பின்னணி:
சமணர்கள் செய்த சூழ்ச்சியால் நீற்றறையில் தள்ளப்பட்ட அப்பர் பிரான், இறைவனின் திருவடி நீழல் எவ்வாறு தனக்கு குளிர்ச்சியையும், தனது ஐந்து புலன்களுக்கும் இனிமையையும் தந்தது என்பதை அப்போது அருளிய பதிகத்தில் குறிப்பிட்டார்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
தன்னை ஆட்கொண்ட இறைவனின் திருவடி நீழலின் இனிமையை அனுபவித்த அப்பர் பிரான், சிவபிரானின் திருவடிகளின் பெருமையை விளக்கும் முகமாக ஒரு பதிகமும், அருளுகின்றார். இந்த பதிகம், திருப்பாதிரிப்புலியூருக்கு அருகில் கரையேறிய பின்னர் திருவதிகை வந்து சேர்ந்தவுடன் பாடிய பதிகம் ஆகும். இந்த பாடலின் பெரும்பாலான அடிகளில், இறைவனின் திருவடி குறிப்பிடப்பட்டு அதன் பெருமை உணர்த்தப்படுகின்றது. இந்த பதிகம் திருவடித் தாண்டகம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பரவுவார்=புகழ்ந்து பாடும் அடியார்கள். பறைக்கும்=நீக்கும், போக்கும்.
அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி
அருமறையான் சென்னிக்கு அடியாம் அடி
சரவணத்தான் கை தொழுது சாரும் அடி
சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரை விரவு தென்கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி
இறைவனின் திருவடியைப் பாடி மகிழ்ந்த அப்பர் பெருமானுக்கு அந்த திருவடிகளைக் காணவேண்டும், அந்த திருவடிகள் தனது தலையில் மீது பாதிக்கப்பட வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தது போலும். தூங்கானைமாடத்தில் தனது விண்ணப்பங்களை இறைவன் முன்னர் வைத்த பதிகத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதா அல்லையா என்பதை நாம் அறியமுடியாதபடி பதிகத்தின் ஏழு பாடல்கள் சிதைந்துவிட்டன. ஆனாலும் தனது விருப்பத்தை அப்பர் பிரான் தெரிவித்திருந்தால் நிச்சயமாக சிவபிரான் அதனை நிறைவேற்றி இருப்பார் என்று நாம் நம்பலாம். எனவே இந்த விருப்பம் அப்போது தெரிவிக்கப்படவில்லை என்றே நாம் கொள்ளலாம். மேலும் தனது உடல் தூய்மையற்றது என்று கருதியதால் அப்பர் பிரான் இந்த வேண்டுகோளை அப்போது விடுக்கவில்லை போலும்.
கோவாய் முடுகி என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தினை அப்பர் பிரான் தொழுது எழுந்த பின்னர், வானிலிருந்து ஒரு குரல் அவரை நல்லூருக்கு வாவா என்று அழைத்தது. இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்த அப்பர் பிரான், அவ்வாறே நல்லூர் சென்றணைந்தார். அங்கே இறைவனைத் தொழுது எழுந்தபோது, உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்ற சொல்லுடன் சிவபிரான் அப்பர் பிரானின் தலை மீது தனது திருவடியினைப் பதிக்கின்றார். இந்த நிகழ்ச்சியைக் கூறும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நன்மை பெருகு அருள் நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்
பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று
அவர்க்கு
சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்
உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்ற தொடரினை நாம் கவனமாக பார்த்தல், உன்னுடைய என்று அப்பர் பிரானை ஒருமையிலும், தன்னை முடிக்கின்றோம் என்று பன்மையிலும் சிவபிரான் கூறிக் கொண்டதை நாம் உணரலாம். ஆனால் சேக்கிழார் பெருமான் தனது பாடலில், திருநாவுக்கரசரை அவர் என்று பன்மையிலும், சிவபெருமானை சூட்டினான் என்று ஒருமையிலும் குறிப்பிடுவதை நாம் காணலாம். மேலும் மன்னு (புகழ் வாய்ந்த) திருத்தொண்டர் என்று குறிப்பிடுவதன் மூலம் நாயனாரின் பெருமையும் இங்கே உணர்த்தப்படுகின்றது. பெரிய புராணத்தின் மையக் கருத்தே, இறைவன் தொண்டருக்குள் அடக்கம் என்பதால், சேக்கிழார் இறைவனை ஒருமையில் குறிப்பிட்டு நாயனாரை பன்மையில் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாக உள்ளது.
இறைவனிடம் திருவடி தீக்கை பெற்ற அடியார்கள், மூவர்; அப்பர் பிரான், மணிவாசகர் மற்றும் சுந்தரர். சித்த வடமடத்தில் முதியவராக வந்த இறைவனின் திருப்பாதங்கள் தனது தலை மீது பட்டபோது, வந்த முதியவர் இறைவன் தான், என்பதை சுந்தரர் உணரவில்லை. மணிவாசகப் பெருமான், பெருந்துறையில் குருந்த மரத்தடியில் காட்சி அளித்த இறைவனை, இறைவனாக கருதவில்லை; குருவாகத் தான் உணர்ந்தார். எனவே அப்பர் பிரான் ஒருவர் தான், திருவடி தீக்கை பெற்றபோது இறைவனின் திருப்பாதங்கள் தனது தலை மீது பதிக்கப் படுகின்றது என்ற உணர்வுடன் இருந்தவராகத் திகழ்கின்றார்.
பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு என்று பொருள். பொதுவாக அப்பர் பிரான் பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அதிகமாக பாடியுள்ளார். ஆனால் ஒரு சில பதிகங்கள், உணர்ச்சி மேலீட்டால் ஒரு பாடல் அதிகமாக கொடுக்கப்பட்டு பதினோரு பாடல்கள் கொண்ட பதிகங்களாகத் திகழ்வதை நாம் காணலாம். இந்தப் பதிகம் அத்தைகைய பதிகங்களில் ஒன்றாகும். இறைவனின் திருப்பாதங்கள் தலையில் பதிந்த நினைவில் பாடப்படும் போது மகிழ்வு தானே மேலோங்கி நிற்கும்; பாடல்களின் எண்ணிக்கை எவருக்கும் நினைவில் இருக்காது அல்லவா.
இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான், தனது தலையின் மேல் இறைவனின் திருவடி படிந்ததாக கூறுகின்றார். இந்தப் பாடல் நமக்கு திருவாசகத்தின் சென்னிப்பத்து பதிகத்தினை நினைவூட்டும். இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் மணிவாசகர், சிவபெருமானின் திருவடி தனது தலையின் மீது திகழ்ந்ததாக குறிப்பிட்டாலும், பாடல்களின் பெரும்பகுதி திருவடியின் பெருமைகளைப் பேசுகின்றன. அப்பர் பெருமானும், இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இறைவனின் திருவடிக்கு அடைமொழிகள் கொடுத்து சிறப்பிப்பதை நாம் உணரலாம். சென்னிப்பத்துப் பதிகத்தின் கடைப் பாடலில் சிவபிரானின் திருநாமத்தைப் பாடித் திரியும் பத்தர்களை அழைக்கும் மணிவாசகர், தங்கள் பாசங்களை அறவே அழித்து இறைவனைப் பணிந்தால் சிவபிரானின் திருவடிகள் அவர்களது தலை மீதும் திகழும் என்று பக்தர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை நாம் உணரலாம்.
முத்தனை முதல் சோதியை முக்கண் அப்பனை முதல்
வித்தினை
சித்தனைச் சிவலோகனைத் திருநாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள் இங்கே வம்மின் நீர் உங்கள் பாசம் தீரப்
பணிமினோ
சித்தம் ஆர் தரும் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே
பாடல் 1:
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணி மகுடத்து ஏறத் துற்ற
இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
விளக்கம்:
நைய வைத்தார்=மேன்மேலும் அன்பு பெருகுதலால் மனம் நைந்து போதல்; மனம் மேலும் இளகுதல்; உலகியல் பாசங்கள் சிறிது சிறிதாக கழிந்து அறவே அழிந்து போன நிலையை குறிப்பிடுவதாகவும் பொருள் கூறுவார்கள். மறுபடியும் மறுபடியும் நம்மை பிறவிப் பெருங்கடலில் ஆழ்த்துவதால், வினைகள் தீவினைகள் என்று குறிக்கப்பட்டுள்ளன. திருகு=முறுகிய, வலிமையான, அதிகமான; துருவி=தேடி; பில்கு=ஒழுகிய
தன்னையே நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகள், அவர்கள் பால் சாராமல் நீக்குபவர் சிவபெருமான் என்று முதல் அடியில் அப்பர் பிரான் கூறுகின்றார். தீவினைகள் நீக்கப்படுவதால் சிவபிரானை நினைந்து உருகும் அடியார்களின் பிறவிப்பிணி நீங்குகின்றது. பிறவிப்பிணி நீங்கி முக்திபேறு பெரும் ஆன்மாக்கள் இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத பேரானந்தம் பெரும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தால் யார் தான் இறைவனிடம் மேலும் அன்பு கொள்ளமாட்டார்கள். இந்த செய்தியைத் தான், நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகள் அவர்களைச் சார்ந்து நில்லாமல் விலகுமாறுச் செய்வதால் சிவபிரான் பால் அடியார்கள் வைத்துள்ள அன்பு மேன்மேலும் பெருகுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
மணிமகுடம் அணிந்த வானோர்கள் சிவபெருமானை வணங்கும்போது அவர்களின் மகுடங்களில் உள்ள மலர்களிலிருந்து வடியும் தேன் சிவபெருமானின் பாதத்தை நனைக்கின்றது என்று அப்பர் பெருமான் கூறுகின்றார்.
பொழிப்புரை:
நல்லூரில் உள்ள எம்பெருமான், தன்னையே நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகளை நீக்கி, அவர்களுக்கு பிறப்பு இறப்பு சுழற்சிகளில் இருந்து விடுதலை அளிவித்து அவர்களை மகிழ்வித்து அவர்கள் தன்மேல் அதிகமான அன்பு கொள்வதால் மேன்மேலும் அந்த அடியார்கள் உள்ளம் நைந்து உருகுமாறு செய்கின்றார், அவர் சினத்துடன் தன்னை வந்து எதிர்த்த யானையின் தோலை உரித்து அதனைப் போர்வையாகக் கொண்டவர்; பிறையினைச் சூடியவர். சிறந்த மலர்களைத் தேடித் தங்களது மணிமகுடத்தில் அணிந்துள்ள தேவர்கள், சிவபிரானை வணங்கும்போது அவர்கள் சூடியுள்ள மலர்களிலிருந்து வடியும் தேன் சிவபிரானின் பாதங்களை நனைக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவடியை எனது தலை மேல் வைத்த நல்லூர் பெருமானாகிய சிவபிரான் மிகவும் நல்லவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


