செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 10

தேன் வண்டுகளால் மட்டுமே எடுக்கப்படும்

Updated On :14 ஜூன் 2017, 11:08 am

மங்கலக்குடியான் கயிலைம் மலை
அங்கலைத்து எடுக்குற்ற அரக்கர் கோன்
தன் கரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து
அங்கலைத்து அழுது உய்ந்தனன் அன்றே 
 

விளக்கம்

அலைத்து (இரண்டாம் அடி) = அசைத்து. தகர்த்து = சிதறி. அலைத்து (மூன்றாம் அடி) = தனது தவற்றினை உணர்ந்து வருந்தி. முந்தைய பாடலில், நோயினால் வருந்திய சமயத்தில், தீர்வு ஏதும் காண முடியாத நிலையில், தனது தவற்றினை உணர்ந்து அழுது வருந்தி, சிவநெறி சார்வதற்கு தான் முயன்றதுபோல், இராவணனும் அவனது உடல் வருத்தத்திற்கு உள்ளாகவே, தீர்வு ஏதும் காணமுடியாமல் அழுத செய்கை அப்பர் பிரானின் நினைவுக்கு வந்ததுபோலும். அரக்கன், தனது தவற்றினை உணர்ந்து வருந்தி அழுது உய்வினை பெற்றான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். தங்களது தவற்றினை உணர்ந்து வருந்தி அழும் எவருக்கும் இறைவன் அருள்புரிவான் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. இந்த கருத்துதான், அழுதால் அவனைப் பெறலாமே என்று மணிவாசகரை சொல்ல வைத்ததோ என்று நமக்குத் தோன்றுகின்றது.

நமது தவறுகளை உணர்ந்து அழுதால் இறைவனின் அருளைப் பெறலாம் என்று உணர்த்தும், மணிவாசகரின் திருச்சதகம் ஆனந்த பரவசம் பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உன்னை வந்து உறுமாறே

தானும், தனது நெஞ்சத்து உணர்வுகளும், தான் இறைவன் மீது கொண்டுள்ள அன்பும் பொய்யாக இருந்தாலும், அவ்வாறு கள்ள நெஞ்சத்துடன் இறைவனைத் தொழும் தனது தவற்றினை உணரும் எவரும், வினைகளால் பீடிக்கப்பட்டு செயலற்ற நிலையில் தங்களால் இறைவனை உண்மையாக தொழ முடியவில்லையே என்று வருந்தி அழுதால் இறைவனின் அருளினைப் பெறலாம் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இங்கே தேன் என்றும், அமுதம் என்றும், கரும்பின் தெளிவு என்றும் இறைவனை அழைத்து, நாம் இறைவனை அடைவதற்கான வழிகளையும் அடிகளார் குறிப்பால் உணர்த்துகின்றார்.

மலர்களின் உள்ளே இருக்கும் தேன் வண்டுகளால் மட்டுமே எடுக்கப்படும் நிலையில் உள்ளது. அவ்வாறு எடுக்கப்பட்ட தேன் அதனை உண்பவர்க்கு அறிவையும் ஆற்றலையும் அளிக்கின்றது. அதுபோன்று, அனைவரின் இதயத் தாமரையில் மறைந்திருக்கும் இறைவனை, அவன்பால் அன்புடைய அடியார்கள் மட்டும் வண்டு தேனை நுகர்வது போன்று, அவன் இருப்பதை கண்டுகொண்டு அவனது அருளினைப் பெற்று பேரானந்தம் அடைகின்றார்கள். இந்த கருத்தினை உணர்த்தவே தேன் என்று இறைவன் அழைக்கப்படுகின்றான்.

பாற்கடலில் அடியில் மறைந்து கிடந்த அமுதம், மந்தரம் எனப்படும் மலையை மத்தாக நட்டு, வாசுகி எனப்படும் பாம்பினை நாணாக பயன்படுத்தி கடையப்பட வெளிப்படுகின்றது. அதே போன்று, நமது மனதினில் மறைந்துள்ள இறைவனை, நாம் நமக்கும் அவனுக்கு இடையே உள்ள இறைவன் அடியான் என்ற உணர்வாகிய மத்தினை நட்டு, அவன்பால் நாம் கொண்டுள்ள அன்பு எனப்படும் கயிற்றினை இறுக்கமாகச் சுற்றிவிடாமல் கடைந்தால், இறைவன் இருப்பதை நாம் உணரலாம் என்பதை உணர்த்தும் முகமாக அமுதம் என்று இறைவனை அடிகளார் இங்கே அழைக்கின்றார். 

ஆலையில் இடப்படும் கரும்பு பல வகையாகவும் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு அதன் சாறு வெளியே எடுக்கப்படுகின்றது. அவ்வாறு எடுக்கபப்டும் சாறு, சாற்றினில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்பட தெளிய வேண்டும். அதேபோன்று பல வகையான அனுபவங்களால் பரிபக்குவம் அடையும் ஆன்மா மெய்ப்பொருளை உணர்கின்றது;. பின்னர் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிமுறைகளை மேற்கொண்டு தன்னை பிணைத்துள்ள மலங்களிலிருந்து விடுதலை பெற்று தெளிவினை அடைந்து, நிலையாக இறையுணர்வில் நின்று முக்தி நிலையை அடைகின்றது. இந்த செய்தியை உணர்த்தும் முகமாக கரும்பின் தெளிவே என்று இறைவனை அடிகளார் அழைக்கின்றார். இவ்வாறு தேன், அமுதம், கரும்பின் தெளிவு என்று அழைத்த பின்னர் அடிகளாருக்கு ஒரு ஐயம் ஏற்படுகின்றது போலும். நாள்பட தேனும் தனது இனிமைத் சுவையை சிறிது சிறிதாக இழக்கின்றது. கைப்புத் தன்மையை அடைகின்றது; மிகவும் அதிகமாக பருகப்படும் அமுதமும் தெவிட்டத் தொடங்குகின்றது. கரும்பின் தெளிவோ எளிதில் புளிப்புச் சுவையை அடையும் நிலையில் உள்ளது. ஆனால் இறைவனுடன் நாம் கூடியிருப்பதில் கிடைக்கும் இன்பம் என்றும் அழியாததாக, மாறாததாக உள்ளது. எனவே தேன், அமுதம், கரும்பின் தெளிவு ஆகிய பொருட்களை விடவும் என்றும் இன்மையாக உள்ளது இறையருள் என்பதை உணர்த்தும் வண்ணம் தித்திக்கும் என்று கூறுகின்றார். பெருமானே என்ற சொல் மானே என்று குறுகியது. இறுதியில் நாம் அழத் தான் முடியும். இறைவனின் கருணை இருந்தால் தான் அவனுடன் நாம் இணைய முடியும் என்பதை உணர்த்தும் முகமாக, பெருமானே, நீ வந்து என்னுடன் கூடுவாயாக என்ற வேண்டுகோளினை அடிகளார் இந்த பாடலில் வைக்கின்றார். 

பொழிப்புரை

மங்கலக்குடியான் வீற்றிருக்கும் கயிலை மலையினை பேர்த்து எடுப்பேன் என்று தனது ஆணவத்தினால் முடிவெடுத்த அரக்கன் இராவணன், கயிலை மலையினை அசைக்கின்றான். அந்த சமயத்தில், இறைவன் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்ற, மலையின் கீழ் நசுக்குண்ட அரக்கனது கைகளும், கால்களும், தோள்களும், தலைகளும் சிதறும் நிலைக்குத் தள்ளப்படவே, அரக்கன் மிகவும் வருந்தினான். ஏதும் செயலற்றவனாக இருந்த அந்த நிலையில், அரக்கன் தனது தவறினை உணர்ந்து அழவே, பெருமான் அவன் மீது கருணை கொள்ள, அரக்கன் உய்வினை அடைகின்றான். 

முடிவுரை

பதிகத்தின் முதல் பாடலில், உறவென்றும் பாராமால் தவறு செய்தவர்களை தண்டிக்கும் நேர்மையாளன் என்று இறைவனை குறிப்பிடும் அப்பர் பிரான், அவனது கருணையின் தன்மையையும் நமக்கு எடுத்துரைக்கின்றார். இரண்டாவது பாடலில் பிரமன், மால் காணா நின்ற அவனது சிறப்பும், மூன்றாவது பாடலில் அவனை வழிபடுவோரை பட்டியலிட்டு அவனது உயர்ந்த தன்மையும் உணர்த்தப்படுகின்றன. இறைவனை வழிபடும் இரண்டு முறைகளையும் நான்காவது பாடலில் உணர்த்தும் அப்பர் பிரான், ஆறாவது பாடலில் செய்யப் படும் வழிபாடு மனம் மொழி மெய் ஆகியவை ஒன்றி செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றார். ஐந்தாவது மற்றும் ஏழாவது பாடல்கள் தலத்தின் அடியார்களின் சிறப்பினை உணர்த்துகின்றன. எட்டாவது பாடலில் சிவவழிபாடு சண்டீசருக்கு பெற்றுத்தந்த பெருமையை உணர்த்தும் அப்பர் பிரான் அவனது கருணையை, நாம் செய்த தவற்றினை உணர்ந்து அதற்காக வருந்தி அழுதால் பெறலாம் என்ற உண்மையை பதிகத்தின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் உணர்த்துகின்றார். நாம் இன்றாவது நாம் இந்நாள் வரை செய்த தவறுகளை உணர்ந்து, வருந்தி, இறைவனின் கருணையை இறைஞ்சி அழுது பெற்று, வாழ்வினில் உய்வினை அடைவோமாக. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.