திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

50. தூண்டு சுடர்மேனி - பாடல் 4

இந்த பாடலும் அகத்துறை வகையினை

Updated On :28 பிப்ரவரி 2017, 12:04 pm

ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐவாய் அரவு அசைத்து
                அங்கு ஆனேறு ஏறிப்
போகம் பல உடைத்தாய்ப் பூதம் சூழ புலித்தோல் உடையாப்
                புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப் பரிசு அழித்து
        என் வளை கவர்ந்தார் பாவியேனை
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய
                    விகிர்தனாரே
 

விளக்கம்

ஆகம் = உடல். பாகு = உணவு. பாவியேன் = சிவபெருமானை அடைய முடியாத பாவியேன். இந்த பாடலிலும் சிவபிரானின் மாறுபட்ட தன்மை, பெண்ணினை உடலின் ஒரு பாகத்தில் கொண்டது, பாம்பினை இடையில் கட்டிக் கொண்டது, எருதினை வாகனமாகக் கொண்டது மற்றும் புலித்தோலினை உடையாக அணிந்தது ஆகிய தன்மைகள் இங்கே குறிப்பிடப்பட்டு, பெருமானை விகிர்தா என்று அழைப்பதற்கு காரணம் உணர்த்தப்படுகின்றது.

இந்த பாடலும் அகத்துறை வகையினைச் சார்ந்த பாடலாகும். சிவபெருமானின் மீது தீராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பூதங்கள் சூழ தனது இல்லத்திற்கு பெருமான் பிச்சை ஏற்க வந்ததாக கற்பனை செய்கின்றாள். அந்த கற்பனையில் தான் கண்ட பெருமானது உருவத்தை நமக்கு பாடலின் முதல் இரண்டு அடிகளில் உணர்த்துகின்றாள்.

பரிசு = தன்மை. இங்கே அடக்கம் என்ற தன்மை. கன்னிப் பெண்ணாகிய தான் எவரையும் நோக்காமல் அடக்கத்துடன் இருப்பதற்கு பதிலாக, அடக்கத்தினை இழந்து, பிச்சை ஏற்க வந்த பெருமானின் அழகினில் தனது உள்ளத்தினை இழந்ததை தனது பரிசு அழிந்ததாக கூறுகின்றாள். தன்னை உற்று நோக்கிய பெருமான், தன்னுடன் கூடாமல் இருந்த நிலையை நினைத்து மனம் வருந்தி உடல் இளைத்ததால், வளைகள் கையில் நில்லாமல் கீழே விழுந்ததற்கு காரணம் பெருமான் என்பதால், வளை கவர்ந்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றாள். பெருமான் பால் அன்பு கொண்டுள்ள உயிர்கள், தனது நிலைமையை மறந்து பெருமானையே நினைந்து உருகும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை

தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டவராய், தனது சடையினில் கங்கை ஆற்றினை அடக்கியவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியவராய், எருதினை வாகனமாகக் கொண்டவராய், அவருடன் எப்போதும் நெருங்கி இருக்கும் போகத்தினை உடைய பூத கணங்கள் புடை சூழ, புலித் தோல் உடையினை அணிந்தவராய் எனது இல்லத்திற்கு பிச்சை ஏற்க பெருமான் வந்தார். அவ்வாறு வந்த பெருமானுக்கு, உணவு இடுவதற்காக நான் அவரது அருகில் சென்றேன்; அவ்வாறு சென்ற என்னை அவர் உற்று நோக்கினார்; அவரது பார்வையிலும் அவரது அழகிலும் மயங்கிய நான், எனது அடக்கம் என்ற பண்பினை கைவிட்டு, அவரை ஏற இறங்க பார்த்ததும் அன்றி, அவரிடம் எனது மனதினை இழந்தேன். ஆனால் அவரை அடைய முடியாத பாவியாக உள்ள எனது உடல் ஏக்கத்தினால் மெலிய, எனது கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விட்டன. இவ்வாறு எனது மனதினையும் வளையல்களையும் கவர்ந்த பெருமான், எனது இல்லத்தில் தங்காமல், கரிய மேகங்களை எட்டுமளவு உயர்ந்த மரங்களைக் கொண்ட சோலைகள் சூழ்ந்த வெண்காடு தலத்திற்கு சென்று அங்கே பொருந்திவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.