ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 6

உள்ளம் நெகிழ்ந்து

News image
Updated On :6 ஜனவரி 2018, 9:34 am

பாடல் 6:
    ஏறது ஏறும் இடைமருது ஈசனார்
    கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
    ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
    ஊறிஊறி உருகும் என் உள்ளமே

 
விளக்கம்:
இறையுணர்வு தனது உள்ளத்தில் ஊறி, உள்ளம் நெகிழ்ந்து உருக வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுவது, நமக்கு மணிவாசகரும் ஞான சம்பந்தரும் அருளிய சில பாடல்களை நினைவூட்டுகின்றன. அந்த பாடல்களை நாம் இங்கே காண்போம்.

நமச்சிவாயப் பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.49.3) பெருமானின் பெருமையை நினைந்து நினைத்து உள்ளம் நெகிழ்ந்து, தங்களது கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு அவனது பஞ்சாக்கர மந்திரத்தை தியானிக்கும் அடியார்களை தேவர்களின் நிலைக்கு உயர்த்துவது நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நெக்குள் என்ற தொடரை உள் நெக்கு என்று மாற்றி, உள்ளம் நெகிழ்ந்து என்று பொருள் கொள்ள வேண்டும்.  
    
    நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
    அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
     தக்க வானவராத் தகுவிப்பது
     நக்கன் நாமம் நமச்சிவாயவே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பொது பதிகத்தின் (5.90) ஒன்பதாவது பாடலில் உள்ளம் நெகிழ்ந்து தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் இறைவன் புகுந்து நிற்பான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அதே பாடலில் போலியாகத் தம்மைத் தொழும் அடியார்களை நினைத்து ஏளனச் சிரிப்பு சிரிக்கும் இறைவன் என்று கூறுவதன் மூலம், இறைவன் நமது பக்தியின் தரத்தினை அறிந்து கொள்வார் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். 
    
    நெக்கு. நெக்கு நினைபவர் நெஞ்சுளே
    புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
    பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
    நக்கு நிற்பார் அவர் தம்மை நாணியே

மணிவாசகர் தனது திருச்சதகத்தின் கடைப் பாடலில், தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகையில், இறைவனையே பாடிப் பாடி, உள்ளம் நைந்து நெகிழ்ந்து உருக வேண்டும் என்றும், அந்த உருக்கத்தின் பயனாக தன்னை மறந்து ஆடவேண்டும் என்றும் கூறுகின்றார். இந்த நிலையிலே தான் இறைவனின் மலர்ப் பாதங்களைச் சென்று சார வேண்டும் என்றும் தனது ஆசையை இந்த பாடலில் வெளிப்படுத்துகின்றார். அவ்வாறு இணைவதற்கு உடல் தடையாக இருப்பதால், புழுக்கள் நிறைந்த உடலிலிருந்து தனது உயிரைப் பிரித்து, வீடுபேற்றினை அருள வேண்டும் என்று வேண்டும் பாடல் இது. போது=மலர்;
  பாட வேண்டும் நான் போற்றி நின்னையே
            பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு  
  ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
            ஆடு நின்கழல் போது நாயினேன்
  கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்கூடு
           நீக்கு எனை போற்றி பொய்யெலாம்
  வீட வேண்டும் நான் போற்றி வீடு தந்து
          அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே  

ஐந்து புலன்களாகிய சேற்றில் அழுந்தி இருக்கும் தான், அதனின்றி மீண்டு வர முடியாமால் திணறுவதையும், இந்த நிலையில் தான் ஏதும் செய்ய முடியாமல் தவிப்பதையும் உணர்த்தும் மணிவாசகர் தான் மனம் நெகிழ்ந்து இறைவனைப் போற்றிப் புகழ்வது என்றோ என்று ஏங்கும் பாடல் புணர்ச்சிப் பதிகத்தின் மூன்றாவது பாடலாகும். மணலில் தோண்ட சில இடங்களில் ஊற்று வரும். ஊற்றினை மேலும் மேலும் தோண்டத் தோண்ட, நீர் பெருகும். அவ்வாறு பெருக்கெடுக்கும் நீரினால் ஊற்றினைச் சுற்றியுள்ள மண் சுவர்கள் சரிந்து விழுவதை நாம் காணலாம். அவ்வாறு தனது மனதில் பெருகி வரும் இறைவன் பால் தான் கொண்டுள்ள அன்பு, ஊற்று நீரினால் மணல் சரிவதைப் போன்று, அன்பினால் நெஞ்சத்தின் கட்டு இளகி உருக வேண்டும் என்று தனது விருப்பத்தினை மணிவாசகர் இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.  
    ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி தலத்து ஐம்புலன்
                                                                                       ஆய
    சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து சிவன் எம்பெருமான்
                                                                                       என்று ஏத்தி
    ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள்ளே உருகி ஓலம்
                                                                                       இட்டுப்
    போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா
                                                                                       மணியே புணர்ந்தே

 
பொழிப்புரை:
இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள இடைமருது தலத்தின் தலைவனாகிய ஈசனார், தனது திருநாமத்தைச் சொல்லும் அடியார்களின் வினைகளை முற்றிலும் நீக்கும் குழகனார் ஆவார். பாய்ந்து வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் வைத்து மறைத்த அழகராகிய இறைவனை எண்ணி எண்ணி எனது உள்ளம் உருகுகின்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.