72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 11

செருக்கு கொண்டு
72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 11
Updated on
2 min read


பாடல் 11
    முற்றிலா மதி சூடும் முதல்வனார்
    ஒற்றினார் மலையால் அரக்கன் முடி
    எற்றினார் கொடியார் இடைமருதினைப்
    பற்றினாரைப் பற்றா வினை பாவமே

விளக்கம்:
முற்றிலா மதி=முற்றாத சந்திரன், இளம்பிறைச் சந்திரன்; ஒற்றுதல்=மெதுவாக தொடுதல்; கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தாமல் மெதுவாக வைத்தார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் தனது கால் விரலை மெதுவாக வைத்த நிலையே, அரக்கன் இராவணன் வாய் விட்டு கதறும் நிலைக்கு அவனைத் தள்ளியது என்றால், பெருமான் வலிய ஊன்றியிருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை நமது கற்பனைக்கு அப்பர் பிரான் விட்டு விடுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு அவர் அருளிய கயிலாய நேரிசைப் பதிகத்தினை (4.47) நினைவூட்டுகின்றது.  அப்பர் பிரான், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், பெருமான் ஊன்றவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது கால் பெருவிரலை ஊன்றியிருந்தால், எவருக்கும் அரக்கன் இராவணனை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஆறாவது பாடலை நாம் இங்கே காண்போம்.
களித்தவன் கண் சிவந்து கயிலை நன்மலையை ஓடி
நெளித்து அவன் எடுத்திடலும் நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவன் ஊன்றி இட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்
மளித்து இறை ஊன்றினானேன் மறித்து நோக்கில்லை அன்றே 

களித்தவன்=தனது வலிமையில் செருக்கு கொண்டு, தன்னை வெல்பவர் எவருமில்லை என்று மகிழ்ந்து இருந்தவன்; நெளித்து=தனது உடலினை வளைத்து; நேரிழை=உயர்ந்த அணிகலன்களை அணிந்த பெண்மணி, இங்கே பார்வதி தேவி; வெளித்தவன்=தன்னை மறைத்துக் கொள்ளாமல் அடியார்களுக்கு வெளிப்படுபவன்; வெற்பு=மலை, இங்கே கயிலை மலை; மளித்து=விரலை மடித்து அழுத்தமாக; மறித்து=மீண்டும் 

பொழிப்புரை:
தக்கனது சாபத்தினால் தேய்ந்து தேய்ந்து சிறிய ஒற்றைப் பிறையுடன் வந்த சந்திரனைத் தனது சடையில் சூடிய முதல்வரும், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஒற்றுவதன் மூலம் அரக்கன் இராவணனது பத்து தலை முடிகளும் நொறுங்குமாறு செய்த வல்லமை உடையவரும், இடபச் சின்னத்தைத் தனது கோடியில் உடையவரும், ஆகிய இடைமருது இறைவனைப் பற்றிய அடியார்களை வினைகளும் வினைகளால் ஏற்படும் இடர்களும் பற்றமாட்டா.    

முடிவுரை:
முக்தித் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இடைமருது தலத்தில் உறையும் ஈசனைத் தொழும் அடியார்களை வினைகள் பற்றாது என்றும் அவர்கள் பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள் என்றும் பதிகத்தின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பதினோராவது பாடல்களிலும் கூறும் அப்பர் பிரான், தைப்பூசத் திருநாளில் காவிரி நதியில் நீராடி பயன்பெறுமாறு பதிகத்தின் முதல் பாடலில் நம்மை வழிப்படுத்துகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் ஆறாவது பாடலிலும், இறைவனை நினைத்துத் தனது உள்ளம் நெகிழ்ந்த தன்மையை குறிப்பிட்டு, நாமும் அவரை பின்பற்றுமாறு நம்மைத் தூண்டுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் அனைத்து பருவத்தினருக்கு இனியவனாக இறைவன் இருப்பதை உணர்த்திய அப்பர் பிரான், அந்த இனிய நினைவுகளில் ஆழ்ந்து, ஒரு பாடலை அதிகமாக அளித்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை நாம் உணரலாம். அப்பர் பிரான் காட்டிய வழியில் நாமும் சென்று, இறைவனின் அருளினைப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்து இன்பம் அடைவோமாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com