கடிகமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத்தானே
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே
கொடி அணி விழவது ஓவாக் கோடிகா உடைய கோவே
விளக்கம்
கோயில் விழாக்களில் கொடி ஏற்றும் வழக்கம் பண்டைய நாளில் இருந்ததாக இந்த பாடல் தெரிவிக்கின்றது. மேலும் அப்பர் பெருமான் வாழ்ந்த நாட்களில் இந்த தலத்தில் விழாக்கள் இடைவிடாது நடைபெற்றன போலும். இந்த தலத்து அம்பிகையின் திருநாமம் வடிவுடை மங்கை என்பதாகும். அந்த பெயரினை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உமையம்மையைத் தனது மார்பின் ஒரு பாகத்தில் வைத்தவனாக அப்பர் பிரான் கூறுகின்றார். உடலின் முக்கிய பாகமாக, உடலுக்கு உயிரோட்டத்தை அளிக்கும் இதயம் உள்ள பாகமாக கருதப்படும் மார்பினை, உடலுக்கு சமமாக பாவித்து, உடலில் ஒரு பாகத்தை அளித்தவன் என்பதை உணர்த்தும் வண்ணம் மார்பினில் ஒரு பாகத்தை இறைவிக்கு அளித்தவன் என்று குறிப்பிடுகின்றார் போலும். இவ்வாறு மார்பினில் ஒரு பாகத்தை அளித்தவன் என்று குறிப்பிடும் சில
தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
அவளிவணல்லூர் பதிகத்தின் ஒரு பாடலில் (3.82.3) சம்பந்தர், இறைவனை மார்பினில் இமவான் மகளோர் பாகம் நிலை செய்தவன் என்று கூறுகின்றார். நிலை செய்து = பிரியாமல் நிலையாக வைத்துக்கொண்டு. உடலின் ஒரு பாகத்தில் ஆணும் மற்றொரு பாகத்தில் பெண்ணும் இருந்தாலும், பெருமானுடைய தோற்றம் மிகவும் அழகாக இருக்கும் தோற்றம் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஏறு = சிறந்த ஏற்றம் உடைய அழகாய கோலம். மிகவும் அழகான கோலத்துடன், இடுக்காட்டில் நின்று நடனமாடுவது நமக்கு பொருத்தமற்ற செயலாகத் தோன்றினாலும், இன்ன தன்மையன் என்று
அறியமுடியாத இறைவனுக்கு மிகவும் பொருந்திய கோலமாக விளங்குகின்றது என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.
நீறுடைய மார்பில் இமவான் மகள் ஒர் பாகம் நிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம்
ஏறுடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடமாடும்
ஆறுடைய வார் சடையினான் உறைவது அவளிவணல்லூரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.89.1) மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார் என்று சம்பந்தர் இறைவனை குறிப்பிடுகின்றார். கொச்சைவயம் என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். தங்களுடைய கடமைகளைச் செய்வதில் குறை ஏதும் இல்லாது வாழ்ந்து வந்த அந்தணர்கள் வாழ்ந்த நகரம் சீர்காழி என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அந்தணர் என்பதற்கு அம் + தணர் என்று பிரித்து, உடலின் அழகையும் மனதினில் ஈரத்தையும் (இரக்க குணத்தையும்) உடையவர் அந்தணர்கள் என்று பொருள் கொள்வார்கள். வேதங்களை நன்றாக படித்துத் தேர்ந்து அவற்றின் முடிவினை அணுகுவர் அந்தணர் என்று சீவக சிந்தாமணி உரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அந்தணர்கள் செய்ய வேண்டிய ஆறு கடமைகள், வேதம் ஒதுதல், வேதம் ஓதுவித்தல் (வேதங்களை கற்றுக் கொடுத்தல்), யாகம் செய்தல்,
யாகங்கள் செய்வித்தல், தானம் அளித்தல், தானம் வாங்குதல் ஆகியவை ஆகும்.
அறையும் பூம்புனலோடும் ஆடரவச் சடை தன் மேல்
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஒவா மந்திர வேள்வி அறாத
குறைவில் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே
சீர்காழி நகரின் மீது அமைந்த மற்றொரு பாடலில் (3.81.7) சம்பந்தர், திருமார்பில் பெண் அமரும் மேனியர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். சரியைத் தொழிலர் = சரியை முதலான நான்கு தொழில்களையும் செய்து இறை சிந்தைனையில் ஈடுபடும் மெய்யடியார் வாழும் நகரம் என்று சம்பந்தர் கூறுகின்றார். சரியை என்பது திருக்கோயிலில் தரையை சுத்தம் செய்வது, கோயிலில் பயன்படுத்தும் பாத்திரங்களை, விளக்குகளை துலக்குவது, கோயில் ஆடைகளை துவைப்பது, தொண்டர்களுக்கு பணிவிடை செய்வது ஆகியவை. கிரியை என்பது, இறைவனைப் புகழினைப் பாடுவது, இறைவனின் திருநாமங்களைச் சொல்லி வழிபடுதல் ஆகியவை, யோகம் என்பது எப்போதும் இறைவனின் திருநாமங்களை தியானித்தல், ஞானம் என்பது அவ்வாறு
இடைவிடாது செய்யப்படும் யோகத்தால், மெய்ப்பொருளின் உண்மையை உணருதல் மற்றும் உணர்ந்த உண்மையினை வாழ்வினில் பயன்படுத்தி உய்வினை அடைதல். திண்ணமரும் = எளிதில் நீக்கமுடியாத வகையில் மிகுந்த வலிமையுடன் உயிரினைப் பற்றியிருக்கும் வலிய வினைகள்; தன்னைப் புகழ்ந்து பேசும் அடியார்களைப் பற்றியிருக்கும் வினைகள் எத்துணை வலியதாக இருந்தாலும் அவற்றை நீக்கும் வல்லமை படைத்தவர் சிவபெருமானே என்றும் இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.
பண்ணமரும் நான்மறையர் நான்மறை பயின்ற திருமார்பில்
பெண்ணமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் தம்
திண்ணமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான்
ஊர்
துண்ணென விரும்பும் சரியைத் தொழிலர் தோணிபுரமாமே
ஆக்கூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் ஒரு பாடலில் (6.21.6) அப்பர் பிரான் இறைவன் மலைமகளை தனது மார்பகத்தில் அணைத்துத் தனது உடலில் நிலையாக வைத்த செய்தியும் கூறப்படுகின்றது. தீதூர = தீவினையை வெல்லும் வண்ணம். ஊர்தல் = வெல்லுதல்.
மாதூரும் வாள் நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
மலைமகளை மார்பகத்து அணைத்தார் போலும்
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும்
இல்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும்
தாமேயாம் செல்வர் போலும்
ஆதிரை நாளா அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி
அப்பனாரே
ஓணகாந்தன்தளி தலத்து பதிகத்தின் ஒரு பாடலில் (7.5.6) சுந்தரர், உமையம்மையை, இறைவனின் மார்பு நீங்காத தையலாள் என்று கூறுகின்றார். காஞ்சிமாநகரம் என்றவுடன் அம்பிகை முப்பத்திரண்டு அறங்கள் செய்த நிகழ்ச்சி சுந்தரரின் நினைவுக்கு வந்தது போலும். அந்த முப்பத்திரண்டு அறங்களில் ஒன்று, அறச்சாலை அமைத்து, நகருக்கு வரும் அடியார்கள் உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்தது. தனது மனைவி அறச்சாலை அமைத்து பலரும் உணவு உட்கொள்ள உதவுகையில், பெருமான் ஊர் ஊராகச் சென்று அலைந்து திரிந்து பிச்சை ஏற்று உணவு உட்கொள்வது ஏன், என்ற கேள்வியை நகைச்
சுவையாக சுந்தரர் இந்த பாடலில் கேட்கின்றார்.
வார் இரும் குழல் வாள் நெடுங்கண் மலைமகள் மது விம்மு
கொன்றைத்
தார் இரும் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக
நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன் தளி
உளீரே
பெரிய புராணம் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில், சேக்கிழார் காஞ்சி நகரத்தின் சிறப்புகளைக் கூறுகையில், அம்பிகை அறம் செய்ததையும் குறிப்பிடுகின்றார்.
ஆன தொன்னகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனம் இல் அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்ட அப்பெருமையை அறிந்தவா விளம்பில்
கம்பையாற்று வெள்ளத்தினால், தான் வழிபட்டு வந்த இலிங்கம் சிதைந்து விடுமோ என்ற அச்சத்தில், இலிங்கத்தைத் தனது மார்புடன் அம்பிகை அணைத்த போது, பெருமான் அம்பிகைக்குத் தனது தரிசனம் அளித்தது பெரிய புராணத்தில் கூறப்படுகின்றது. மேலும் அம்பிகை அப்போது, காஞ்சி தலத்தில் தான் பல அறங்கள் செய்ய விரும்பியதை இறைவனிடம் தெரிவித்ததாகவும், இறைவன் அதற்கு அருள்புரியும் வண்ணம் இரண்டு நாழி நெல் அளந்து கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவல் அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டராலும் சொல்லப்படுகின்றது.
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன் தன் மெய்யருளே
பெரிய புராணத்தில் சேக்கிழாரும் இறைவன் இரு நாழி நெல் அளந்து கொடுத்ததை குறிப்பிடுகின்றார்.
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை
மேவி வீற்றிருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இகபரத்து இருநாழி
நெல் அளித்துக்
கடையராயும் உயர்ந்தவராயும் காஞ்சி வாழ்பவர் தாம் செய்
தீவினையும்
தடைபடாது மெய்ந்நெறி அடைவதர்காம் தவங்களாகவும்
உவந்து அருள் செய்தார்
பொழிப்புரை
நறுமணம் கமழும் கொன்றை மலர்களை அணிந்தவனே, பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு உலகெங்கும் பலிக்குத் திரிபவனே, மிகவும் அழகுடைய மங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றவனே, உமது இணையான திருவடிகளைத் தொழும் அடியார்களுக்கு அருள்புரிபவனே, நீ கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாடப்படும் விழாக்கள் எப்போதும் இடைவிடாது நடத்தப்படும் கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

