தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 2

முதுகுன்றத்து இறைவனை

News image
Updated On :22 ஜூலை 2018, 6:30 pm

பாடல் 2:

    எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
    சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
    மந்தி ஏறி இன மா மலர்கள் பல கொண்டு
    முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே

  
விளக்கம்:

முதல் பாடலில் முனிவர்கள் முதுகுன்றத்து இறைவனை வழிபடுவதை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அந்தணர்கள் இறைவனை வழிபடுவதை குறிப்பிடுகின்றார். இரவி=சூரியன்; இரவி முதலா இறைஞ்சுவார் என்ற தொடருக்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. அந்தணர்கள் மூன்று வேளையும் சூரியனை வழிபட்டு அர்க்கியம் கொடுப்பது வழக்கும். சந்தியாவந்தனம் என்று அழைக்கப்படும் இந்த சடங்கினில், சூரியனை இறைவனின் ஒரு அங்கமாக கருதி, சூரியனை வழிபடுவதன் மூலம் இறைவனை வழிபடுவதாக நம்புகின்றனர். காலையில் விழித்ததும் முதலாக செய்யப்படும் இந்த செயலுக்கு பிறகு காலைக் கடன்களை கழித்துவிட்டு, நீராடி சிவபெருமானுக்கு பூஜை செய்வது வழக்கம். இந்த தன்மையை குறிப்பிடும் வண்ணம், சூரியனை முதலாக வழிபடும் கொள்கையினை உடைய அந்தணர்கள் என்று கூறுவது ஒரு வகையான விளக்கம். இரவி முதலா என்ற தொடருக்கு சூரியன் முதலான அனைத்து தேவர்கள் என்று பொருள் கொண்டு, தேவர்கள் அனைவரும் பெருமானை வழிபட்டு இறைஞ்சுகின்றனர் என்று சொல்வது இரண்டாவது விளக்கம். முதுகுன்றத்து திருக்கோயில் வந்து வணங்கும் அடியார்களை குறிப்பிடும் பதிகமாக உள்ளதால், முதலாவது விளக்கம் மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது. 

குரங்கின் கையில் மலரோ மலர் மாலையோ கிடைத்தால், முதலில் குரங்கு அந்த மலரினையும் மாலையையும் பிய்த்து எரிவதை தான் நாம் காண்கின்றோம். இது இயற்கை. அதனால் தான் குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற பழமொழியும் எழுந்தது. ஆனால் சம்பந்தர் கண்ட முதுகுன்றத்து குரங்குகள் சற்று வித்தியாசமானவை. அந்த குரங்குகள் தினமும் அடியார்கள் பூக்களை சுமந்து கொண்டு இறைவனின் திரு முன் சென்றடைந்து இவை, இறைவனின் திருமேனியின் மீது பூக்கள் தூவி வழிபடுவதை கண்ட குரங்குகள்.  மனிதன் செய்யும் பல செயல்களை உற்று கவனிக்கும் குரங்குகள், தாங்களும் அந்த செயல்களை செய்ய முயற்சி செய்வதை நாம் கண்டிருக்கின்றோம். அத்தகைய இயல்பு கொண்ட குரங்குகள், முதுகுன்றத்து அடியார்கள் மலர்கள் கொண்டு இறைவனை வழிபடும் மனிதர்களைக் கண்டு, தாங்களும் மலர்கள் கொணர்ந்து இறைவனின் திருமேனி மேல் தூவியதை தான் கண்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முந்திச் சென்று குரங்குகள் தொழுது வணங்கியதாக சம்பந்தர் கூறுவது, அடியார்கள் செல்வதற்கு முன்னமே தினமும் குரங்குகள் திருக்கோயிலுக்கு சென்றதை உணர்த்துகின்றது போலும். இந்த குறிப்பு நமக்கு குரக்குக்கா தலத்தில் இன்றும் நடைபெறும் நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. சித்திரை வைகாசி மாதங்களில் இன்றும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக மலர்களுடன் வந்து குரக்குக்கா தலத்து இறைவனை வழிபடுவதை நாம் காணலாம்.

பொழிப்புரை:

எங்களது தந்தை என்று, தினமும் காலையில் எழுந்ததும் சூரியனை வழிபடும் வழக்கம் கொண்டுள்ள அந்தணர்கள் முதுகுன்றத்து இறைவனை வணங்க, அவர்களது சிந்தையையை திருக்கோயிலாக கொண்டு உறைபவன் முதுகுன்றத்து இறைவன். அடியார்கள் மலர்கள் தூவி வழிபடுவதைக் காணும் குரங்குகள், கூட்டம் கூட்டமாக மரங்களின் மீதேறி, சிறந்த மலர்களை பறித்து வந்து, அடியார்கள் திருக்கோயிலுக்கு வருவதன் முன்னமே கோயில் வந்தடைந்து பெருமானின் திருமேனி மேல் பூக்கள் தூவி வழிபடும் திருக்கோயில் முதுகுன்றம் ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.