பெண்பால் ஒரு பாகம் பேணா வாழ்க்கைக் கோணாகம்
பூண்பனவும் நாணாம் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு
அன்றேல் ஓவி உண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப் பாலைப் பரிசு அழியப்
பேசுகின்றார்
விண் பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய
விகிர்தனாரே
விளக்கம்
இந்த பாடல் தனது தோழியிடம், தலைவி கூறுவதாக அமைந்த பாடலாகும். கோணாகம் = வளைந்த நாகம் என்றும் கொடிய நஞ்சினை உடைய நாகம் என்றும் இரண்டுவிதமாக பொருள் கொள்ளலாம். பாலைப் பரிசு அழிய = பாலின் இனிய தன்மையும் தோற்று அழியுமாறு இனிய வார்த்தைகள் பேசுதல். பேணா வாழ்க்கை = விரும்பாத வாழ்க்கை. சிவபெருமான் வாழும் வாழ்க்கை பெண்கள் விரும்பாத வாழ்க்கை என்று அப்பர் நாயகியின் வாக்காக இந்த பாடலில் கூறப்படுகின்றது. இந்த கருத்து நமக்கு அப்பர் பிரானின் சீர்காழி குறுந்தொகைப் பதிகத்தின் ஒரு பாடலை (5.45.8) நினைவூட்டுகின்றது. தனது மகள் சிவபெருமான் பேரில் தீராத காதல் கொள்ளும் அளவுக்கு, சிவபெருமானின் எந்த அம்சம், தனது பெண்ணின் கருத்தினைக் கவர்ந்தது என்பதை யோசித்துப் பார்க்கும் தாய்க்கு, சிறப்பான அம்சமாக எதனையும் உணர முடியவில்லை.
சிவபெருமானின் உறவுகளாக, அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பன பேய்க்கணங்கள்; அவனது உண்கலனோ, உலர்ந்த மண்டையோடு; அவனது இருப்பிடமோ சுடுகாடு; அவனது உடலில் ஒரு பாகத்தில் இருப்பதோ பார்வதி. இவ்வாறு காணப்படும் சிவபெருமான் தான், சிறந்த துறைமுகமாக விளங்கும் தோணிபுரத்து இறைவர். இவ்வாறு இருக்கையில் எதனைக் கண்டு தனது பெண் சிவபிரான்பால் அப்பர் நாயகி காதல் கொண்டாள் என்று அப்பர் நாயகியின் தாய் வியக்கும் பாடல். ஈமம் = சுடுகாடு.
உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்துறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே
இதனை ஒத்த கருத்து சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்தின் ஒரு பாடலிலும் (7.36.7) வெளிப் படுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்கள், பிச்சைப் பெருமானாக வந்த இறைவனின் அழகில் மயங்கிய தாருகவனத்துப் பெண்களின் மனநிலையை உணர்த்தும் பாடல்கள். காட்டில் வாழும் அழகரே, எலும்புகளை அணிகலனாக அணிந்து காட்டினை உறைவிடமாகக் கொண்டு, உலர்ந்த மண்டையோட்டினை உண்ணும் கலனாகக் கொண்டு, கொன்றை மலர்களை அணிந்து வாழும் வாழ்க்கையினை உடைய உம்மை காதலிக்கும் பெண்கள் பெறுவது என்ன என்பதை, ஒரு கணம் சிந்தித்து பார்ப்பீராக. இவ்வாறு உமது அழகினுக்கு அழகு சேர்க்கும் வகையில் இல்லாமல் உலவும் நீர், உண்மையாகவே ஆடல் மற்றும் பாடல் கலைகளில் நாட்டம் கொண்டு தேர்ச்சிபெற்றவர்தானா, என்று கேள்வி கேட்கும் விதமாக அமைந்த பாடல். ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது அழகினை மேம்படுத்தும் வழியில் ஈடுபடுவார்கள் என்பதையும் சுந்தரர் இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.
ஏடுலா மலர்க் கொன்றை சூடுதிர் என்பெலாம் அணிந்து என்
செய்வீர்
காடு நும் பதி ஓடு கையது காதல் செய்பவர் பெறுவது என்
பாடல் வண்டிசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று
நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
இந்த பாடலில் உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் என்று பெருமானை அப்பர் நாயகி இந்த பாடலில் உணர்த்துகின்றாள்; உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையாக கொண்டுள்ள உலக மக்களிடமிருந்து வேறுபட்டவர் என்பது இங்கே உணர்த்தப்பட்டு விகிர்தர் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஏனையோர் வாழ்வதோ பல வளங்களும் பொருந்திய வீடு, சிவபெருமான் வாழ்வதோ சுடுகாடு; ஏனையோர் இணைந்து வாழ்வது நல்ல மக்களுடன், பெருமான் இணைந்து இருப்பதோ பூத கணங்களுடன்; ஏனையோர் உண்பதோ அறுசுவை உணவு; பெருமான் உண்பதோ நஞ்சு; ஏனையோர் இரப்பதற்கு, பிச்சை எடுப்பதற்கு கூசுவார்கள், பெருமானோ விருப்பத்துடன் பிச்சை எடுக்கின்றார்; ஏனையோர் உடலில் பூசுவது நறுமணம் கமழும் வாசனைப் போடி, சிவபெருமான் பூசுவதோ மயானத்து சாம்பல், ஏனையோர் அணிவது பருத்தி மற்றும் பட்டாடை, சிவபெருமான் அணிவதோ யானைத்தோல் மற்றும் புலித்தோல்; ஏனையோர் அணிவதோ அழகான அணிகலன்கள், பெருமான் அணிவதோ பாம்பு, பன்றிக் கொம்பு, ஆமையோடு, ஏனையோர் ஆண் வேறு பெண் வேறு என்று உருவத்தில் இருப்பார்கள் பெருமான் இருப்பதோ ஆண் பெண் இரண்டும் கலந்த உருவத்தில்; ஏனையோர் தீயினைக் ஆண்டு அஞ்சுவார்கள், பெருமானோ தீயினைக் கையில் ஏந்தியவாறு நடனம் ஆடுகின்றார். இவ்வாறு பெருமானுக்கும் ஏனையோருக்கும் உள்ள வேர்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். விளக்கம் மேலும் விரிவடையும் என்று அஞ்சி, இத்துடன் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த பண்புகளை சுருக்கமாக ஒவ்வா என்ற சொல்லினை பயன்படுத்தி, அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
பெண்ணைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் வாழும் வாழ்கை, எந்த பெண்ணும் விரும்பாத வாழ்க்கை; கொடிய நாகத்தை அணிகலனாக பூண்டுள்ள அவர், நான் நாணப்படும் வண்ணம் என்னை புகழ்ந்து பேசுகின்றார்; உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையாக கருதி வாழும், உலக மாந்தர்களின் வாழ்க்கையிலிருந்து, அவரது வாழ்க்கை பெரிதும் வேறுபட்டதாகும். நஞ்சினைத் தவிர வேறு எதையும் விரும்பி உண்ணாதவர் சிவபெருமான். அழகாக காணப்படும் அவர் விரிந்த சடையினை உடையவராக விளங்குகின்றார். இத்தகைய பண்புகளை உடைய அவர், பாலினும் இனிய மொழிகளைப் பேசி, எனது அடக்கமான தன்மையை அழித்துவிடுகின்றார்.
நங்கையே, இவ்வாறு எனது தன்மையை மாற்றி, நான் அவரிடம் காதல் கொள்ளுமாறு செய்த பெருமான், வானத்தில் உலவும் சந்திரனைத் தனது சடையில் சூடியவராய், வேதங்கள் ஓதியவாறு, வெண்காடு தலத்திற்கு சென்று ஆங்கே பொருந்தி உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

