பாடல் 8:
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
விளக்கம்:
விகிர்தன்=உலகியலுக்கு மாறுபட்ட குணத்தை உடையவன்; குதிரை, யானை அல்லது ஒரு தேரினையோ வாகனமாகக் கொள்ளாமல், எருதினை வாகனமாகக் கொண்ட விகிர்தனே என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சாதரணமாக எருதினை எவரும் வாகனமாகக் கொள்வதில்லை. இந்தக் கருத்தினை உள்ளடக்கிய ஒரு பாடல் திருவாசகம் திருச்சாழல் பதிகத்தில் உள்ளது. மிகுந்த பலம் வாய்ந்த யானை, விரைந்து செல்லக்கூடிய குதிரை அல்லது தேர் இவைகளை, வாகனமாகக் கொள்ளாமல், எருதினை வாகனமாகக் கொண்ட காரணம் ஏன் என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்றபோது, தேர்த்தட்டு முறிந்தது. தேரில் செல்வதாக இருந்ததால் இடபத்தின் மீது சிவபிரான் அப்போது செல்லவில்லை. தேர் முறிந்து, வாகனம் ஏதும் இல்லாத சமயத்தில், திருமால் தானே இடபமாக மாறி, இறைவனைத் தாங்கினார் என்பது புராணம். இந்த நிகழ்ச்சியை பல தேவாரப் பதிகங்களில் மால்விடை ஏறிய சிவபிரான் என்று குறிப்பதுண்டு. எனவே இடபம் மிகவும் பெருமை வாய்ந்த வாகனம் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவா எனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ
உள்ளம் என்ற சொல் இங்கே உயிர் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மனம் ஒன்றித் தன்னை வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவன் என்றும் பொருள் கொள்ளலாம். வானவர்கோன் தோள் துணித்தது எந்த சமயத்தில் என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. திருவிளையாடல் புராணத்தில், இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட வரலாறு என்று ஒரு படலம் உள்ளது. தக்க யாகத்தில் பங்கேற்ற பல தேவர்கள் அடைந்த தண்டனையுடன் இந்திரனும் தண்டனை அடைந்ததாக மணிவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். ஒரு முறை, சிவபிரான் பூதகணம் வேடம் தாங்கி, கயிலை வாயிலில் இருந்ததை, உணராத இந்திரன், பூதகணம் தனது வழியில் குறுக்கிடுவதாக நினைத்து, தனது வஜ்ராயுதத்தால் பூதகணத்தை அடித்தான் என்றும் அப்போதும் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி அவனை தண்டித்தார் என்றும் ஒரு புராண நிகழ்ச்சி கூறிகின்றது. .
பொழிப்புரை:
உலகில் உள்ள அனைத்து உயிர்களோடும் உயிராக கலந்து இருப்பவனே, உன்னை விரும்பும் அடியார்கள் மனதிலிருந்து என்றும் நீங்காமல் இருப்பவனே, வள்ளலே, மணவாளனே, வானவர் கோனாகிய இந்திரனின் தோளை நெரித்த வல்லவனே, வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்ட விகிர்தனே, மேலோர்க்கும் மேலாக விளங்குபவனே, தெளிந்த கங்கை நீரினைத் தனது சடையில் ஏற்றவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


