புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார்
பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை ஒன்றலா உருவினானை உலகுக்கு ஒரு
விளக்காய் நின்றான் தன்னைக்
கள் ஏந்து கொன்றை தூய்க்காலை மூன்றும் ஓவாமே
நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு
மேவிய விகிர்தனாரே
விளக்கம்
தவங்கள் செய்த வெள்ளானை என்று யானை சிவபெருமானை வழிபட்டதை அப்பர் பிரான் இந்த பாடலில் சொல்கின்றார். யானை சிவபெருமானை வழிபட்ட தலங்கள் ஒன்பதில் இந்த தலமும் ஒன்றாகும். இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர் (காளையார் கோயில்), கோட்டாறு, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, ஆலவாய் மற்றும் பெண்ணாகடம் ஆகிய தலங்களே அந்த ஒன்பது தலங்கள்.
சூரபத்மனின் மகனால் தனது நான்கு கொம்புகளை இழந்த ஐராவத யானை பெருமானை இந்த தலத்தில் வழிபாட்டு, தான் முன்னர் இழந்த கொம்புகளையும் பொலிவையும் மீண்டும் பெற்றது. இந்த நிகழ்ச்சிதான் அப்பர் பிரான் மற்றும் சம்பந்தர், இந்த தலத்தின் மீது அருளிய பதிகங்களில், வெள்ளானை வழிபட்ட வெண்காட்டான் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சுந்தரர் தான் திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.65) ஒரு பாடலில் ஐராவத யானை தான் இழந்த நான்கு கொம்புகளை மீண்டும் பெற உதவிய சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த நிகழ்ச்சி கந்த புராணத்தில் சொல்லப்படுகின்றது. கோடு = கொம்பு. குஞ்சரம் = யானை. பீடு = பெருமை. விண்மிசைப் பெருமை = மீண்டும் தேவர் உலகத்தில் இந்திரனோடு உலவும் பெருமை. பெற்றி = தன்மை.
கோடு நான்கு உடைக் குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம்
நின்று ஏத்திய பொழுதே
பீடு விண் மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின்
பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளைக்
கிள்ளையும் எனப் பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே
சம்பந்தரும் இந்த தலத்தின் மீது அருளிய பதிகங்களின் பாடல்களில் வெள்ளானை (இந்திரனின் ஐராவத யானை) வழிபட்டதை குறிப்பிடுகின்றார். கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (2.48.9) யானை ஐராவதம் வழிபட்ட செய்தியை கூறும் சம்பந்தர், வெண்காட்டானை தியானித்து உருகி வழிபடாதவர்கள் உணர்வு இல்லாதவர்கள் என சாடுகிறார். அழுது அரற்றும் அடியார்கட்கு எளியவனாகிய பரமன் அமரர்க்கு அரியவன் என கூறுகிறார். இதனை உணர்ந்துதான் ஐராவதம் அடிபணிந்து அருள் பெற்றதோ. ஒள்ளாண்மை = நல்ல ஆண்மைத் திறம். தங்களது வல்லமையில் செருக்கு கொண்டு, தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாதம் செய்த பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும், தற்போதம் நீங்கி தன்னை வழிபட்டு உய்யும் வண்ணம், நீண்ட அழலாக நின்ற பெருமான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அவர்கள் தற்போதம் நீங்காத நிலையில், பன்றியாய் தாழ்ந்தும் அன்னமாய் உயர்ந்தும் சென்ற அவர்கள் உணர முடியாமல் நின்ற பெருமான், உருகி வழிபட்ட யானைக்கு அருள் செய்ததன் மூலம், பெருமானை உள்ளம் கசிந்து வழிபடுவார்கள் பெறுகின்ற பயன் இங்கே உணர்த்தப்படுகின்றது.
கள்ளார் செங் கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அறியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே
இந்த பதிகத்தின் ஏழாவது பாடலிலும் (2.48.7) இந்த செய்தி கூறப்படுகின்றது. அக்கு = எலும்பு மாலை. நமது வினைகளை நீக்கும் மூன்று குளங்களை உடைய வெண்காடு என்று தலத்தின் சிறப்பு இங்கே உணர்த்தப்படுகின்றது.
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
முக்குள நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே
இதே தகவல் ‘உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா எனத் தொடங்கும் பதிகத்திலும் (2.61.6) கூறப்பட்டுள்ளது. உம்பர் ஆளி = தேவர்களை ஆள்பவன். அளியராகி = முதிர்ச்சி அடைந்த அன்பு உடையவர்களாக. ஊறும் = இறைவனின் திருவருளில் ஊறும் அடியார்கள். அமரர்களுக்கு அரியவனாகத் திகழும் பெருமான், தன் மீது அன்புகொண்டு உள்ளம் கசிந்து கண்ணீர் சொரிந்து வழிபடும் அடியார்களுக்கு மிகவும் எளியனாகத் திகழ்வான் என்று நமக்கு உணர்த்தும் சம்பந்தர், அவ்வாறு இறைவனை வழிபாட்டு பயன் பெற்ற ஐராவதம் யானையை இங்கே உதாரணமாக காட்டுகின்றார்.
ஒளி கொள் மேனி உடையாய் உம்பர் ஆளி என்று
அளியராகி அழுது உற்று ஊறும் அடியார்கட்கு
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே
சம்பந்தர், மேலே குறிப்பிட்ட பாடல் ஒன்றினில், பிரமனுக்கும் திருமாலுக்கும் அரியவனாகத் திகழ்ந்த பெருமான், தன்னை நினைத்து உருகி வழிபட்ட வெள்ளானைக்கு அருள் புரிந்தான் என்று கூறுவது போல, அப்பர் பிரானும் இந்த பாடலில், பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் தன்மையையும் யானையின் வழிபாட்டையும் ஒப்பிடுவதை நாம் உணரலாம்.
புள்ளான் = கருடனை வாகனமாக உடையவன், கருடக் கொடியினை உடையவன். உள்ளான் = எல்லாப் பொருட்களின் உள்ளே உறைந்திருப்பவன். ஒன்றலா உருவினான் = ஒன்றுக்கும் மேற்பட்ட உருவத்தினை உடையவன். ஒன்றலா உரு என்பதற்கு, ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு உருவாகத் தோற்றம் அளிப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தம். பிரமனும் திருமாலும், காண முடியாமல் திகைத்தது சிவபெருமானின் திருவுருவத்தின் முன்புதான். இதுவே அவனின் மாறுபட்ட தன்மையாகும்.
பொழிப்புரை
பிரமனும் திருமாலும், மேலும் கீழும் தேடிச் சென்ற போதும், நீண்ட அழலாய் நின்ற பிழம்பின் முடியையும் அடியையும் காண முடியாமல் திகழ்ந்த சிவபெருமான், எல்லாப் பொருட்களிலும் உள்ளே உறைந்து நிற்கின்றான்; அவன் அடியார்களுக்கு அருளும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட உருவத்தினை எடுத்து அருள் புரிகின்றான். உலகங்கள் அனைத்துக்கும் ஒப்பற்ற விளக்காகத் திகழ்ந்து வழிகாட்டுபவனும் சிவபெருமான் தான். அத்தகைய பண்புகள் வாய்ந்த சிவபெருமானை, காலை நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தவறாமல், தேன் நிறைந்த கொன்றை மலர்களைக் கொண்டு வழிபாட்டு தவம் செய்த வெண்மை நிறத்து யானையாகிய அயிராவத யானைக்கு, வேண்டிய வரங்கள் கொடுத்தவன், வெண்காட்டில் திகழும் விகிர்தன் ஆவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

