முன்னுரை
அப்பர் பிரான் ஆவடுதுறை தலத்திற்கு இரண்டு முறை சென்றதாக நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமானை சந்தித்த பின்னர் அருகில் உள்ள பல தலங்கள் செல்ல அப்பர் பிரான் விரும்பினார். கருப்பறியலூர், புன்கூர், நீடூர் தொடங்கி, துருத்தி, மயிலாடுதுறை வழியாக ஆவடுதுறை சென்றார். அப்போது முதன் முறையாக ஆவடுதுறை சென்ற அப்பர் பிரான், அங்கே அருளிய பதிகங்களில் நமக்கு நான்கு பதிகங்கள் கிடைத்துள்ளன. அவை, இரண்டு திருத்தாண்டகங்கள் (6.46 - நம்பனை நால்வேதம்), (6.47 - திருவே என் செல்வமே) ஒரு குறுந்தொகைப் பாடல் (5.29 - நிறைக்க வாலியள் அல்லள்) மற்றும் ஒரு நேரிசைப் பதிகம் (4.57 - மஞ்சனே மணியும் ஆனாய்).
திருமறைக்காட்டில் அப்பர் பிரானும் ஞானசம்பந்தப் பெருமானும் சேர்ந்து தங்கியிருந்த சமயத்தில் மதுரையிலிருந்து, அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் மந்திரி குலச்சிறையார் அனுப்பிய அடியார்கள் ஞான சம்பந்தரை சந்தித்து, மதுரையில் அப்போது நிலவிய சூழ்நிலையை விவரித்து, ஞானசம்பந்தப் பெருமான் அங்கே எழுந்தருளி சைவ சமயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஞான சம்பந்தர் மதுரை செல்ல, அப்பர் பிரான் மேலும் சில நாட்கள் மறைக்காட்டில் தங்கி, திருப்பணிகள் பல புரிந்த பின்னர், வீழிமிழலை தலம் செல்ல விருப்பம் கொண்டார். வீழிமிழலை சென்று அங்கிருந்த பெருமானை தரிசித்து பதிகங்கள் பல அருளிய பின்னர் அப்பர் பிரான் பழையாறை செல்லும் வழியில் ஆவடுதுறை, கோழம்பம், நல்லம் ஆகிய தலங்கள் சென்றார். அவ்வாறு ஆவடுதுறை சென்றபோது அருளிய பதிகம்தான் இது. இந்த பதிகம் அருளியதைக் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பசு வடிவத்துடன் இறைவனை வழிபட்ட உமையம்மைக்கு சிவபெருமான் அருளியது இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான், ஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்ததை குறிப்பிடுகின்றார் என்பதையும் சேக்கிழார் இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப்
பணிவார் பொற்பமைந்த
ஆவுக்கருளும் ஆவடு தண்துறையார் பாதம்
அணைந்து இறைஞ்சி
நாவுக்கரசர் ஞானபோனகர்க்குச் செம்பொன்
ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து
பிறவும் பணிகின்றார்
பாடல் - 1
மாயிரு ஞாலம் எல்லாம் மலரடி வணங்கும் போலும்
பாயிரும் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
கழுமல ஊரர் = கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழியைச் சார்ந்த திருஞான சம்பந்தர், கழுமலம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. ஞாலம் = உலகம், இங்கே உலகத்தில் உள்ள மக்களைக் குறிக்கின்றது.
பொழிப்புரை
மிகவும் பெரியதாக உள்ள உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஆவடுதுறை அண்ணலின் மலர் போன்ற திருவடிகளை வணங்குகின்றார்கள். அவர், பாய்ந்தும் பெருகியும் வந்த கங்கை நதியைத் தனது படர்ந்த சடையில் தாங்கியவர். அவர் அழகாகவும் பெரியதாகவும் உள்ள சோலைகள் சூழ்ந்த கழுமலம் என்று அழைக்கப்படும் நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தருக்கு, ஆயிரம் சிறந்த பொற்காசுகளை அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


