மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 10

மகிழ்ந்த சிவபெருமான்

News image
Updated On :6 அக்டோபர் 2017, 5:13 am


பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய் பாடியாடிக் கொடுவலி அரக்கன் தன்னை
ஆர்த்தவாறு அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே

விளக்கம்

ஆர்த்தவாறு = ஒலித்தவாறு. அலறினான் என்று சொல்லாமல், தனது குரல் ஒலித்தவாறு அரக்கன் இராவணன் அலறினான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தசமுகன் என்பது தான் அவனது இயற்பெயர். இராவணன் என்ற வடமொழிச் சொல்லுக்கு, தனது குரலை உலகெங்கும் கேட்கச் செய்தவன் என்று பொருள். சிவபெருமான் தனது கால் விரலால் கயிலை மலையினை அழுத்தியபோது, அந்த அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் அலறிய அலறல் உலகெங்கும் கேட்டதால், சிவபெருமான் அவனுக்கு இராவணன் என்ற பெயரை அளித்தார். இராவணன் என்ற பெயரினை சிவபெருமான் அளித்தார் என்று சுந்தரர் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பாடல் திருநள்ளாறு பதிகத்தின் பாடல் (7.68.9). அரக்கனின் இன்னிசை கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், அரக்கன் தனது வலது கையில் ஏந்தி சண்டை புரிவதற்காக சந்திரஹாசம் என்ற வாளினையும், இராவணன் என்ற நாமத்தையும் அளித்த கருணை வள்ளலாக திகழ்ந்த தன்மை கேட்டு, அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானை மறந்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் என்று இங்கே கூறுகின்றார்.
    
    இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கு
                                                                  இமவான் மகள் அஞ்சத்
    துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து
                                                                 இன்னிசை கேட்டு
    வலம் கைவாளொடு நாமமும் கொடுத்த வள்ளலைப்
                                                                 பிள்ளை மாமதி சடை மேல் 
    நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன்
                                                                 மறந்து என் நினைக்கேனே


இடும்பாவனம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.17.8) சம்பந்தர் சிவபெருமான், வாளினையும் இராவணன் என்ற நாமத்தையும் அளித்ததாக கூறுகின்றார். அழுகை குணத்தினால் வந்த பெயர் என்பதால் குணநாமம் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஓராது என்றால் ஆராய்ந்து சிந்திக்காது என்று பொருள். இறைவன் உறையும் மலையினை பேர்த்து எடுக்கச் செய்த முயற்சி இங்கே உணர்த்தப்படுகின்றது. சண்டீசர், கண்ணப்பர், திருநாவுக்கரசர், வன்தொண்டர், என்ற அடியார்களின் வரிசையில், தனது சாமகான இன்னிசையால் மகிழ்வித்த இராவணனும் சேர்கின்றான். 

    தேரார் தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
    ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒருபஃது அவை நெரித்துக்
    கூரார் தரு கொலை வாளொடு குண நாமமும் கொடுத்த
    ஏரார் தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே


அர்ஜுனனை கொல்ல வந்த பன்றியினைக் கொன்றதன் மூலம் தன்னை வழிபட்டவனுக்கு வந்த துன்பத்தினை தீர்த்தவர் என்று நமக்கு உணர்த்திய அப்பர் பிரான், சிவபிரான் தன்னை வழிபடும் அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பார் என்று நமக்கு கூறுகின்றார். விரித்த சடையினை உடைய அவர், அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பார் என்று கூறுவதன் மூலம், சிவபெருமான் மிகவும் வேகமாக பாய்ந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தாங்கி பகீரதனுக்கு உதவி செய்ததை நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த மூன்று அடியார்களும், அர்ஜுனன், பகீரதன், இராவணன் ஆகிய மூவரும் சிவபிரானை வழிபட்டுத் தங்களது துன்பங்களிலிருந்து மீண்டமை நமக்கு சொல்லப்பட்டு, நாம் அவரை வழிபட்டு பயன் பெற வேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

தன்னை நோக்கி தவம் செய்துகொண்டிருந்த அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியைக் கொன்றும், அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கியும் அவனுக்கு அருள்கள் செய்தவர் சிவபெருமான். படர்ந்த சடையினை உடைய அவர், தன்னை வழிபடும் அடியார்களின் துன்பங்களை நீக்கி இன்பங்கள் கொடுப்பார். கூத்து ஆடுபவராய், ஆடியும் பாடியும் காணப்படும் அவர், கொடிய வலிமை கொண்ட இராவணன் மிகுந்த ஆர்பாட்டத்துடன் கயிலை மலையைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, கயிலை மலையைத் தனது கால் விரலால் அழுத்தி, மலையின் கீழ் அமுக்குண்ட இராவணன், துயரம் தாங்காமல் பத்து வாய்களும் அலறுமாறு செய்தவர் சிவபெருமான் ஆவார். 
தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.