ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 7

பிறை தேய்ந்து இருந்த நிலையினை

Updated On :25 மார்ச் 2017, 11:23 am

முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும்
                முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார்
                காம்பேய்த் தோளி
பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால்
            ஊழி உலகம் ஆனார்    
பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
                பந்தணைநல்லூராரே
 

விளக்கம்

தலத்து இறைவியின் திருநாமம் காம்பன தோளி அம்மை என்பதாகும். இந்த பெயரினை சற்றே மாற்றி காம்பேய்த் தோளி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். காம்பு = மூங்கில். அம்பிகையின் திருநாமம் வேணுபுஜாம்பிகை என்று வடமொழியில் அழைக்கப் படுவதை, காம்பேய்த் தோளி என்று மிகவும் அழகாக அப்பர் பிரான் தமிழாக்கம் செய்துள்ளார். முற்றா மதி=பிள்ளை மதி என்றும் இளமதியம் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படும் பிறைச் சந்திரனை, பிறை தேய்ந்து இருந்த நிலையினை முற்றா மதி என்று கூறுகின்றார்.

மூவராக, பிரமன், திருமால், உருத்திரனாக பெருமான் இருக்கும் நிலையும், அந்த மூவருக்கும் முதல்வராக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் ஒரு பாடலில் (5.36.5) அப்பர் பிரான் மூவராய் முதலாய் நின்ற மூர்த்தி என்று கூறுகின்றார். ஏ = அம்பு, அம்பு ஏதும் இன்றி, தனது சிரிப்பினால் திருபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த செய்தி இங்கே கூறப்படுகின்றது.

பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏ அலால் எயில் மூன்று எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.53) முதல் பாடலில் சம்பந்தர் இறைவனை மூவராய முதலொருவன் என்று கூறுகின்றார். மூவராக மட்டுமல்ல, தேவராகவும், அசுரராகவும், மறைகள் ஓதும் அந்தணர் உள்ளிட்ட அனைத்து வகை மாந்தர்களாகவும், ஐந்து பூதங்களாகவும் இருப்பவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரிகால் நீரும்
மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் என்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

பொழிப்புரை

இளம்பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக்கொண்ட பெருமான், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவராகவும் இருந்ததும் அன்றி, அந்த மூவர்க்கும் முதல்வராகவும் திகழ்கின்றார்.

கற்றவர்கள் புகழ்ந்து ஏத்தும் கடவுளாகத் திகழும் பெருமான் பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், கங்கையும் திங்களும் விரும்புவராகவும் உள்ளார். மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடைய பெருமான், பால்போன்று வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை உடலெங்கும் பூசியவர் ஆவார். தனது தன்மையால், உலகங்களை ஆக்குபவராகவும், காப்பவராகவும், அழிப்பவராகவும் விளங்கும் பெருமான், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.