பாடல் 5:
தோடொரு காதனாகி ஓர் காது இலங்கு சுரி சங்கு
நின்று புரளக்
காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய
காதல் நகர் தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறி
நீர் தெளிப்ப விரலால்
நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆகும்
நனிபள்ளி போலும் நமர்காள்
விளக்கம்:
கனல்=நெருப்பு; வீடு உடன் எய்துவார்கள்=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை இந்த பிறவி முடிந்தவுடனே அடையும் தகுதி படைத்தவர்கள்; வெறிநீர்=நறுமணம் உடைய நீர்; விதி=முறை; தினமும் பெருமானை நோக்கி செய்யப்படும் பூஜை முதலிய வழிபாடுகள் முடிந்த பின்னர், மலர்கள் தோய்ந்து இருக்கும் நீருடன் சிறிது பாலையும் சேர்த்து, பூமியில் தெளித்து இதமர்க்யம் என்று மூன்று முறை சொல்லி முடிப்பார்கள். இந்த பழக்கத்தையே, விதி என்று வெறிநீர் என்று விரலால் தெளிப்ப என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அந்தணர் குலத்தில் அவதரித்த மூன்று வயதுக் குழந்தை, தனது தந்தையார் பூஜை செய்யும் முறையினை உற்று கவனித்து தான் உணர்ந்த செய்திகளை பதிகத்தில் கூறும் நயத்தை நாம் உணரலாம்.
தெளிந்த நீர்நிலைகளில் அந்தணர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் சந்தியா வந்தனம் செய்வது வழக்கம். அத்தகைய நீர்நிலைகளில் மலர்ந்துள்ள மலர்களின் நறுமணம் நீருடன் கலந்து இருப்பதை வெறிநீர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. மேலும் இந்த சந்தியாவனத்தின் ஒரு பகுதியாக சூரியனுக்கு அர்க்கியம் வழங்கி சூரியன் மூலமாக அனைத்து தேவர்களுக்கும் தினமும் அர்க்கியம் வழங்கும் முறையில். இரண்டு கைகளையும் இணைத்து நீரினை முகந்து, விரல்களின் நுனியால் அந்த நீரினை தெளிப்பது வழக்கம். எனவே இவ்வாறு செய்யப்படும் சந்தியாவந்தனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்ற விளக்கமும் பொருத்தம் ஆனதே.
தோடுடைய செவியன் என்று ஒரு காதினில் தோட்டினை அணிந்த பெருமான் என்று தனது முதல் பதிகத்தினை தொடங்கிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் மற்றொரு காதினில் வெண் சங்குக் குழையினை அணிந்துள்ளார் என்று உணர்த்துகின்றார். சுரிசங்கு=வெண் சங்கினால் செய்யப்பட்ட வளைந்த குழை; தோடும் குழையும் அணிந்த பெருமான் என்று, தேவியை தனது உடலில் ஏற்றுல் பெருமானின் மாதொரு பாகன் கோலத்தை பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் திருஞான சம்பந்தரின் பதிகங்களில் மிகவும் அதிகமாக உள்ளன.
தோட்டினையும் குழையினையும் அணிந்த பெருமான் என்று செங்காட்டங்குடி தலத்து பதிகத்து பாடல் ஒன்றினில் (1.61.8) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பீடு=பெருமை; அடர்த்த=அடக்கிய, வலிமையை குறைத்த; சேடு=பெருமை; கணபதீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். செங்காட்டங்குடி என்பது தலத்தின் பெயர் இவை இரண்டையும் இணைத்து சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சேர்ந்தாடும் காடு உடையான் என்று பூத கணங்களுடன் இணைந்து பெருமான் நடனம் ஆடும் செயலை குறிக்கின்றார். காட்டில் உறைவதால் காட்டினை மட்டும் தனது இருப்பிடமாக உடையவன் என்று நினைத்து விடாதீர்கள் என்று உணர்த்தும் முகமாக, நாடு உடையான் என்று பல தலங்களிலும் நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன் இறைவன் உறைவதையும் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
தோடுடையான் குழையுடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த
பீடுடையான் போர் விடையான் பெண்பாகம் மிகப் பெரியான்
சேடுடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்
காடுடையான் நாடு உடையான் கணபதீச்சரத்தானே
புகலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (1.30.5) பொற்குழையும் தோடும் அணிந்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாதன் என்ற சொல் எதுகை கருதி நாதான் என்று நீண்டது. தாதார் மலர்=மகரந்தப் பொடிகள் பொருந்திய மலர்; ஏற முடித்து=உயர தூக்கிக் கட்டி; கன பொற்குழை=கனமாக, எடை மிகுந்து உள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதும் ஆகிய குழை அணிகலன்; தண்சடை என்று கங்கை நதியை அடக்கிய தன்மையை குறிப்பிடுகின்றார்.
காதார் கன பொற்குழை தோடு அது இலங்கத்
தாதார் மலர் தண் சடையேற முடித்து
நாதான் உறையும் இடமாவது நாளும்
போதார் பொழில் பூம்புகலி நகர் தானே
தனது இடது காதினில் தோட்டினையும் வலது காதினில் குழையையும் அணிந்துள்ள பெருமான் என்று குரங்கணின்முட்டம் தலத்து பதிகத்தில் (1.31.4) குறிப்பிடும் திருஞான சம்பந்தர், மற்றவர்களுக்கு கை கூடாத செயல்களை மிகவும் எளிதாக செய்யும் வல்லமை வாய்ந்தவர் பெருமான் என்று கூறுகின்றார். வலத்தொரு காதில் என்ற தொடரை குழை என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். வாடாததும் விரிந்து மலர்ந்ததும் ஆகிய கொன்றை மலர்களை அணிந்துள்ளவனும், தோட்டினை இடது காதினில் உடையவனும் ஆகிய பெருமான் தனது வலது காதினில் குழை ஆபரணத்தை அணிந்துள்ளான்; அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் பெருமான், ஏனோர் செய்ய முடியாத செயல்களையும் எளிதில் செய்யும் வல்லமை வாய்ந்தவன். அத்தகைய பெருமான் எப்போதும் நடனம் ஆடுபவராகவும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு உடையவராகவும் உள்ளார்.
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடார் குழையான் நல பாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே
சமணர்களின் சூழ்ச்சியினால், மத யானையைக் கொண்டு தனது தலையை இடற பல்லவ மன்னன் கட்டளையை ஏற்று தன்னை நோக்கி வந்த மதயானையைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல், அருளிய பதிகத்தின் (4.2) ஏழாவது பாடலில், பெருமானின் தோற்றத்தை விவரிக்கும் அப்பர் பிரான் தோடு மற்றும் குழை அணிந்தவனாக பெருமானைக் கண்டதை நமக்கு உணர்த்தும் பாடல் இது. குவவு=தோளின் திரட்சியை குறிப்பிடுகின்றது, குலவு என்ற சொல் குவவு என்று திரிந்தது; திரண்ட தோள்களை உடையவன் பெருமான். விலைபெறு சங்கக் குழை=சங்கினால் செய்யப்பட்டதும் விலை உயர்ந்ததும் ஆகிய குழை ஆபரணம். விலை உயர்ந்த குழையினை குறிப்பிடும் பாடலில் விலையே இல்லாத கபாலம் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். விலை மதிக்க முடியாத கபாலம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.
கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொற்றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில்
கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி
ஆர்த்து இலங்கும் மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார்
ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை
பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை
மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்
வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில்
திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்
திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
திருவாய்மூர் தலத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.77.7) அப்பர் பிரான், தனக்கு பெருமான் காட்டியருளிய கோலத்தில், ஒரு காதில் தோடும் மற்றொரு காதினில் குழையும் இருப்பதாக தான் கண்டேன் என்று கூறுகின்றார். மழை=மழை தரும் மேகம்; பெருமான் தனது மார்பினில் பூணூலை வலத்தே அணிந்துள்ளதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். மங்கல நாட்களில் பூணூல் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரை வருமாறு, மார்பின் குறுக்கே அணியவேண்டும். பெருமானுக்கு அனைத்து நாட்களும் மங்கல நாட்கள் என்பதால், என்றுமே ஒரே விதமாக பெருமான் பூணூல் அணிந்துள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தன்மை=மற்றவர் வகுத்த வழியின் கண் செல்லாது, தான் செல்லவேண்டிய பாதையைத் தானே வகுத்துக் கொண்டுள்ள தன்மை; அனைவர்க்கும் பெரியோனாகத் திகழும் பெருமான், எவரையும் முன்மாதிரியாக கொண்டு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த குணத்தையே தன்வயத்தன் என்று சைவ சித்தாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்
கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழை ஆர் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை
யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இங்கே கள் என்ற சொல் பூவினில் இருக்கும் தேனை குறிக்கின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார். மால்விடை=சிறப்பு வாய்ந்த இடபம்;
துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும்
காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு
அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய்
பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக் குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினை ஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். மிகவும் அரிதான சொல்லாட்சி; இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்..
நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை
ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று
விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத்
தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்த திருக்
காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ
கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல் ஆடை, குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி இந்த பழமையான கோலத்தை எவ்வாறு தான் கண்டார் என்பதை கீழ்க்கண்ட பாடல் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பாடல் பதினோராம் திருமுறையில் உள்ளது. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலது காதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்ட அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை அடைய முடியவில்லையே என்று ஏந்தி வருந்தும் நிலையிலும் பெருமானின் திருநாமங்களை பலவாறாக பிதற்றும் தன்மை, இந்த பாடலின் தலைவி பெருமான் மீது கொண்டுள்ள காதலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றது
வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே
மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லை போலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ள பொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் கையாளப் பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு=எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவை அம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினை உணர்த்தும் பொருட்களாகவும் இன்கே குறிப்பிடப் பட்டுள்ளன.
கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்
தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்
சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்
அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே
இரண்டு செவிகளில் ஒன்றினில் குழை அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் மூலம், மற்றோர் காதினில் தோட்டினை அணிந்தவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல், கருவூர்த் தேவர் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் ஒன்பதாவது பாடலாக உள்ளது. களம்=கழுத்து: நீர்=நீர்மை என்பதன் இடைக்குறை, தன்மை; குமுத மலர் போன்று சிவந்த வாயினையும், கருங்குவளை போன்று கரிய கழுத்தினையும், ஒரு செவியினில் குழை ஆபரணத்தையும், சடையில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு நெளிகின்ற பாம்பினையும், இடது பகுதியில் தூய்மையான மேகலையையும், தாமரை மலர் போன்ற முகத்தினையும் கண்களையும். பொன் மயமான பாதுகைகளையும், களங்கமற்ற தன்மையையும் கொண்டவராக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒரு பால்
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே
பொழிப்புரை:
ஒரு காதினில் தோட்டினை அணிந்துள்ள பெருமான் மற்றொரு காதினில், வெண்சங்கு கொண்டு செய்யப்பட்டதும் வளைந்ததும் ஆகிய குழை ஆபரணத்தை அணிந்துள்ளார். அந்த குழை ஆபரணம், அவரது தோளில் புரளும் வண்ணம் நீண்டு தொங்குகின்றது. இத்தகைய பெருமான், காட்டினைத் தனது இடமாகக் கொண்டு, நெருப்புப் பிழம்பினைத் தனது உள்ளங் கையினில் ஏந்தியவாறு நடமாடும் பெருமான், நாளும் குறையாமல் வளரும் விருப்பம் கொண்டு உறையும் நகரம் தான் நனிபள்ளி. இடைவிடாது தொடர்ந்து பெருமானை வழிபடுவதால், மேலும் பல பிறவிகள் எடுக்காமல் விரைவில் இந்த பிறவியின் முடிவினில் வீடுபேறு பெறுகின்ற தகுதியை அடைந்துள்ள அந்தணர்கள், இதுவே முறை என்று நறுமணம் கலந்த நீரினை தினமும் மூன்று வேளைகளிலும் தங்களது விரல்களால் நீரினை தெளித்து இறைவனுக்கு அர்க்கியம் கொடுக்கின்றார்கள். அத்தகைய அந்தணர்கள் அதிகமாக காணப்படும் அந்தணர்கள் வாழும் நனிபள்ளி நகரினில், பேரொலி எழுப்பியவாறு வெள்ளப் பெருக்குடன் காவிரி நதி ஓடுகின்றது. அத்தகைய பெருமைகள் உடைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


