மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

74. நல்லர் நல்லதோர் - பாடல் 2

தூண்டுதலின் பேரில்

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 6:30 pm

பாடல் 2: 
    நாவலம் பெரும் தீவினில் வாழ்பவர்
    மேவி வந்து வணங்கி வினையொடு
    பாவம் ஆயின பற்று அறுவித்திடும்
    தேவர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
இமய மலையின் தெற்கே உள்ள இந்தப் பாரத நாட்டுக்கு நாவலந்தீவு என்று பெயர். வடமொழியில் ஜம்புத்வீபம் என்று அழைக்கப் படுகின்றது. வடமொழி மந்திரங்களைச் சொல்லி சடங்குகள் செய்வோர், தாங்கள் சடங்குகளைத் தொடங்கும் நேரத்தில் சொல்லும் சங்கல்பத்தில் இந்த நாட்டினை ஜம்புத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே என்று குறிப்பிட்டு தாங்கள் இருக்கும் இடத்தினை குறிப்பிடுவார்கள். நாவல் வடமொழியில் ஜம்பு என்று அழைக்கப் படுகின்றது. கயிலாய மலையின் அருகில் இருக்கும் மானசரோவர் ஏரியின் நடுவில் ஒரு காலத்தில் நாவல்மரம் இருந்ததாக நம்பப் படுகின்றது.  

நமது நாட்டினை நாவலந்தீவு என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். சமணர்களின் தூண்டுதலின் பேரில், அப்பர் பிரானை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்த பல்லவ நாட்டு அமைச்சர்களிடம், தன்னைப் பல்லவ மன்னவனின் ஆணை கட்டுப் படுத்தாது என்றும் தான் விசாரணைக்கு வர முடியாது என்றும் முதலில் சொல்லிய அப்பர் பிரான், தனது நிலையை வலியுறுத்தும் முகமாகப் பதில் அளிக்கும் பாடல் இது. பல்லவ மன்னன் என்ன, இந்த நாவலம் தீவினுக்கு அரசனாக இருந்தாலும், அவன் தனது காவலரை விடுத்து என்னை வருமாறு கட்டளை இட்டால், நான் அவனது ஆணைக்குக் கீழ்ப்படியமாட்டேன் என்று உறுதியாகக் கூறுவதை நாம் உணரலாம். நமர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று முழங்கிய அப்பர் பிரானின் உறுதி இந்தப் பாடலிலும் வெளிப்படுவதை நாம் உணரலாம். மன்னனுக்குக் கட்டுப்பட மாட்டேன் என்று முழங்கிய அப்பர் பிரான் தான் எவருக்கு ஆட்படுவேன் என்பதையும் இந்தப் பாடலில் உணர்த்துகின்றார். சிவபெருமான் திருநாமத்தைத் தங்களது நாவினால் சொல்லும் அடியார்களே தன்னை ஆளும் தகுதி பெற்றவர்கள் என்று சொல்லி, சிவபிரானது அடியார்களுக்குத் தலை வணங்குவேன் என்று இந்தப் பாடலில் கூறுகின்றார்.
   
மூவுருவின் முதலுருவாய் இருநான்கான
          மூர்த்தியே என்று முப்பத்து மூவர்
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
           செம்பவளத் திருமேனிச் சிவனே என்னும்
நாவுடையார் நமையாள உடையார் அன்றே
            நாவலம் தீவகத்தினுக்கு நாதரான
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவமலோம்
            கடுமையொடு களவற்றோமே

பொழிப்புரை:
நாவலந்தீவு என்று அழைக்கப்பட்ட இந்திய நாட்டில் வாழும் மனிதர்கள் பெருமானை நெருங்கி வந்து அவரை வணங்கி, தங்களது வினைகள், பாவங்கள் மற்றும் தாங்கள் உலகப்  பொருட்களின் மீது கொண்டுள்ள பற்று ஆகியவற்றை அறுத்துக் கொள்கின்றார்கள். அத்தகைய தேவராகிய பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.