முன்னிலையிலும் மேலும் பழித்தான். இதனால் மிகவும் வருத்தமடைந்த உமையம்மை, தட்சன் தந்த உடலுடன் வாழ்வது தவறு என்று கருதி தனது உடலை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தாள். தனது தந்தையிடம், தான் இனிமேல் தட்சனது மகளாக அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் கூறினாள். பின்னர் தனது உடலையும் மாய்த்துக் கொண்டாள். இவ்வாறு உமையம்மை தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபிரானிடமிருந்து பிரிந்ததைத் தான் பெண்கொடி பிரிந்த பின்னை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆனால் தாட்சாயணி என்று கூறாமல், ஏன் இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். தாட்சாயணி தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர் தான் இமவானின் மகளாகத் தோன்றுகின்றாள்; மேலும் இமவானின் மகளாகிய பார்வதி தேவி. சிவபிரானை திருமணம் செய்து கொண்ட பின்னர், சிவபிரானை விட்டு பிரியவில்லை. தனது தந்தையாகிய தட்சனுக்கும் தனக்கும் தொடர்பு கொண்ட உடல் வேண்டாம் என்று உமையம்மை உடலை நீத்த
பின்னர், தாட்சாயணி என்று உமையம்மையை அழைப்பது தவறு அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், இமவான் பெற்ற பெண்பிள்ளை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

பெருந்திரு என்பதை உமையம்மைக்கு அடைமொழியாகக் கொண்டு, திருமகள் போன்ற அனைத்து பெண் தெய்வங்களிலும் உயர்ந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம்.  

தாட்சாயணியின் உணர்வுகளை மதிக்கும் விதமாக, மணிவாசகரும் தனது திருவுந்தியார் பதிகத்தில், பார்ப்பதி என்று தாட்சாயணியை குறிப்பிடுகின்றார். பார்வதி என்ற பெயர் தான் பார்ப்பதி என்று திரிந்துள்ளது. பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை பார்ப்பது என்னேடி உந்தீ பற பணைமுலை பாகனுக்கு உந்தீ பற பார்வதி தேவி தவம் இருந்ததை அறிந்து, முதியவராக அங்கே சென்று, அவளது தவத்தின் வலிமையை சோதித்து அறிந்து, அவள் விரும்பிய வரமாகிய, அவளை திருமணம் செய்தருளிய சிவபெருமான் என்று சுந்தரர் கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.16) முதல் பாடலில் கூறுகின்றார்.

வேட்டருளி=அக்னிகுண்டம் முன்னர் சடங்குகள் செய்து பின்னர் திருமணம் செய்தல் குரும்பை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள் தன் குணத்தினை நன்கறிந்து விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டருளிச் செய்த விண்ணவர் கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில் அரும்பருகே சுரும்பு அருவ அறுபதம் பண்பாட அணி மயில்கள் நடமாடும்  அணிபொழில் சூழ் அயலின் கரும்பு அருகே கருங்குவளை கண் வளரும் கழனிக் கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூர் காணே யோகத்தில் மூழ்கி இருந்த சிவபெருமானின் தவத்தைக் கலைத்தால் தான், சிவபெருமான் தனது தவத்தை விடுத்து பார்வதி தேவியை மணந்து, பின்னர் அவர்களுக்கு மகனாகத் தோன்றும் சிவபிரானின் அம்சத்தால் சூரபத்மனை அழிக்க முடியும் என்ற நோக்கத்தில், மன்மதன் மூலம் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க தேவர்கள் முயற்சி செய்தனர். தனது தவத்தைக் கலைத்த மன்மதனை விழித்தே அழித்த சிவபெருமான், மன்மதன் விரித்த வலைக்கு பிடிபடாத சிவபெருமான், ஏன் திருமணம் புரிந்துகொண்டார் என்பதற்கு இந்த பதிகத்தில் காரணம் கூறப்படுகின்றது. பார்வதி தேவி கடினமான தவம் மேற்கொண்டு, தனது விருப்பமாகிய சிவபெருமானை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை வெளிப்படுத்தவே, சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் புரிந்தார் என்று விளக்கம் இங்கே அளிக்கப்படுகின்றது இதிலிருந்து சிவபெருமான், உமையம்மை மீது கொண்ட காதலால், காமத்தால், திருமணம் புரியவில்லை; உமையம்மை செய்த தவத்திற்கு இரங்கியே மணம் புரிந்தார் என்பது தெளிவாகின்றது.

உயிர்களுக்கு போகம் அளிக்க வேண்டி சிவபிரான் உமையம்மோடு இருக்கின்றான் என்று மணிவாசகர் தனது திருச்சாழல் பதிகத்தில் கூறுகின்றார். திருச்சாழல் பதிகத்தில் வரும் ஒரு பாடல் இது.

    தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
    பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
    விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

இதே கருத்தினை அப்பர் பெருமானும் திருவீழிமிழலைப் பதிகத்தின் மூன்றாவது பாடலில், நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். உமையம்மையின் தவத்தின் தன்மையை, முதியவராய் சிவபெருமான்,  அளக்கச் சென்ற நிகழ்ச்சியும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

    அன்றாலின் கீழ் இருந்தங்கு அறம் சொன்னானை
             அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட
    நின்றானைக் கிடந்த கடல் நஞ்சு உண்டானை
             நேரிழையைக் கலந்திருந்தே  புலன்கள் ஐந்தும்
    வென்றானை மீயச்சூர் மேவினானை
             மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்றுச்
    சென்றானைத் திருவீழிமிழலையானைச்
             சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் கருவூர்த் தேவர், சிவபெருமானை, மங்கையோடு இருந்தே யோகு செய்வான் என்று குறிப்பிடுகின்றார்.

    மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்கள் முடிமேல்
    கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை
    அங்கை ஓடு ஏந்திப் பலிதிரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
    செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே       

உமாதேவி செய்த தவம், திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமடல் என்ற பிரபந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மன்னும் மலையரையன் பொற்பாவை வாணிலா
    மின்னும் மணி முறுவல் செவ்வாய் உமையென்னும்
    அன்ன நடைய அணங்கு நுடங்கிடை சேர்
    பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்தகல
    தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
    அன்ன அருந்தவத்தின் ஊடு போய்    

 
பொழிப்புரை:

தக்கன் செய்த வேள்வியில் அவமானத்திற்கு உட்பட்ட தாட்சாயணி, தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபெருமானை விட்டுப்பிரிந்த பின்னர், பெரும் செல்வங்கள் பெற்ற இமவானின் மகளாக பார்வதி என்ற பெயருடன் தோன்றியபோது, தனது உடலினை மிகவும் கடினமாக வருத்தித் தவங்கள் செய்ததால், சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் புரிந்து கொண்டார். மேலும் தனது உடலின் ஒரு பாகத்தை தேவிக்கு அளித்து, தேவி எப்போதும் அங்கே இருக்குமாறு அருள் செய்தார். இவ்வாறு பார்வதி தேவிக்கு அருள் செய்தவர், திருச்சேறையில் செந்நெறி என்று அழைக்கப்படும் கோயிலில் உறையும் சிவபெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.