ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

100. படையார் தருபூதப் - பாடல் 1

நாயன்மார்கள் தங்களுக்குள்ளே

News image
Updated On :22 ஜூன் 2018, 6:30 pm


பின்னணி:

ஆடினாய் நறு நெய்யொடு (3.01) என்று தொடங்கும் இன்னிசைப் பதிகம் பாடி, அந்த பதிகத்தினில் தில்லை வாழ் அந்தர்ணர்களை சிறப்பித்தும், பெருமானை வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்றும் உணர்த்திய ஞானசம்பந்தர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து, பெருமானிடம் விடை பெற்று பொன்னம்பலத்தை வலம் வந்த பின்னர் வெளி முற்றத்தை அடைந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பின்னர் திருவாயிலை வணங்கி எழுந்தார். அப்போது அவருடன் வந்த யாழ்ப்பாணர், தனது ஊரான எருக்கத்தம்புலியூர் முதலான நிவா நதிக்கரையில் உள்ள தலங்கள் சென்று வணங்க வேண்டுமென்று பிள்ளையாரிடம் விண்ணப்பம் வைத்தார். இன்றைய நாளில் வடவெள்ளாறு என்று அழைக்கப்படும் நதியே நிவா நதி. இந்த தலம் தற்போது இராஜேந்திரப் பட்டினம் என்று அழைக்கப் படுகின்றது. விருத்தாசலம் ஜெயங்கொண்டான் பாதையில், விருத்தாசலத்திலிருந்து பன்னிரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம்.

    அப்புறத்திடை வணங்கி அங்கு அருளுடன்
         அணி மணித் திருவாயில்
    பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப்
         போற்றிய புகழ்ப் பாணர்
    நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல்
          நிவாக் கரை மேய
    ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை
          செய்ய அது நேர்வார்
  

அந்த தலம் சென்றடைந்த பின்னர், ஞானசம்பந்தர் யாழ்ப்பாணரை நோக்கி, ஐயரே நீர் அவதரித்திட இந்த தலம் மிகுந்த தவம் செய்திருக்க வேண்டும் என்று சிறப்பித்து கூறிய பின்னர், திருக்கோயிலின் உள்ளே புகுந்த போது அருளிய பதிகமே இங்கே விளக்கம் அளிக்கப்படும் பதிகமாகும். ஐயர் என்றால் தலைவர் என்று பொருள். சாதி வேறுபாடு கருதாமல் உயர்ந்த குணம் கொண்டவர்களை அழைப்பதற்கு பயன்படுத்தப் பட்ட இந்த சொல், காலப்போக்கில் மாறி ஒரு சாதியரை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுவது காலத்தின் கோலமாகும். பண்டைய நாட்களில் நாயன்மார்கள் தங்களுக்குள்ளே சாதி வேறுபாடு கருதமால் பழகி வந்தார்கள் என்பதற்கு, ஞானசம்பந்தர் ஐயரே என்று யாழ்ப்பாணரை அழைத்தது ஆதாரமாக உள்ளது. நீலநக்கர் தான் வேள்வி வளர்த்து செய்யும் இடத்தில், யாழ்ப்பாணரை அவரது மனைவியாருடன் தங்க வைத்தது, திருஞான சம்பந்தர் சீர்காழியில் தனது இல்லத்தின் அருகே யாழ்ப்பாணரை தங்க வைத்தது முதலியவை நாம் நினைவில் கொள்ளத் தக்கது. வேளாளர் குலத்தில் பிறந்த அப்பர் பிரானை, அந்தணர் குலத்தில் அவதரித்த அப்பூதி அடிகள், சிறப்பித்து வணங்கி, தமது இல்லத்தில் அவருக்கு அமுது அளித்தமையும் நாம் இங்கே நினைவு கூர்வோமாக. 

    ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில்
        மாதவம் முன்பு 
    செய்தவாறு எனச் சிறப்பு உரைத்தருளி அச் செழும்
        பதி இடம் கொண்ட 
    மைகொள் கண்டர் தம் கோயிலினுள் புக்கு வலம்
        கொண்டு வணங்கிப் பார் 
    உய்ய வந்தவர் செழுந்தமிழ் பதிகம் அங்கு இசையுடன்
         உரை செய்தார்
       

பாடல் 1:

    படையார் தரு பூதப் பகடார் உரி போர்வை
    உடையான் உமையோடும் உடனாய் இடு கங்கை
    சடையான் எருக்கத்தம்புலியூர் தகு கோயில்
    விடையான் அடி ஏத்த மேவா வினை தானே

விளக்கம்:

பகடு=யானை; பெருமானை எதிர்த்து வந்த மத யானை, பெருமானை எதிர்த்த செயலை இழித்து கூறும் வண்ணம், இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி சேர்க்கப் பட்டுள்ளது. படையார்=படைகளாக அமைந்த; மேவா=தமது வலிமையை காட்ட முடியாமல் இருக்கும் நிலை; உடையான்=உடமையாக உடையவன், என்னை ஏற்றுக் கொண்டவன்; இடு=பொருந்திய; தகு கோயில்=தகுதி வாய்ந்த கோயில்; உடையான் என்று குறிப்பிட்டு, இறைவன் தனது அடிமையாக தன்னை ஏற்றுக்கொண்ட நிலையினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அருளாளர்கள் அனைவரும் தங்களை இறைவனது அடிமைகளாக நினைத்து வாழ்ந்து வந்த நிலையினை இந்த குறிப்பு நமக்கு உணர்த்துகின்றது. மேலும், தனது முதல் பதிகத்தின் முதல் பாடலில், ஏற்றாய் அடிக்கே என்று சிவபெருமான் தன்னை அவரது அடிமையாக ஏற்றுக் கொண்டதையும் இரவும் பகலும் பிரியாது அவரை வணங்குவேன் என்று அப்பர் பிரான் கூறியதையும் நினைவூட்டுகின்றது. 

    கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல
          செய்தன நான் அறியேன் 
    ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது
          வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு
          துடக்கி முடக்கியிட   
    ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
          வீரட்டானத்துறை அம்மானே

பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு சூலைநோய் தீர்த்ததும் அன்றி, தனக்கு திருநாவுக்கரசு என்ற பெயரையும் சூட்டியதால் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதை அப்பர் பிரான் உணர்ந்தார். தான் உணர்ந்ததை, அப்பர் பிரான் பல்லவ மன்னனின் ஆணையுடன் வந்த மந்திரிக்கு மறுமொழியாக உரைப்பதை நாம், அவரது மறுமொழித் தாண்டகத்தின் முதல் பாடலில் (6.98.1) உணரலாம். இந்தப் பாடலின் இறுதி வரியில் அப்பர் பிரான் மீளா ஆளாய், இறைவனது சேவடிக் கீழ் தஞ்சம் அடைந்ததாக கூறுகின்றார். இறைவனிடம் அன்பு பூண்ட அருளாளர்கள் தங்களை மீளா அடிமை என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றார்கள். இவ்வாறு இறைவனால் தான் ஆட்கொள்ளப் பட்டதை, மிகவும் பெருமையுடன் இறைவனது மீளா ஆளாக தான் இருக்கும் நிலையினை குறிப்பிட்டு பதிகத்தைத்
தொடங்குகின்றார்.  

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
        நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
    ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
        இன்பமே எந்நாளும் துன்பம்  இல்லை
    தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க
         வெண் குழை ஓர் காதில்
    கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்
         சேவடி குறுகினோமே

திருநாரையூர் பதிகத்தின் கடைப் பாடலிலும் (6.74.10) அப்பர் பிரான் தன்னை மீளாத ஆள் என்று குறிப்பிடுகின்றார். வெளி செய்த வழிபாடு என்றால் அறிவொளியால் செய்தவழிபாடு என்று பொருள்.

    மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி
        செய்த வழிபாடு மேவினானை  
    மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்
        கூற்றின் உயிர் மாள  உதைத்தான் தன்னை
    தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன்
         தோள் வலியும் தொலைவித்து  ஆங்கே
    நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை
         நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

சிவபிரானுக்கு மீளாத அடிமையாக மாறுவது தான், அடியார்கள் இறைவனுக்கு செய்யக் கூடிய கைம்மாறு என்று உணர்த்தும் அப்பர் பிரான் நம் அனைவரையும்
சிவபிரானுக்கு மீளா அடிமையாக மாறச் சொல்வதை நாம், திருவையாறு (4.40.7) பதிகத்தின் ஒரு பாடலில் காணலாம். பூங்கொத்துகள் மலர்கின்ற வசந்த காலத்திற்கு அரசன் என்று மன்மதனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். 

    கீள் அலால் உடையும் இல்லை கிளர்பொறி
        அரவம் பைம்பூண்
    தோள் அலால் துணையும் இல்லை
         தொத்தலர்கின்ற வேனில்
    வேள் அலால் காயப்பட்ட வீரரும்
         இல்லை மீளா
    ஆள் அலால் கைம்மாறு இல்லை
         ஐயன் ஐயாறனார்க்கே   

சுந்தரமூர்த்தி நாயனாரும் தனது முதல் பதிகத்தில், தான் இறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்தும் வண்ணம். உனக்கு அடிமையாக நான் இல்லை என்று இனிமேலும் கூறலாமோ என்று பொருள்பட உனக்கு ஆளாய் அல்லேன் இனி எனலாமோ என்று பொருள் பட பதிகத்தின் (7,1) முதல் ஒன்பது பாடல்களையும் முடிப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் கடைப் பாடலில், ஆரூரன் பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    பித்தா பிறைசூடி பெருமானே
       அருளாளா
    எத்தான் மறவாதே நினைக்கின்றேன்
        மனத்து உன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால்
        வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்
    அத்தா உனக்கு ஆளாய் இனி
         அல்லேன் எனலாமே

  
இறைவனிடம் அடிமைத்திறம் கொண்டுள்ள நாம், நமது வாழ்நாள் முழுவதும், அந்த அடிமைத் திறத்திலிருந்து மீளாமல்  இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். இந்த பாடலில், மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையினையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீளாது இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகவும் வாடி இருப்பதையும் கூறும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபிரான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்துகொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான் தனது குறையை சொன்ன பின்னரும் சிவபிரான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது போலும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவரை நாம் அணுகும்போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கூறுகின்றோம் அல்லவா. இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார்.  

    மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
    மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத்தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.     

    ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

பட்டி என்ற சொல்லுக்கு மீளா அடிமை என்று பொருள். சோற்றுத்துறை மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (5.33.3) தனது நெஞ்சத்திற்கு, பட்டியாய் சிவபெருமானுக்கு பணி செய் மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இது நமக்கு உணர்த்தும் அறிவுரையாகும். தனது நெஞ்சத்திற்கு சொல்வது போல் நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. நமது உயிருடன் ஒட்டி இருக்கும் பிறவிப்பிணி எனப்படும் நோயினையும் உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளையும், நாம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால், பெருமானின் திருவடிகளை மனதினால் தொட்டு இறைவனுக்கு அடிமையாக மாறி அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

    ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை
    கட்டி நின்ற கழிந்து அவை போயறத்
    தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே 
    பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே    

பொழிப்புரை:

படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்து அதனை போர்வையாக போர்த்துக் கொண்டவனும், உமை அம்மையுடன் இருப்பவனும், வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி பொருந்திய சடையினை உடையவனும், தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும், எருதினைத் தனது வாகனமாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை புகழ்ந்து வணங்குவாரை வினைகள் வந்து சாராமல் விலகும் .

Audio

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.