என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழையீர் இனிச்
செம்பொன்பள்ளியுளான் சிவலோகனை
நம் பொன் பள்ளி உள்க வினை நாசமே
விளக்கம்
உள்குதல் = நினைத்தல். உழிதர்வர் = திரிபவர். ஆயிழையீர் = சிறந்த நூல்களை ஆராயும் இயல்பு உடையவர்கள். நம் பொன் பள்ளி = தவத்தால், இறை சிந்தனையால் அழகுபடுத்தப்பட்ட நமது மனமாகிய பள்ளி. ஆயிழையீர் என்ற சொல்லுக்கு அழகிய அணிகலன்களை அணிந்த நங்கையர் என்று பொருள் கொண்டு, எலும்பினையும் ஆமை ஓட்டினையும் நகையாகப் பூண்டு இருப்பதால் பெருமானை ஏளனமாக கருதாமல், பெருமானின் உண்மையான அழகினை புரிந்து கொண்டு அவனிடம் அன்பு செலுத்தும் மகளிர் என்று விளக்கம் அளிப்பதும் பொருத்தமாக உள்ளது.
இந்த பாடலில் அப்பர் பிரான், நாம் மனதினில் இறைவனை நினைத்து, அவன் உறையும் இடமாக நமது மனத்தினை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றார். பொன்னால் செய்யப்படும் ஆபரணம், அழகு சேர்ப்பது போன்று நாமும், இறைச் சிந்தனையால் நமது மனதினை அழகுபடுத்த வேண்டும் என்பதை பொன் பள்ளி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். இவ்வாறு அவர் கூறுவது, நமக்கு அவர் அருளிய சரக்கறைப் பதிகத்தினை நினைவூட்டுகின்றது. அந்த பதிகத்தில் சிவபெருமானும் அவரைச் சார்ந்த பொருட்களும் இருக்கும் சரக்கறையாக தனது உள்ளம் மாற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் (4.111) முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் சந்திரன் தங்கும் சடை தனது மனதில் குடிகொள்ள வேண்டும் என்று கூறுவதன் மூலம், சிவபெருமான் தனது நெஞ்சத்தில் குடியிருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். பெருமானின் வாகனம், மழுப்படை, பூத கணங்கள், புலித்தோல் உடை, தலையில் அணிந்திருக்கும் தலைமாலை ஆகியவை தனது நெஞ்சினில் இடம் பெற வேண்டும் என்று பரந்த மனத்துடன் அப்பர் பிரான் வேண்டுகின்றார்.
விடையும் விடைப் பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள்
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய்புலித்தோல்
உடையும் உடை தலை மாலையும் மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே
பெருமான் தனது மனதினில் உறைய வேண்டும் என்று முதல் பாடலில் வேண்டும் அப்பர் பிரான், எந்த கோலத்தில் உறைய வேண்டும் என்று பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமான் தவக் கோலத்தில் உறைய வேண்டும் என்பதே அப்பர் பிரானின் ஆசை. விவந்து ஆடிய = மாறுபட்டு ஆடிய நடனம். சிவபிரானின் நடனம் எவ்வாறு ஏனையோர் நடனத்திலிருந்து மாறுபட்டது என்பதற்கு பெரியபுராண விளக்கத்தின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம், பெருமான் காளியை வெல்வதற்காக ஆடிய நடனம் என்று கூறுகின்றார், தனது ஒரு காதினில் இருந்த குழை ஆபரணத்தை கீழே விழச்செய்து, பின்னர் அதனைத் தனது கால் விரல்களால் பற்றி, காலைத் தூக்கிய நிலையில் வலது கைக்கு மாற்றி, பின்னர் குழையினை காதினில் பொருத்தி, இந்த மூன்று செயல்களும் நடனத்தின் ஒரு அம்சமாக பொருந்துமாறு ஆடிய கூத்து, வேறு எவரும் அதுவரை ஆடாத கூத்து அல்லவா. எனவே மாறுபட்டு ஆடிய கழல்கள் என்று கூறுவது பொருத்தமாக உள்ளது.
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தவம் தான் எடுக்கத் தலை பத்து இறுத்தனை தாழ் புலித்தோல்
சிவந்து ஆடிய பொடி நீறும் சிரமாலை சூடி நின்று
தவம் தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே
இந்த நடனக் கோலத்தின் தோற்றம் (மூன்று நிலைகளாக) காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் உள்ளது. பதிகத்தின் இடைப் பாடல்களில் பெருமானுடன் இணைந்துள்ள பல பொருட்களை குறிப்பிட்டு அவையும் தனது மனதினில் குடிகொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார்.
இறைவனை நமது மனத்தினில் நிலைநிறுத்த வேண்டும் என்றால், முதலில் நமது மனது சுத்தமாக இருக்க வேண்டும் அல்லவா. பதினோராம் திருமுறையில் அமைந்துள்ள கழுமல மும்மணிக் கோவை என்ற பதிகத்தின் நான்காவது பாடலில், இதன் ஆசிரியர் பட்டினத்தார் தான் எவ்வாறு தனது மனதினை பதப்படுத்தி இறைவன் உறைவதற்கு தகுந்ததாக மாற்றினேன் என்று கூறும் பாடல் வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஐவகைக் கடா என்று முரட்டுத் தன்மை வாய்ந்த ஐந்து பொறிகளை குறிப்பிடுகின்றார். மதன் = மதம், செருக்கு.; யாப்பு = கட்டுல். இருள் = அறியாமை அஞ்ஞானம்.
கருமுதல் தொடங்கி பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கி பொருதிறன்
மையிருள் திறத்து மதனிடை அடு சினத்து
ஐவகைக் கடாவும் ஆப்பு அவிழ்த்து அகற்றி
அன்பு கொடு மெழுகி அருள் விளக்கேற்றி
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கி
கருவுற்ற நாள் முதல் இன்றைய நாள் வரை, மனதினை விட்டு நீங்காமல் இருந்த காமம், வெகுளி, பொய், செருக்கு எனப்படும் தூய்மையற்ற குப்பைகளை அகற்றி, உடலைத் தன்வசப்படுத்தி தன்னிச்சைப்படி நடத்தும் ஐம்பொறிகளின் வலையில் கட்டுண்டு கிடக்கும் உயிரையும் உடலையும், அந்த கட்டிலிருந்து பிரித்து, உள்ளத்தை அன்பினால் மெழுகி, இறைவனின் அருள் என்னும் விளக்கினை ஏற்றி, அறியாமை எனப்படும் இருளைத் துரத்தி வாய்மை எனப்படும் கூரையை அமைத்து, கீழ்நிலையில் உழன்று பாழான அறை போல் இருந்த எனது மனதினை, நீ உறையத்தக்க பள்ளியறையாக மாற்றினேன் என்று பட்டினத்தார் இந்த பாடலில் கூறுகின்றார்.
பொழிப்புரை
நல்ல நூல்களை ஆராய்ந்து அறியும் இயல்பினை உடைய சான்றோர்களே, நீங்கள் எலும்பையும் ஆமை ஓட்டினையும் அணிந்து திரியும் இறைவன் மீது அன்பு கொண்டுள்ளீர்கள். செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் சிவபெருமானை, உமது பொன் போன்று தூய்மையானதும் அழகானாதும் ஆகிய உள்ளத்தில் நினைக்க உங்களது வினைகள் நாசமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

