திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 1

மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாதவாறு

Updated On :3 மார்ச் 2017, 12:46 pm


(செம்பொன்பள்ளி - நேரிசை)

முன்னுரை

ஞானசம்பந்தப் பெருமானை சீர்காழியில் சந்தித்து, பல நாட்கள் அங்கே தங்கிய அப்பர் பிரான் அதன் பின்னர், காவிரி நதியின் இரு கரைகளிலும் உள்ள மற்ற தலங்களைக் காண ஆவல் கொண்டார். சம்பந்தப் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு, புன்கூர், நீடூர், நனிப்பள்ளி, செம்பொன்பள்ளி வழியாக ஆவடுதுறை செல்கின்றார். செம்பொன்பள்ளி தலத்தின் மீது அப்பர் பிரான் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒரு பதிகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் 1

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியராகி
வானினுள் வானவர்க்கும் அறியலாகாத வஞ்சர்
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும் இன்னமுதும் ஆனார் திருச்செம்பொன் பள்ளியாரே

விளக்கம்

ஊனினுள் உயிர் = உடலில் உள்ள மனம். கடுமையான தவத்தின் மூலம் மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாது அடக்கி, இறையுணர்வில் திளைத்து இருத்தல். உணர்வினார் = இறைவனிடத்தில் தனது உணர்வினை செலுத்தியவர். நான் எனில் தானே என்னும் = நான், எனது உடல், எனது உடைமை என்ற நினைப்பினை விட்டு, எல்லாம் சிவபெருமானின் செயல் என்ற சிந்தனையுடன் இருத்தல். வஞ்சர் = நெஞ்சில் நில்லாதவன். உடலை வாட்டுதல், மனம் பொறி வழி செல்லாது ஒன்றி நிற்பதற்காக. கொள்ளும் உணவினை நிறுத்தியோ அல்லது சுருக்கியோ உடலை வாட்டுதல் ஒரு வகை. மேலும் கோடை காலத்தில் வெய்யினில் நின்றும் குளிர் மற்றும் மாரிக் காலத்தில் நீரினில் நின்றும் உடலை வருத்திக்கொள்வதும் பண்டைய நாட்களில் வழக்கத்தில் இருந்தது.

உடலை மாசு நிறைந்தது, அழுக்கு நிறைந்தது என்ற பல சமயங்களில் அருளாளர்கள் கூறினாலும், உடல் உயிர்க்கு கொடுக்கப்பட்ட வரப்ரசாதமாகும். அந்த உடலில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி தான், நாம் மெய்பொருளை உணர்ந்து உய்வினை அடைய முடியும். எனவே நமது உடலினை நாம் அழுக்கு சேராமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமது மனமும் தூய்மையடைந்து இறைவன் குடிகொள்வதற்கு தகுந்த இடமாக மாறும். அப்பர் பிரான் மேற்கண்ட பாடலில் தான் எனும் அகந்தையை நீக்கி மெய்ஞானத்தை பெருக்கிக்கொண்ட அடியார்களின் நெஞ்சத்தில் இறைவன் உறைகின்றார் என்று கூறுகின்றார். இதே கருத்தை உள்ளடக்கி, திருமூலரும் நமது உடம்பினை இழுக்கு என்று எண்ணாமல், உடல் மாசு அடையாத வண்ணம் உடலினை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உத்தமனாகிய இறைவன் உடலினைக் கோயிலாக கொண்டுள்ள காரணத்தால் நாம் உடலினை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இங்கே கூறுகின்றார்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

பொழிப்புரை

கடுமையான தவத்தை மேற்கொண்டு, மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாதவாறு அடக்கி, எப்போதும் இறையுணர்வில் திளைத்து இருக்கும் ஞானிகளுக்கு எளியராக சிவபெருமான் விளங்குகின்றார். தனது நிலையினை பெரிதாக மதித்து ஆணவத்தால் நிமிர்ந்து இருக்கும் தேவர்களால் சிவபெருமானை அறிந்து தங்கள் நெஞ்சினில் சிவபெருமானை நிறுத்திக்கொள்ள முடியாது. தான் மற்றும் எனது என்னும் அகந்தை தரும் உணர்வினை விட்டொழித்து, அனைத்தும் சிவமயம் என்ற உணர்வினை வளர்க்கும், மெய்ஞானம் மிகுந்த அடியார்களின் நெஞ்சினுள்ளே தேனாகவும் அமுதமாகவும், அவர்களின் உள்ளம் தித்தித்து இருக்குமாறு இருப்பவர், திருச்செம்பொன்பள்ளியில் உறையும் இறைவன் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.