வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும்
பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான் தன் பேதையோடும் இனிது இருந்த
பெருமானை ஏத்துவார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத் தீதிலா
மறையோனைத் தேவர் போற்றும்
கானவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
விளக்கம்
பண்டைய காலத்தில் மறையினை ஓதுவதும் மறையினை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் அந்தணர்களின் செயலாக இருந்ததால், அந்தணர்கள் மறையோர் என்று அழைக்கப்பட்டார்கள். உலகத்திற்கு மறையினை அருளிய பரமனும் மறையோன் என்றும் ஆதி மறையோன் என்றும் அழைக்கப்பட்டான். இறைவன் ஜாதி பேதங்களைக் கடந்தவன், தன்னை நினைத்து வழிபடும் அடியார்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு அருள்புரிபவன். இதற்கு சான்றாக உள்ளது பெரிய புராணத்தில் அடியார்களின் சரித்திரம். அனைத்து உயிர்களுடன் கலந்து அவற்றுக்கு அருள்புரியும் இறைவன் என்பதை உணர்த்தும் முகமாக, இங்கு ஏனவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஏனவன் என்றால் மறையோர்கள் அல்லாத மற்றவர்கள்.
அப்பர் பிரான் தான் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.11.6) நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்கும் அடியார்கள் எந்த குலத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும், மேன்மையான குலத்தவர்கள் அடையும் பேற்றினை அவர்களுக்கும் அளிப்பது நமசிவாய மந்திரம் என்று தெளிவுபடுத்துகின்றார். சலம் = சஞ்சலம், உள்ளொன்று வைத்து புறமொன்று காட்சி அளிப்பது; தன்னைச் சாராத உயிர்களுக்கு நன்மை அளிக்காத பெருமான் தன்னைச் சார்ந்த உயிர்களுக்கு தினமும் நன்மையை புரிவான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலம்
குலமிலராகிலும் குலத்திற்கு ஏற்பதோர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே
பொழிப்புரை
வானத்தைத் தனது இடமாகக் கொண்டவனும், வலிவலம் மறைக்காடு ஆகிய தலங்களில் உறைபவனும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், வேதங்களை எடுத்து ஓதியதால் ஆதி மறையவனாக இருப்பவனும், அந்தணர் அல்லாத மற்றை வருணத்தைச் சார்ந்தவனாக இருப்பவனும், இமவான் மகளாகிய பார்வதி தேவியோடு இனிதிருந்து அனைவர்க்கும் அருள் செய்யும் பெருமானாக இருப்பவனும், தன்னைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களுக்குத் தேனாக இனிப்பவனும், தேனினும் இனிமை மிகுந்தவனாக இருப்பவனும், தனது அடியார்களைக் காக்கும் பொருட்டு தக்க தருணத்தை எதிர்பார்த்து மறைந்து நிற்பவனும், தேவர்கள் போற்றும் வகையில் வேடுவக் கோலம் தரித்து அர்ஜுனனுக்கு அருள் செய்தவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.