ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 10

கரும்பினும் இனியன்

News image
Updated On :6 ஜனவரி 2018, 9:37 am

பாடல் 10:
    கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
    பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
    தனி முடி கவித்து ஆளும் அரசினும்
    இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே

விளக்கம்:
இனியன் என்றார் சொல்லினை, கனியினும் இனியன், கரும்பினும் இனியன், பாவை நல்லாரினும் இனியன், அரசினும் இனியன் என்று கூட்டி பொருள் கொள்ளவேண்டும். சிறிய குழந்தைகள் விரும்பி உண்பது இனிப்பான பழங்களை; சற்று வளர்ந்த குழந்தைகள் கரும்பினை விரும்புவார்கள். வாலிப வயதில் இருக்கும் ஆடவர்கள் விரும்புவது அழகிய இளம் பெண்களை; வயது முதிர்ந்தோர் விரும்புவது நல்லாட்சி நடத்தும் அரசினை; இவ்வாறு நான்கு நிலைகளில் இருக்கும் மனிதர்கள் விரும்பும் பொருட்களை விடவும் இனியனவாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுவதன் மூலம், அனைத்து வகை மாந்தர்களுக்கும் பெருமான் இனியவனாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. 

அப்பர் பிரான் சிவபெருமான் தனக்கு இனியவர் என்று சொல்வது போல் காரைக்கால் அம்மையாரும் சிவபிரான் தனக்கு இனியவன் என்றும் சிவபிரான் பற்றிய நினைவுகளை தனது மனத்தில் சேமிப்பாக (வைப்பாக) வைத்ததால் தான் இன்புற்று இருப்பதாகவும் அற்புதத் திருவந்தாதியில் கூறுகின்றார்.
    எனக்கினிய எம்மானை ஈசனை யான் என்றும்
    மனக்கினிய வைப்பாக வைத்தேன் -- எனக்கென்றும்
    கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
    உண்டேன் எனக்கு அரியது ஒன்று

தனிமுடி கவித்து ஆளும் அரசன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகத்தை ஒரே குடைக்கீழ் ஆளும் அரசனுக்கு வெளிப்பகை ஏதும் இருக்காது. எனவே அந்த மன்னனின் முழு கவனமும் மக்களின் நலனைப் பாதுகாப்பதில் இருக்கும். எனவே அத்தகைய மன்னவனை மக்கள் அனைவரும் விரும்புவார்கள். 

பலருக்கும் இனியவனாக உள்ள இறைவன், ஏன் அரக்கன் இராவணன் மனமும் உடலும் புண்படுமாறு திருவிரலை மலையின் மீது ஊன்றினான் என்று அப்பர் பிரான் கேள்வி கேட்ட பாடல் (5.21.10)  இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சனி, சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகிய கோள்களைக் கடிந்துத் தனது அடிமையாக வைத்த அரக்கன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கனிய=மனம் புண்பட;
    சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
    முனிவனாய் முடி பத்து உடையான் தனைக்
    கனிய ஊன்றிய காரணம் என் கொலோ
    இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே

திருவாரூர் தலத்தின் மீது பாடிய கரையும் கடலும் என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.73.2) சுந்தரர் இறைவனை இனியன் என்று குறிப்பிடுகின்றார். தில்லைச் சிதம்பரத்தில், நம் பால் ஆரூர் வந்து அணைக என்று அசரீரி மூலம் பெருமான் பணித்தபடி திருவாரூர் சென்ற சுந்தரர், ஆரூர் எல்லையில் அவரை வரவேற்க குழுமி இருந்த அடியார்களை வணங்கி, அவர்களிடம் ஆரூர் இறைவன் தம்மை ஆண்டுகொண்டு அருளுமாறு அவர்களும் வேண்டவேண்டும் என்று அவர்களிடம் விண்ணப்பம் வைத்த பதிகம். அனைத்துப் பொருட்களுக்கும் இனியவன் என்று பெருமானை சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார்.      
தனியன் என்று எள்கி அறியேன் தன்னைப் பெரிதும்
                                                                              உகப்பன்
முனிபவர் தம்மை முனிவன் முகம் பல பேசி
                                                                             மொழியேன்
கனிகள் பலவுடைத் சோலை காய்க்குலை
                                                                             ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும்
                                                                            ஆள்வரோ கேளீர்  
     

பொழிப்புரை:
நாம் அனைவரும் விரும்பு உண்ணும் பழத்தினும் இனியவனாக இருப்பவன் சிவபெருமான்; தனது இனிய சுவையினால் அனைவரும் விரும்பும் தன்மையில் உள்ள முதிர்ந்து வளர்ந்த கரும்பின் சாற்றினை விடவும் இனியவனாக இருப்பவன் பெருமான். பனியில்  நனைந்த மலர்கள் போன்று மென்மையான கூந்தல் கொண்டுள்ள இளமையான மங்கையர்களை விடவும் இனிமையாக தோன்றுபவன் சிவபெருமான். தனி ஒரு அரசனாக உலகினை ஒரு குடைக்கீழ் ஆளும் அரசன், தனது கவனம் முழுவதையும் நல்லாட்சி செய்வதில் செலுத்துவதால் மக்களுக்கு இனியவனாக இருப்பதை விடவும் இனிமையாக இருப்பவன் சிவபெருமான். தன்னைச் சரண் அடைந்த அடியார்களுக்கு இவ்வாறு இனியவனாக இருப்பவன் இடைமருது இறையவனாகிய சிவபெருமான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.