பின்னணி:
முதுகுன்றம் என்று தேவாரப் பதிகங்களில் அழைக்கப்படும் இந்த தலம் தற்போது விருத்தாசலம் என்று அழைக்கப் படுகின்றது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அருகே நமக்கு இடதுபுறம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சென்றால் இந்த தலத்தினை அடையலாம். எருக்கத்தம்புலியூர் சென்று இறைவனை வணங்கி பதிகம் பாடிய ஞானசம்பந்தர், மத்தா வரை நிறுவி என்று தொடங்கும் (1.11) பதிகத்தினைப் பாடியவாறு முதுகுன்றம் சென்று அடைகின்றார். பின்னர் அந்த தலத்தில் உள்ள குன்றினை, நின்று முதுகுன்றை என்று தொடங்கும் பதிகம் (1.93) பாடியவாறு வலம் வந்த பின்னர் திருக்கோயிலின் உள்ளே நுழைகின்றார். நிலத்தில் தாழ்ந்து இறைவனை அணங்கிய பின்னர் இறைவனின் சன்னதி முன்பு சென்ற சம்பந்தர் அருளிய பதிகம் இந்த பதிகம் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்தர், பெருமானை முன்னிலைப் படுத்தி பாடியிருப்பதால் பெருமானின் சன்னதியில் பாடப்பட்ட பதிகமாக இந்த திருப்பதிகம் கருதப் படுகின்றது.
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும்
எனும் தண்டமிழ் தொடை சாத்தி
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை
வைகுவர் மணி வெற்பு
சூழ்ந்த தண்புனல் கலவு முத்தாற்றொடு
தொடுத்த தொடை மாலை
வீழ்ந்த காதலால் பலமுறை விளம்பியே
மேவினார் சில நாள்கள்
திருஞானசம்பந்தர் பல நாட்கள் இந்த தலத்தில் தங்கி இருந்து பதிகங்கள் பாடியதாக நாம் அறிகின்றோம். இந்த தலத்தில் ஓடும் நதி மணிமுத்தாறு. பின்னாளில் சுந்தரருக்கு பெருமான் அருள் செய்த வகையில் புகழ் பெறவிருப்பதை முன்கூட்டி உணர்த்தும் வண்ணம், சேக்கிழார் இந்த ஆற்றினை இங்கே குறிப்பிட்டார் போலும். முதுகுன்றத்து இறைவனை வேண்டி பொற்காசுகள் பெற்ற சுந்தரர், இந்த ஆற்றினில் இட்டு திருவாரூர் குளத்தில் வரப்பெற்ற அதிசயம் பின்னாளில் நிகழ்ந்தது. தொலைத்த பொருளினை தொலைத்த இடத்தில் தேடினால் தானே கிடைக்கும். இந்த பொருளினை உணர்த்தும் வண்ணம் எழுந்த பழமொழி ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடுவதேன் என்பதாகும்.. சுந்தரர் வாழ்க்கையில் பெருமானின் அருளால் நிகழ்ந்த இந்த அதிசயம், பழமொழியை பொய்யாக்கியது.
இந்த பதிகம் முக்கால் என்ற வகையைச் சார்ந்தது. இந்த பதிகம் உட்பட ஆறு பதிகங்கள் இந்த வகையில் அமைந்துள்ளன. அவையாவன, விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் சீர்காழி பதிகம் (1.94), எண்டிசைக்கும் புகழ் என்று தொடங்கும் இன்னம்பர் பதிகம் (1.95), நல்வெணெய் விழுது என்று தொடங்கும் திருநெல்வெண்ணெய் பதிகம் (1.96), திடமலி மதிளணி என்று தொடங்கும் சிறுகுடி பதிகம் (1.97.) வெண்மதி மதி தவழ் என்று தொடங்கும் வீழிமிழலை பதிகம் (1.98), மற்றும் இங்கே விளக்கம் அளிக்கப்படும் பதிகம் (1.99). பதிகத்தின் பாடல்கள் அமைப்பு பற்றி, திரு முக்கால் என்று இவை அனைத்தும் அழைக்கப் படுகின்றன. இந்த பதிகத்தின் முதல் அடியும் மூன்றாவது அடியும் நான்கு சீர்கள் கொண்டவை; இரண்டு மற்றும் நான்காம் அடிகள் மூன்று சீர்கள் கொண்டவை. முதல் அடியின் முக்கால் பாகம் அடுத்த அடியில் இருப்பதால் முக்கால் என்று பெயர் வந்தது என்று கூறுவார்கள். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே சீர்கள் கெடாத வகையில் கொடுக்கப் பட்டுள்ளது. எளிதில் பொருளினை புரிந்து கொள்ளும் வண்ணம், கீழ்க்கண்ட அமைப்பினில் தராமல், சொற்களை பிரித்து, பதிக விளக்கங்களில் கொடுக்கப் படுகின்றன.
முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே
சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் தனது பெரிய புராண விளக்கம் நூலில், முக்கால் என்ற வகைக்கு சற்று மாறுபட்ட விளக்கத்தினை அளிக்கின்றார். இரண்டாவது அடியில் உள்ள சொற்கள் மூன்றாவது அடியில் கலந்து உட்புகுந்து விடுவதால், இரண்டாவது அடியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மூன்று அடிகளைக் கொண்ட பாடலாக கருத வேண்டும் என்று உணர்த்தும் வகையில் முக்கால் என்று வகைப் படுத்தப்பட்டது என்று கூறுகின்றார். இந்த ஆறு பதிகங்களில் உள்ள அனைத்து பாடல்களும் இவ்வாறு இருப்பதை நாம் காணலாம். இவ்வாறு பல விதமான அமைப்புகள் கொண்ட பாடல்கள் இயற்றியமையால் தானோ, தன்னை தமிழ் விரகன் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும். விரகன் என்றால் வல்லவன் என்று பொருள். பல வகையான இலக்கியங்களுக்கு முன்னோடியாக சம்பந்தர் இயற்றிய பாடல்கள் அமைந்திருப்பதை உணர்ந்து சைவர்கள் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். .
பாடல் 1:
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே
பரசு அமர் படை உடையீர் உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே
விளக்கம்:
அமர் படை=விரும்பிய படை; பரசு=மழு ஆயுதம்
பொழிப்புரை:
திருவிழாக் காலங்களிலும் பூஜை நேரங்களிலும் முரசு அதிர்ந்து பேரோசை எழுப்பும் முதுகுன்றத்து தலத்தில் பொருந்தி, பரசு எனப்படும் மழு ஆயுதத்தை விருப்பமுடன் தனது கையினில் ஏந்தியவரே, மழு ஆயுதத்தை ஏந்தியுள்ள உம்மை புகழ்ந்து பணியும் அடியார்கள் பல தேசங்களுக்கும் அரசர்களாக மாறும் நிலையினை அடைவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


