பின்னணி:
முதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கி பல பதிகங்கள் பாடி பெருமானை வழிபட்ட சம்பந்தர், இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபட்ட அடியார்களின் தன்மையை கூறும் வண்ணம் அமைந்துள்ள பாடல்கள் கொண்ட பதிகம்.
பாடல் 1:
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
மூவா=மூப்பு அடையாத; நீண்ட வாழ்நாள் கொண்ட; திருமூலர் முனிவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தமைக்கு ஒரு எடுத்துக் காட்டு. வசிட்டர் முதலான ஏழு முனிவர்கள் (சப்த ரிஷிகள் என்று ஒரு தொகுப்பாக அழைக்கப்படும் முனிவர்கள்) நீண்ட நாட்கள் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆ ஆ என்று இரக்கத்தை குறிப்படும் சொல் ஆவா என்று இணைந்துள்ளது.
சிறியோமாகிய தாங்கள் செய்த பிழைகளை பெருமான் பொறுக்க வேண்டுமென்று முனிவர் விண்ணப்பம் வைப்பதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் பூஜை முடிந்த பின்னர் பெருமானிடம் தாங்கள் செய்த பிழையை பொறுத்தருளுமாறு நால்வர் பெருமானர்கள் பாடிய பாடல்களை தினமும் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அடியார்கள், முதல் பாடலாக இந்த பாடலையே பாடுவார்கள். பிழை செய்வது மனித இயல்பு. ஆனால் தாம் பிழை செய்ததை உணர்ந்து கொண்டு, அந்த பிழையினை மன்னித்து பெருமான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டும் செய்கை தான், நமக்கும் பெரியோர்களுக்கும் உள்ள வேறுபாடு. அருளாளர்கள் பல திருமுறை பாடல்களில் தாங்கள் செய்த பிழையினை பெருமான் பொறுக்க வேண்டும் என்று வேண்டுவதை நாம் கீழ்க்கண்ட பாடல்களில் காணலாம்.
குழைத்த பத்து பாடலில், மணிவாசகர் தான் செய்த பிழைகளை பெருமான் பொறுக்காமல் இருத்தல் சிவபெருமானின் தகுதிக்கு அழகோ என்ற கேள்வியை கேட்பதை நாம் உணரலாம். சந்திரன் செய்த பிழையை பொறுத்து அவனுக்கு மறுவாழ்வு அளித்த பெருமானே, எனது பிழையினை நீ பொறுக்காமல் இருப்பது முறையோ என்று கேட்கின்றார். உடையாய் என்ற சொல்லின் மூலம், தான் இறைவனது அடிமை என்பதையும் இறைவன் தனக்குத் தலைவன் என்பதையும் உணர்த்தி, தனது பிழையினை பொறுக்க வேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது என்பதையும் அடிகளார் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். கல்மனத்தவனாக இருந்த தான், இறைவன் தன்னை பெருந்துறையில் ஆட்கொண்ட பின்னர், தனது மனதினைக் குழைத்துக் கொண்டு இறைவன் பால் அன்பு உடையவனாக தான் மாறினேன் என்று குறிப்பிடும் அடிகளார், அவ்வாறு இறைவனின் அன்பனாக மாறிய தன்னை பண்டை வினைகளின் பிடியிலிருந்து இறைவன் காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கின்றார். தான் தொடர்ந்து இறைவனுக்கு அன்பனாக இருப்பேன் என்று உறுதியாக கூறும் அடிகளார், அந்த உழைப்பினுக்கு பரிசாக தனது வினைகள் களையப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார். தான் இறைஞ்சி இறைவனை அழைத்த பின்னரும், தனது பிழைகளை பொறுக்குமாறு வேண்டிய பின்னரும் அருள் புரியாது இருத்தல் தான் இறைவனின் வழக்கமோ என்ற கேள்வியையும் அடிகளார் எழுப்பி, இறைவனை நோக்கி நீ அவ்வாறு இருக்கலாமா என்று கேட்கும் நயத்தினை நாம் இந்த பாடலில் உணரலாம்.
குழைத்தால் பண்டைக் கொடுவினை நோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி உண்டோ தான் உமையாள்
கணவா எனை ஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர்
சடையாய் முறையோ என்று
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே
உன் அடியேற்கே
ஆடினாய் என்று தொடங்கும் (3.1) பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் பிறைச் சந்திரனை முடியில் சூடிய பெருமானே, எமது வினைகளை சுருக்கி அழிப்பாயாக என்று கூறுவதற்கு சுவையான விளக்கத்தை திருமுறை மலர்கள் நூலில் கி.வா. ஜா அவர்கள் அளிக்கின்றார். பெருமான் தனது திருமுடியில் சந்திரனை ஏற்றுக் கொண்டதால் சந்திரனின் பாவங்களும் பழியும் மறைந்தது மட்டுமன்றி, சந்திரன் உயர்ந்த இடத்திலும் வைக்கப்பட்டு சிறப்பினை அடைகின்றான் என்று கூறுகின்றார். நெய்யும் பாலும் தயிரும் கொண்டு இறைவன் நீராட்டப்படும் போது, சந்திரனும் தில்லை வாழ் அந்தணர்களால் நீராட்டப்படும் சிறப்பினை பெறுகின்றான் என்று கூறுகின்றார். ஆனால் இத்தகைய சிறப்பினுக்கு தகுதியானவனா என்ற கேள்வியை நகைச்சுவையுடன் எழுப்பி அதற்கான காரணத்தையும் கூறுகின்றார். தனது மனைவியர் அனைவரையும் சமமாக நடத்தாமல் ஒரு மனைவி மீது மட்டும் அதிகமான ஆசை வைத்தவன் என்றும், தலைவனாகிய இறைவனை புறக்கணித்து நடத்தப்படும் வேள்வியில் தனக்கு அளிக்கவிருந்த அவிர்ப்பாகத்தின் மீது ஆசை கொண்டு தக்கன் நடத்திய யாகத்தில் பங்கேற்றவன் என்றும், தனது குருவின் மனைவி என்பதையும் கருதாமல் பிருகஸ்பதியின் மனைவி தாரை மீது மோகம் கொண்டவன் என்றும் சந்திரன் செய்த பல தவறுகளை சுட்டிக் காட்டும் கி.வா.ஜா. அவர்கள், அததகைய சந்திரனுக்கு வாழ்வு அளித்த பெருமானின் கருணையை உணர்த்துகின்றார். பனி கால்=குளிர்ச்ச்சியை வெளிப்படுத்தும்; நயத்தல்=விரும்புதல்;
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர்
பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங் கொன்றை
நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடைப்
பனி கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம
தொல்வினையே
நீத்தல் விண்ணப்பத்து பாடல் ஒன்றினில் (ஆறாவது பாடல்) தனது இழிந்த தன்மை கருதி தன்னை நாயாக பாவித்துக் கொண்டு, சிறுநாய்கள் செய்யும் பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை அல்லவா என்று பெருமானை நோக்கி அடிகளார் கேள்வி கேட்கின்றார். ஒறுத்து=அடக்கி; பெருமானே அடியேன் உனது திருவருளின் பெருமையை அறியாது இருந்தமையால் உனது அருளினை ஏற்றுக்கொள்ள முன்னர் மறுத்தேன் என்று கூறும் அடிகளார், அருளினை ஏற்றுக் கொள்ள மறுத்தேன் என்று உலகப் பொருட்களின் மீது தான் கொண்டிருந்த பாசத்தை அறவே நீக்கிவிட்டு பற்றுகளை முற்றும் நீக்கிய நிலையை அடைய முயற்சி ஏதும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையினை குறிப்பிடுகிறார் போலும். பெருமானே, அடியேன் செய்த பிழைக்காக என்னை வெறுத்து, எனக்கு உதவி செய்யாமல் நீர் விட்டு விடலாமா என்று கேட்கின்றார். மேலும் தான் செய்த தவறுகளுக்கு தனது வினைகளே காரணம் என்றும் அந்த வினைகளை அடக்கி இறைவன் தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அடிகளார் வெளிப்படுத்துகின்றார். பொய் என்ற சொல் இங்கே வஞ்சனை, பிழை என்ற பொருளி வருகின்றது.
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டு இடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே
அடைக்கலப்பத்து என்ற பதிகத்தின் பாடலில் மணிவாசகர், தீமைகள் செய்யும் தனது பிழைகளின் பொருட்டு தன்னை வெறுத்து ஒதுக்காமல் தனது பிழைகளை பொறுத்து அருள் புரியும் பெருமை மிகுந்த குணத்தை உடையவனே என்று பெருமானை அழைக்கின்றார். தனது பிழைகளை பொறுத்ததும் அன்றி தனது வினைகளையும் முற்றிலும் நீக்கி பிறப்பிறப்புச் சுழலில் தான் மாட்டியுள்ள நிலையினை வேரோடும் அறுத்து எறிந்த்தவன் என்று பெருமானை குறிப்பிட்டு, தான் பெருமானுக்கு அடைக்கலப் பொருளாக உள்ள நிலையினை உணர்த்துகின்றார். செறுப்பவன்=தடுத்து நிறுத்துபவன்;
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைச் சடைச்
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேர்
அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
கோத்தும்பீ பதிகத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர் பேயேன் என்று தன்னை குறிப்பிட்டு, தான் செய்த பிழைகளை பொறுக்கும் பெருமையை உடையவன் இறைவன் என்று கூறுகின்றார்.
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ
வேணாட்டடிகள் தனது பதிகத்தில் (ஒன்பதாம் திருமுறை) தனது அடிமை இழிவான செயலைச் செய்தாலும் அதனை பொருட்படுத்தாது விரும்பும் உரிமையாளர் போன்று, தனது தலைவனாகிய பெருமான் அடிமையாகிய தான் செய்த இழிவான செயல்களைப் பொறுத்துக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். அடிகளார் இந்த செயலுக்கு ஒரு உதாரணத்தை தருகின்றார். கச்சல் வாழைக்காயையும் வேப்பங் கொழுந்தினையும் கறி சமைத்து உண்பது போல் தனது தவறுகளை பொறுத்துக் கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். தனக்கு வேறு எந்த பற்றுக்கோடும் இல்லை என்பதை உணர்ந்த பின்னரும் தனது தொண்டினை பெருமான் விரும்பி ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்கும் பாடல் இது.
துச்சானது செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறு கதலி இலை வேம்பும் கறி கொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி
நச்சாய் காண் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.99.1) அப்பர் பிரான், தான் ஏதேனும் பிழை செய்தால் தன்னை புளியம் வளாரால் அடித்து தண்டிக்கும் உரிமையை பெருமானுக்கு அளிக்கின்றார். காதுவித்தல்=கொலை செய்ய முயற்சி செய்தல்; பல வருடங்கள் சமணர்களுடன் சேர்ந்து வாழ்ந்த தவற்றுக்கு தண்டனையாக, தனக்கு வந்த சூலை நோயினையும் சமணர்கள் தன்னைக் கொல்வதற்கு முயன்று செய்த பல சூழ்ச்சிகளையும் அப்பர் பிரான் கருதுவது அவரது மனப் பக்குவத்தை உணர்த்துகின்றது. பொதுவாக நமக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அத்தகைய தீங்குகளுக்கு நமது பண்டைய வினைகள் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளாமல் தீங்கு விளைவிப்பவரை கோபித்துக் கொள்ளும் தன்மையே நம்மில் காணப்படுகின்றது. ஆனால் அப்பர் பிரானோ எவரையும் குற்றம் சாட்டாமல், தனது செயல்களுக்கு இறைவன் அளித்த தண்டனையாக அவற்றை ஏற்றுக் கொள்ளுதல், அவரின் தனிச் சிறப்பான குணம். முனிதல்=கோபித்தல்.
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்து அருளிப்
போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் ஒன்றினில் (6.31.5) பிறவிப் பெருங்கடலை நாம் தாண்டுவதற்கு நாம் செய்யவேண்டியதை உணர்த்தும் பாடலில், அப்பர் பிரான் நாம் பலவாறும் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும் என்றும் நாம் செய்த பிழைகளை பொறுத்து அருள் புரியாய் என்று இறைவனிடம் வேண்ட வேண்டும் என்றும் கூறுகின்றார். இழைத்த நாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை. இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறும் பாடலாக அமைந்திருப்பினும், உலகத்தவர்க்கு கூறும் அறிவுரையாகவே நாம் இந்த பாடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு
நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய்
என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி
ஆரூர் இடம் கொண்ட அழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை
என் மேல் நான் கூறினேனே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.7) அப்பர் பிரான் அடியார்கள் செய்யும் பிழைகளை பொறுத்து அருள்வது பெரியோனாகிய இறைவனின் கடன் என்று கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். கழை=மூங்கில்: கழை இறுத்த= மூங்கில்களை உடைத்த பல ஆறுகள் வந்தடைந்த கடல்; உழை=மான்; அழை=அகவுதல் செய்து; உறுவித்து=பலரும் கேட்கச் செய்தல்
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே
உமையவள் தம் பெருமானே இமையோர் ஏறே
கழை இறுத்த கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா
கயிலாய மலையானே உன்பால் அன்பர்
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடன்
அன்றே பேரருள் உன் பாலது அன்றே
அழை உறுத்து மாமயில்கள் ஆலும் சோலை ஆவடு
தண்துறை உறையும் அமரர் ஏறே
திருவாரூர்ப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.20.2) அப்பர் பிரான் தான் செய்யும் அனைத்துப் பிழைகளையும் இறைவன் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகின்றார். அடியார்களுக்கு பற்றுக் கோடாக விளங்கும் இறைவன் மீது மிகுந்த காதல் கொண்டு, தான் உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றுகள் நீங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனது திருவடிகளைச் சென்று அடைந்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கடம் பட=பஞ்சமுக வாத்தியம் முழங்க;
கடம் பட நடம் ஆடினாய் களைகண் எனக்கு
ஒரு காதல் செய்து அடி
ஒடுங்கி வந்தடைந்தேன் ஒழிப்பாய்
பிழைப்ப எல்லாம்
முடங்கு இறால் முதுநீர் மலங்கு இளவாளை
செங்கயல் சேல்வரால் களிறு
அடைந்த தண்கழனி அணி ஆரூர் அம்மானே
தான் செய்த பிழையினை மட்டும் இறைவன் பொறுப்பதில்லை, பழைய அடியார்கள் செய்யும் பாவத்தையும் பிழையையும் பொறுத்துக் கொள்பவர் இறைவன் என்று கடவூர் மயானத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.38) முதல் பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பழைய அடியார்=வாழையடி வாழையாக இறைவனிடத்தில் அன்பு பாராட்டும் அடியார்கள்; உழையர்=மான் கன்றினைக் கையில் உடையவர்: சம்பந்தரும் தனது பதிகத்தில் பெருமான் அடிகள் என்று குறிப்பிடுவதால், பெருமான் அடிகள் என்பது தலத்து இறைவனின் பெயராக பண்டைய நாளில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாம் கடவூரின் மயானத்தார்
பழைய தம் அடியார் செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பார் பெருமான் அடிகளே
இதே கருத்தைத் தான் பின்னை என் பிழையைப் பொறுப்பான் என்றும் பிழை எலாம் தவிரப் பணிப்பான் என்றும் சுந்தரர் ஒரு பாடலில் (7.59.1) கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையாக அடியவர்களுக்கு உள்ளான் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை
மறக்கலும் ஆமே
உரிமையாக பரமனிடம் பழகும் சுந்தரர் திருவாவடுதுறை மீது அருளிய ஒரு பதிகத்தின் பாடலில் (7.70.6), எனது பிழையினை பொறுத்தால் உனக்கு இழிவு ஏற்படுமா, நீ ஏன் எனது பிழையினை பொறுக்கக் கூடாது என்று உணர்ச்சி பொங்க கேட்பதை நாம் இந்த பாடலில் காணலாம். இந்த பாடலில் சுந்தரர் இறைவனை, குறைவிலா நிறைவு என்றும் குணக்குன்று என்றும் அழைக்கின்றார். தர்மமே வடிவாக விளங்குபவன் என்று சிவபெருமானை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். அறம் என்பதற்கு நீதி என்ற பொருளும் உண்டு. திருவள்ளுவர் அறவாழி அந்தணன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே நினைவு கொள்ளலாம்.
குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே
குழைக் காதுடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு
பிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறை வண்டார் பொழில் சூழ்த் திருவாரூர்ச்
செம்பொனே திருவாவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர்
எனக்கு உறவு அமர்கள் ஏறே
அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.95.8) அப்பர் பிரான் பலவாறும் தனக்கு அருள் புரிந்த இறைவனின் கருணைத் திறத்தினை நினைத்து வியக்கின்றார். இத்தனை கருணைச் செயல்களையும் என் பொருட்டு செய்தாயோ, ஐயோ இறைவனே என்று வியப்புடன் கூறுவதை நாம் உணரலாம். தான் செய்த பிழைகள் அத்தனையும் பொறுத்து அருள் புரிந்த இறைவனே என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுவதை நம் உணரலாம். அத்தா=தந்தையே; ஆர்த்தல்=கட்டுதல்; சமண சமயம் சார்ந்து, சிவபெருமானை நினைக்காமல் இருந்த தன்னை, தனது தமக்கையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி சூலை நோய் கொடுத்து பின்னர் அதனைத் தீர்த்தருளி, அன்பினால் கட்டி, வேறு எங்கும் செல்ல முடியாதபடி பிணைத்த தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தீர்த்த நீராட்டி=தூய்மை செய்து. சிவபிரானின் கருணை வெள்ளம், அப்பர் பிரானின் விருப்பத்திற்கு இசைந்து, சூலம், இடபம் முதலிய குறிகளைத் அவரது உடலில் பொறித்து, உடலினைத் தூய்மை செய்தது இங்கே, தீர்த்த நீராட்டி என்று குறிப்பிடப்படுகின்றது. நீரின் குணம் உடலைத் தூய்மை செய்வது போல், சிவபிரானின் கருணை வெள்ளம் தன்னை, தூய்மை செய்ததை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். ஏன்று கொண்டாய்=ஏற்றுக் கொண்டாய்; பரமோ=பொருட்டோ.
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் எனை
ஆண்டுகொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள்
அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான்
திருக்கருணை இருந்தவாறே
கயிலாய மலையினில் அணுக்கத் தொண்டராக இருந்த போது தான் செய்த ஒரு பிழைக்காக தன்னை வெறுத்து தண்டனை அளித்த பெருமான், நம்பி ஆரூரனாக தான் செய்த அனைத்துப் பிழைகளையும் பொறுத்துக் கொண்டார் என்று சுந்தரர் கழிப்பாலை தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தில் (7.23.3) குறிப்பிடுகின்றார்.
ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்தி
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே
நாம் செய்யும் பிழைகளை பொறுக்கும் பண்பினைன் இறைவன் என்பதால், நமது பிழைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாம் விரும்பினால் அதற்குரிய வழி நாம் பெருமானை வழிபடுவது தான் என்று கழுக்குன்றத்துப் பதிகத்து பாடலில் (7.89.9) சுந்தரர் கூறுகின்றார்.
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் தான் உறையும் இடம்
மழைகள் சாலக் கழித்து நீடுயர் வேயவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே
சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டபோது திருவொற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் இட்டதை மீறி, திருவாரூர் செல்ல முயன்றதை தான் செய்த பிழை என்பதை உணரும் சுந்தரர், அடியார்கள் செய்யும் பிழைகளை பெருமான் பொறுத்துக் கொண்டு அருள் புரிவார் என்பதால் தனது இந்த பிழையினையும் பெருமான் பொறுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் துணிந்து செய்ததாகவும், அந்த எண்ணத்தினை மெய்ப்பிக்காமல் இருந்ததால் இறைவனுக்கு பழி ஏற்பட்டது என்றும் வெண்பாக்கம் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தினில் (7.89.1) சுந்தரர் கூறுகின்றார். உழை=மான்
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே படலம் என் கண் மறைப்பித்தாய்
குழை விரவு வடிகாதா கோயில் உளாயோ என்ன
உழை உடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே
பொழிப்புரை:
தேவனே, அடியார்கள் துன்புற நேரிடில் அவர்கள் பால் இரக்கம் கொண்டு, ஆவா என்று சொல்லி அவர்களது துன்பத்தினை நீக்கி அருள் புரிபவனே, பிரளய காலத்தில் கடல் பெருகி எந்த இடத்தினையும் தவிர்க்காமல் அனைத்து இடங்களையும் மூழ்குவிக்கும் சமயத்திலும் அந்த கடல் வெள்ளத்தினும் உயர்ந்து நின்று அழியாமல் இருப்பவனே, சிறியோர்களாகிய நாங்கள் செய்த பிழைகளை நீர் தான் பொறுத்து அருளவேண்டும் என்று வேண்டி நீண்ட வாழ்நாட்கள் கொண்ட முனிவர்கள் வணங்கும் திருக்கோயில் முதுகுன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


