பாடல் 2:
நரியைக் குதிரை செய்வானும் நரகரைத்
தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும் விச்சின்றி
நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன்னோட முன் பணிந்து
அன்பர்கள் ஏத்த
அரவு அரைச் சாத்தி நின்றானும் ஆரூர்
அமர்ந்த அம்மானே
விளக்கம்:
நரியைக் குதிரை செய்வான் என்ற தொடர் எல்லாம் வல்ல இறைவனின் திறமையை உணர்த்துகின்றது. மணிவாசகப் பெருமானின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பதாக சிலர் கூறுகின்றனர். மணிவாசகப் பெருமானின் காலம் குறித்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பான்மையானவர்கள் மணிவாசகரின் காலம் மூவர் முதலிகளுக்கு பிற்பட்டது என்று கருதுகின்றனர். மணிவாசகரைப் பற்றிய குறிப்புகள் தேவாரப் பதிகங்களில் காணப்படாமையாலும், தேவாரப் பதிகங்கள் அல்லது மூவர்கள் குறித்த தொடர்கள் திருவாசகத்தில் காணப்படாமையாலும், வேறுபட்ட இரண்டு கருத்துகள், இவர்களது காலத்தைப் பற்றி நிலவுகின்றன.
நரகரைத் தேவு செய்வான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கொடிய நரகம் புகுவதற்கு தகுதியான பாவங்கள் செய்தவர்களாக இருந்தாலும், அவர்களையும் தேவர்களின் நிலைக்கு உயர்வுக்கும் திறமை படைத்தவன் சிவபிரான் என்று இங்கே கூறுகின்றார். இந்த சிந்தனை நமக்கு ஞானசம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (3.49.7) ஒன்றினை நினைவூட்டும்.
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்
உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே
விச்சு=வித்து, விதை: நாறு=பயிர்: பொதுவாக பயிர் முளைப்பதற்கு விதை தேவை. விதையும் பயிரிலிருந்தே வருகின்றது. எனவே பயிர் முதலா அல்லது விதை முதலா என்ற கேள்வி எழுப்பப்பட்டு விடை காணமுடியாததாக கருதப் படுகின்றது. அதற்கு விடை கூறும் முகமாக இந்த பாடல் அமைந்துள்ளது. ஊழிக் காலம் முடிந்தபின்னர், ஒடுங்கிய உலகத்தையும் உயிர்களையும் மீண்டும் தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் சிவபெருமான், அப்போது ஒடுக்கத்திலிருந்து உலகத்தை விரிக்கின்றார். இதுதான் வித்து ஏதும் இல்லாமல் படைப்பது என்று இங்கே கூறப்படுகின்றது. அவ்வாறு தோன்றிய உலகத்தினின்று விதைகளும், விதைகளிலிருந்து பல உயிர்களும் தொடர்ந்து உண்டாகின்றன. இதே கருத்து மணிவாசகரால் திருச்சதகம் பதிகத்திலும் கூறப்படுகின்றது.
விச்சதன்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன்
ஆக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே
இந்த பாடலில் தன்னை வளர்த்த சிவபெருமான், தன்னை கைவிடுதல் நியாயமா என்று மணிவாசகர் கேட்கின்றார். பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்து உலக பந்தங்களிலும் அரசியலிலும் ஈடுபட்டு வஞ்சம், பொய் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு வாழ்ந்த தன்னை பற்றுக்கள் நீக்குமாறு செய்தது, பெருந்துறை கோயில் வாசலே கதி என்று தான் வந்த காரியத்தை மறந்து செயல்படுவது, அடியார்களில் நடுவில் இருத்தியது ஆகிய செயல்களை, இறைவன் தன்னை வளர்த்ததாக மணிவாசகர் கருதுவது நமக்கு புலப்படுகின்றது. இவை அனைத்தும் இறைவனால் வந்த மாற்றங்கள் தாமே. இவ்வாறு வளர்த்த பின்னர், மற்ற அடியார்களின் தகுதிக்குத் தான் உயரவில்லை என்பதற்காக தன்னை விட்டுவிட்டுச் செல்லுதல் அழகா என்று கேட்கின்றார். மற்ற அடியார்களின் தகுதிக்குத் தான் உயராதது, தான் நச்சு மரம் என்பதாலோ என்ற சந்தேகம் மணிவாசகருக்கு எழுந்தது போலும். அவ்வாறு இருந்தாலும், நச்சு மரத்தை வளர்த்தவர்கள், அதனை கொல்லாமல் மேலும் பேணிப் பாதுகாப்பது போன்று, தன்னையும் ஆட்கொள்வது இறைவனின் கடமை என்று கூறும் பாடல்.
பொழிப்புரை:
நரியினை குதிரையாக மாற்றுவது போல் பல மாயங்கள் புரிய வல்லானும், நரகத்தில் ஆழ்ந்து துன்பப்படுவோரையும், தேவர்களின் நிலைக்கு உயர்த்தும் திறமை படைத்தவனும், அவரவர்கள் அனுசரிக்கும் விரதங்கள் மற்றும் நியமங்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு அருள் புரிபவனும், விதைகள் ஏதும் இல்லாமல் பயிரினை உண்டாக்க வல்லவனும் ஆகிய சிவபெருமான் வருவதைக் குறிக்கும் வகையில், முழங்கும் முரசினைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓடி வருகின்றது: இதனைக் காணும் அடியார்கள் இறைவனைப் புகழ்ந்து பாட, தனது இடுப்பில் பாம்பினைக் கட்டி நின்றவனாகிய சிவபெருமான், தியகராஜனாக வருகை தருகின்றான். அவன் ஆரூர் நகரில் அமர்ந்திருக்கும் அம்மான் ஆவான்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


