பின்னணி:
திருப்பழனம் சென்ற அப்பர் பெருமான் அங்கிருந்து அருகிலிருந்த திங்களூர் என்ற தலத்திற்குச் செல்கின்றார். திருநாவுக்கரசரைத் தனது தெய்வமாக ஏற்றுக்கொண்ட அப்பூதி அடிகள் என்ற நாயனார் வாழ்ந்து வந்த தலம் திங்களூர். திங்களூர் வந்த அப்பர் பிரான் கடைத்தெருவில் திருநாவுக்கரசர் மருத்துவசாலை, திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் அன்னதான சாலை என்று பல இடங்களில் தனது பெயரைக் கண்டு வியப்பு அடைந்து, அவைகளை நிறுவியவர் யார் என்று வினவுகின்றார். அதற்கு அவற்றை நிறுவியவர் அப்பூதி அடிகள் என்றும் அவரது இல்லம் அருகில் உள்ளது என்றும் அங்குள்ளோர் விடையளித்தனர். அப்பூதி அடிகளின் இல்லம் சென்று அவரை சந்தித்த அப்பர் பிரான், அவர் நிறுவிய அமைப்புகளுக்கு அவரது பெயரை இடாமல் வேறு ஒருவர் பெயரை இட்டது ஏன் என்று கேட்டார்.
வந்தவர் நாவுக்கரசர் என்பது தெரியாமல், சைவ சமயம் மறுபடியும் தழைப்பதற்கு காரணமாகவும், சிவபிரானின் அருளை பூரணமாகப் பெற்றதால் சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தப்பிய அடிகளாரை வேறு எவரோ ஒருவர் என்று கூறிய நீர், சைவர் தானா, நீர் யார் எங்கிருந்து வருகின்றீர் என்று அப்பூதி அடிகள் மிகவும் கோபமாக கேட்டார். சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்த பின்னர் சூலை நோய் கொடுக்கப்பட்டு சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அடியேன் யான் என்று வந்தவர் பதில் கூறினார். வந்தவர் திருநாவுக்கரசர் என்பதை அறிந்த அப்பூதி அடிகளார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவர் தமது இல்லத்தில் அமுது அருந்தவேண்டும் என்று வேண்டினார்.
அப்பர் பிரானுக்கு அமுது படைப்பதற்காக கொல்லையிலிருந்து வாழையிலை அறுக்கச் சென்ற அடிகளாரின் மூத்த மகன், பாம்பு தீண்டவே இறந்தான். மகன் இறந்த விவரம் அறிந்தால் அப்பர் பிரான் உணவு கொள்ளமாட்டார் என்று பயந்து, மகன் இறந்ததை மறைத்து, அப்பூதி அடிகள் அப்பர் பிரானுக்கு அமுது படைக்க முற்பட்டார். உணவு உட்கொள்ளும் முன்னர், இல்லத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் திருநீறு அணிவிக்கத் திருவுள்ளம் கொண்ட அப்பர் பிரான், அங்கே அடிகளாரின் மூத்த மகன் இல்லாமல் போகவே அவரையும் அழைத்து வருமாறு கோரினார். அப்பூதி அடிகளார் அவன் இப்போது உதவான் என்று மறுமொழி கூறவே அதனைக் கேட்ட அப்பர் பிரான் நடந்ததை கூறுமாறு அடிகளாரை பணித்தார். தனது மூத்த மகனுக்கு நேர்ந்ததை உள்ளவாறு அப்பூதி அடிகளார் உரைக்கவே, அப்பர் பிரான் இறந்த மகனின் உடலை திருக்கோயில் முன் கிடத்தி, இந்த பதிகத்தை பாடினார்.
இந்தப் பதிகத்தின் எந்த பாடலிலும் அப்பர் பிரான் சிவபிரானிடம் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. சிறுவனை பாம்பு கடித்து அவன் இறந்த செய்தியும் நேரடியாக சொல்லப் படாமல், கடைப் பாடலில் பாம்பின் பல் குறிப்பிடப்பட்டு குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. அனைத்துப் பாடல்களிலும் சிவபிரானின் அடையாளங்களும், அவனது புகழ்ச் செயல்களும் கூறப்படுகின்றன. வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மணிவாசகப் பெருமான் பாடியதற்கு ஏற்ப, நமது தேவைகளை, நாம் சொல்லாமலே அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த சிவபிரானிடம் நாம் தனியாக வேண்டுகோள் ஏதும் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை; அவனது புகழினைப் பாடினால் போதும் நமது குறைகள் தீர்க்கப் படும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் மூலம் நமக்கு உணர்த்துகின்றார் போலும் பத்து பாடல்களும் பாடி முடிக்கப்பட்ட பின்னர் அப்பர் பிரானின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்ட சிவபிரான், சிறுவனின் உடலில் இருந்த நஞ்சினை நீக்குகின்றார்.
இந்த சம்பவத்தை குறிப்பிடும் சேக்கிழார் பெருமான், பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றை விடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்திருந்தான் என்று குறிப்பிடுகின்றார்.
அன்று அவர்கள் மறைத்தனுக்கு
அளவிறந்த கருணையராய்க்
கொன்றை நறுஞ்சடையார் தம்
கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம்
எடுத்து உடையான் சீர் பாடப் .
பின்றை விடம் போய் நீங்கிப்
பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்
ஐந்தாம் திருமுறையில் உள்ள ஒன்று வெண்பிறை என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலும், இந்த பதிகம் போன்று, ஒன்று முதல் பத்து வரை உள்ள சொற்களை முதற்சொல்லாகக் கொண்டுள்ள அடிகளை உடைய பதிகமாகும். இந்த பதிகத்தில் வரும் கொலாம் என்பது பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல் ஆகும்.
பாடல் 1:
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே
விளக்கம்:
ஒன்று என்ற சொல் ஒப்பற்றது என்ற பொருளில் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலின் முதல் அடியில் சிவபிரானது உயர்ந்த உள்ளத்தை குறிப்பிடுவதன் மூலம் அப்பர் பிரான், அடியார்களுக்கு சிவபிரான் உதவும் திறத்தை உணர்த்துகின்றார். பாம்பின் விடம் மிகவும் கொடிய வெப்பத்தை உண்டுபண்ணும். அதற்கு நேர்மாறான குளிர்ச்சியை உடைய சந்திரனை சூடியிருக்கும் சிவபிரான் என்று குறிப்பிடுவதன் மூலம், விடத்தின் தன்மையை போக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர் சிவபிரான் என்பதையும் இங்கே குறிப்பால் உணர்த்துகின்றார். சிவபிரானின் சென்னியில் இடம் பெற்றமையால், கலைகள் அனைத்தும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன், அழியாமல் நிலைத்து நிற்கும் நிலைக்கு உயர்ந்ததால், உயரும் மதி என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் கையில் ஏந்தியிருக்கும் பிரமனின் தலை, உலர்ந்ததால் வெண்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் பலி ஏற்று உலகம் திரிவது, யான் எனது என்று நாம் உணரும் நமது செருக்கினை தனது பிச்சைப் பாத்திரத்தில் ஏற்றுக்கொள்வதற்காகவே என்று பெரியோர்கள் கூறுவார்கள். யான் எனது என்ற தற்போதம் நீங்கிய நிலையில், நமக்கு இருவினை ஒப்பு என்ற குணம் வந்து சேரும். அத்தகைய குணத்தினைப் பெற்று நாம் மேலும் வினைகளைச் சேர்த்து கொள்ளாமல் இருக்கும் நிலையினையே இறைவன் விரும்புகின்றான். இத்தகைய உயர்ந்த எண்ணம் கொண்டு பலி ஏற்பதால் அவரது பலிப் பாத்திரம் மிகவும் ஒப்பற்றதாக விளங்குகின்றது. தான் எப்போழுதும் அழியாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிய தருமதேவதை இடபமாக மாறி சிவபிரானுக்கு வாகனமாக இருப்பதால், அவரது வாகனம் ஒப்பற்றதாக விளங்குகின்றது.
பொழிப்புரை:
சிவபிரானது உள்ளம் அவர் இருக்கும் ஒப்பற்ற கயிலை மலை போன்று மிகவும் உயர்வானது. சிவபிரானின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர் சிவபெருமான். தனது கையில் வெண் தலையை ஒப்பற்ற பலிப் பாத்திரமாக ஏந்தியுள்ளவர் சிவபிரான். அவரது வாகனமாகிய இடபமும் ஒப்பற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


