பாடல் 3:
பொத்தார் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள் தம்
சித்தா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
விளக்கம்:
பொத்து=ஓட்டை; பொத்தார்=ஓட்டைகளை உடைய; குரம்பை=உடல்; ஐவர்=மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகள்; மறுக்கு=மயக்கம்; மத்தார் தயிர்=மத்தால் கடையப் படும் தயிர் போல் படுகுழி பவ்வத்தன்ன என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், மத்தால் கலக்கப்படும் தயிர் போல் தனது சிந்தை கலங்குவதால், தான் இறைவனைக் குறித்து பக்தியுடன் பாடமுடியாமல் இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார்.
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர் மூலட்டனாரே
மத்தால் கடைந்து கலக்கப்படும் தயிர் கலங்குவது போல், புலன்கள் நெருப்பு போல் என்னைப் பற்றிக்கொள்வதால் எனது மனம் கலங்கி இருக்கின்றது. அதனால் மேலும் பல பிறவிகளுக்கு வழிகோலும் செயல்களைச் செய்யும் என்னை விட்டுவிடாதீர் என்று நீத்தல் விண்ணப்பத்தின் முப்பதாவது பாடலில் மணிவாசகர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.
மத்துறு தண்தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி
வித்துறுவேனை விடுதி கண்டாய் வெண்தலை மிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர் நெடு மாமாலை சுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்து அணி சச்சையனே
வித்துறுவேன்=அடுத்த பிறவிக்கு அடிகோலுபவன்; மிலைச்சுதல்=தலையில் சூடுதல். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய வெண்தலை தன்னைக் கொல்ல வந்த போது அதனைத் தனது திருக்கரத்தால் பிடித்துத் தனது சடையினில் சிவபிரான் தரித்தார் என்பது வரலாறு. கொத்துறு போது=கொத்தாக உள்ள பூக்கள்.. குடர் நெடுமாலை=சரபமாக மாறி நரசிம்மரின் திறனை அடக்கியபோது, நரசிம்மரின் குடலை மாலையாக அணிந்து கொண்ட நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. தத்துறு நீறு=உடலில் பரந்து பூசப்பட்ட திருநீறு. ஆரம்=சந்தனக் கட்டை.
பொழிப்புரை:
தேவர்கள் உள்ளத்தில் இருப்பவனாகிய சிவபிரானே, திருச்சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, ஒன்பது துளைகளை உடைய எனது உடலினில் புகுந்துள்ள ஐந்து பொறிகளும், தயிரினை மத்து கடைந்து குழப்புவது போல் எனது சிந்தனையை மயக்கி புகலிடமான உன் மேல் நான் கொண்டுள்ள பற்றினை குலைக்க முயற்சி செய்கின்றன. உனது திருவடிகளை அடைக்கலமாக பற்றியுள்ள அடியேனின் சிந்தையில் உள்ள மயக்கத்தைத தெளிவித்து அருளவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


