திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

100. படையார் தருபூதப் - பாடல் 11

ஞானசம்பந்தன் அருளிய

News image
Updated On :1 ஜூலை 2018, 6:30 pm


பாடல் 11:

    ஏரார் எருக்கத்தம்புலியூர் உறைவானைச்
    சீரார் திகழ் காழித் திருவார் சம்பந்தன்
    ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
    பாரார் அவர் ஏத்த பதி வான் உறைவாரே

விளக்கம்:

ஏர்=அழகு; ஆரா=தெவிட்டாத பாரார்=உலகத்தவர்;

பொழிப்புரை:

நீர்வளம் கொண்டு அழகுடன் விளங்கும் எருக்கத்தம்புலியூர் தலத்தில் உறைகின்ற பெருமானை, சிறப்பு மிகுந்த சீர்காழித் தலத்தில் தோன்றிய தெய்வத்தன்மை பொருந்திய ஞானசம்பந்தன் அருளிய, தெவிட்டாத சுவையினை உடைய இந்த இனிய தமிழ் மாலையில் அடங்கிய பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர், உலகத்தவர் புகழும் வண்ணம் சிவலோகம் எய்துவார்கள்.  

முடிவுரை:

தன்னுடன் இருக்கும் சிறந்த அடியார்களை குறிப்பிட்டு சிறப்பித்து பாடுவது தேவார முதலிகளின் இயல்பாகும். அவ்வாறு இருக்கையில், தன்னுடன் பல தலங்கள் தொடர்ந்து வந்த யாழ்ப்பாணரைப் பற்றிய குறிப்பு இந்த பாடலில் இல்லாமல் இருப்பது வியப்பினை அளிக்கின்றது. ஒருகால், இந்த பதிகத்தில் சிதைந்த ஏழாவது பாடலில் அத்தகைய குறிப்பு இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமானின் அடியார்களை வினைகள் அடையாது என்று சம்பந்தர் கூறுகின்றார். வினைகள் மேவா என்று முதல் பாடலிலும், கருதா வினைகள் என்று இரண்டாவது பாடலிலும், அடையா வினை தானே என்று மூன்றாவது பாடலிலும், விரும்பா வினை தானே என்று ஐந்தாவது பாடலிலும் தொடரா வினை தானே என்று ஆறாவது பாடலிலும், கெடும் வினையே என்று ஒன்பதாவது பாடலிலும் கூறுகின்றார். நமது உயிரினை பீடித்துள்ள வினைகளால் தானே நாம் இம்மையில் பல விதமான அல்லல்களுக்கு ஆட்பட்டு துயர் அடைகின்றோம்; மேலும் இந்த வினைகள் மேலும் வினைகளை நாம் பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருப்பதால் தானே, பிறவிச் சுழற்சியிலிருந்து வெளியே வர முடியாமல் நாம் தவிக்கின்றோம். எனவே இந்த வினைகளிலிருந்து விடுபட்டால், இம்மைத் துயர்கள் தீர்வதுமன்றி மறுமையிலும் நாம் முக்திச் செல்வம் பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்கின்றோம். இந்த விளைவினை குறிப்பிடும் வண்ணம் பதிகத்தின் எட்டாவது பாடலில் அல்லல் தீர்த்தல் திடம் என்று கூறும் சம்பந்தர், கடைப் பாடலில் வானில் உறைவார்கள் என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஓதியும் எருக்கத்தம்புலியூர் இறைவனை தியானித்தும் நாம் இம்மையில் பல நலன்களைப் பெற்றும் மறுமையில் முக்திச் செல்வத்தை பெற்றும் வாழ்வோமாக.    

Audio

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.