பாடல் 5:
கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கருப்புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனைத் திகைப்பு
ஒழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடில் கெடுவேன்
திருவில் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
விளக்கம்:
தெரு=வெளி உலகம். தான் தனது தாயின் கருவில் இருந்தபோது சிவபிரானை நினைத்து வழிபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு பாகவதத்தில் குறிப்பிடப்படும் பிரகலாதனின் சரித்திரத்தை நினைவூட்டும். நாரத முனிவர் தனது அன்னைக்குச் சொல்லிய நாராயண மந்திரத்தை செவியுற்ற கருவில் இருந்த குழந்தை பின்னாளில் திருமாலின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தது போல் அப்பர் பிரானும் சிவபிரானின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தார். கருவில் இருந்து வெளியே வந்த பின்னர் உலகியல் பொருட்களின் மயக்கத்தில் ஆழ்ந்து நிலையற்ற உலகப் பொருட்களை (சமண சமயம் உட்பட) பற்றிக் கொண்டதாக ஒப்புக்கொண்டு வருத்தப்படும் அப்பர் பிரான், தனது திகைப்பினை, மயக்கத்தை ஒழிக்க வல்லவர் சிவபிரான் ஒருவரே என்று தெளிந்த சிந்தனையுடன் இருப்பதை நாம் இங்கே காணலாம்.
தான் தனது தாயின் கருவில் இருந்தபோது இறைவனின் நினைவுடன் இருந்ததற்கு, இறைவன் தன்னை அப்போது ஆண்டுகொண்டது தான் காரணம் என்று அப்பர் பிரான் இன்னம்பர் திருத்தாண்டகத்தில் கூறுகின்றார் (ஆறாம் திருமுறை பதிக எண் 89 பாடல் 9). செரு=போர். அட்டுதல்=அழித்தல்.
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
கழல் போது தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்
தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்
இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
பொழிப்புரை:
செல்வம் கொழிக்கும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, அழகின் உருவாக விளங்கும் உமையம்மையின் கணவரே, தாயின் கருவில் இருந்த காலத்து, உலகப் பொருட்களுடன் தொடர்பு ஏதும் இல்லாததால் உனது நினைவுடன் இருந்த நான், இந்த உலகில் பிறந்தவுடன், உலகப் பொருட்களில் மயங்கி திகைத்து நிற்கின்றேன். உலகப் பற்றில் சிக்குண்டு நான் கெட்டுவிடாமல் நீ எனது திகைப்பினை நீக்கி சிந்தையை தெளிவிக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


