பாடல் 2:
படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்
விடை உடை கொடியர் வெண்காடு மேவிய
சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே
விளக்கம்:
விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம். படையுடை மழு=மழு ஆயுதத்தை படையாக உடைய பெருமானார்; இந்த பாடலில் விரி கோவணம் என்று பெருமான் அணிந்துள்ள கோவண ஆடையினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏன் இவ்வாறு திருஞான சம்பந்தர் கூறுகின்றார் என்பதற்கு நாம் மணிவாசகர் திருவாசகம் திருச்சாழல் பதிகத்தில் தெளிவு படுத்துவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் ஏன் வெறும் கோவண ஆடையுடன் காணப்படுகின்றார் என்று ஒரு பெண் கேட்ட கேள்விக்கு அடுத்த பெண்மணி விடை அளிப்பதாக அமைந்த பாடல். துன்னம் பெய்=தைக்கப்பட்ட; துன்னு=நெருங்கிய; துன்னு பொருள்=பொருளுடன் தொடர்பு கொண்டுள்ள; மன்னு கலை=நிலை பெற்ற ஞானக் கலைகள்; வான்=நீண்ட; சில திருமுறைப் பாடல்கள் நால்விரல் கோவணம் என்றும் குறிப்பிடுகின்றன.
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா
தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ
எனது தலைவன் எனக்கு தந்தை போன்றவன் என்று எல்லா உயிர்களாலும் சிறப்பித்து அழைக்கப்படும் ஈசன், பெரிய துணியிலிருந்து கிழித்து தைக்கப்பட்ட கோவணத்தை அணிந்திருக்கும் நிலை இறைவனுக்கு பொருத்தமான செயலா என்று முதல் பெண்மணி கேள்வி கேட்கின்றாள். அதற்கு விடையாக அடுத்தவள் கூறுகின்றாள், பெருமான் அணிந்திருக்கும் கோவணத்தை நீ என்னவென்று கருதுகின்றாய். பெருமான் அணிந்திருப்பது பஞ்சு நூலால் செய்யப்பட்ட கோவணம் அல்ல; ஞான நூலாகிய நான்கு வேதங்களே இணைந்து கோவணமாக அமைந்துள்ளன என்று புரிந்து கொள்வாயாக என்று கூறுகின்றாள். மேலும் இந்த கோவணத்தை தாங்குகின்ற அரை ஞாண் கயிறாக, நிலையாக உள்ள ஞானக் கலைகள் இருக்கின்றன என்று கூறி பெருமான் அணிந்திருக்கும் கோவண ஆடையின் உயர்வு இங்கே விளக்கப் படுகின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, வேதங்களாக விரியும் கோவணம் என்ற பொருள் பட, விரி கோவணம் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய திருமுறை பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
பெரியபுராணம் மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் சேக்கிழார் மாவிரதியாக வந்த பெருமானின் கோலத்தை விவரிக்கும் போது அவர் அணிந்திருந்த கோவணத்தை அருமறை நூல் கோவணம் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பஞ்ச முத்திரை என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். ஞானிகளின் திருமேனியில் ஐந்து குறிகள் (தாமரை, சங்கு, மீன், சக்கரம் மற்றும் தண்டம் ஆகியவை) வரைகீற்றுகளாக இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் தண்டு வாள், சங்கு, சக்கரம் மற்றும் வில் என்பன இந்த ஐந்து முத்திரைகள் என்றும் கூறுவார்கள். உயர்ந்ததாக கருதப்படும் நான்கு வேதங்களும், பெருமானின் கோவணமாக உள்ள நிலை பெருமானின் சிறப்பினை உணர்த்துகின்றது.
ஒரு முன்கைத் தனி மணி கோத்தணிந்து ஒளிர் சூத்திரமும்
அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்
இருநிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடிவில் திருபஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க
திருவக்கரை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.60.4) பெருமான் அணிந்துள்ள கோவண ஆடையினை விரிகோவண ஆடை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கனல் மேவிய ஆடலினான் என்று மகாசங்கார காலத்தில் உலகெல்லாம் எரியும் போது அந்த அக்னியின் நடுவே நின்று ஆடும் தன்மையை குறிப்பிடுகின்றார். விரித்து கூறப்படும் வேதங்களை கோவண ஆடையாக அணிந்துள்ள பெருமான், திருநீற்றினை உடலின் மீது பூசியுள்ளான் என்று சம்பந்தர் கூறுகின்றார். மையணி மாமிடற்றான் என்று இறைவன் விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் ஏற்பட்டுள்ள கருமை நிறத்து கறை உணர்த்தப் படுகின்றது.
நெய்யணி சூலமொடு நிறை வெண்மழுவும் அரவும்
கையணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல்
மையணி மாமிடற்றான் உறையும் இடம் வக்கரையே
நெல்வெண்ணெய் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.96.3) திருஞானசம்பந்தர் விரிகோவணத்தீர் என்று பெருமானை அழைக்கின்றார். மலர்களை பெருமானின் திருமேனியின் மீது தூவி, அவனது புகழினை போற்றி பாடுவோரை உயர்ந்தவர்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
திரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே
அரை விரி கோவணத்தீர் மை அலர் கொடு
உரை விரிப்போர் உயர்ந்தோரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.10.4) அப்பர் பிரான் விரிகொள் கோவண ஆடை என்று பெருமான் அணிந்துள்ள ஆடையினை குறிப்பிடுகின்றார். வான் கதவம்=பெரிய கதவுகள்; பொருள் உணர்ந்து கொள்வதற்கு மிகவும் அரிதான வேதங்களை ஓதும் பரமன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். வான்புரம்= வலிமையுடன் வெல்வதற்கு அரிதாகிய விளங்கிய மூன்று கோட்டைகள்; தாங்கள் பெற்றிருந்த வரத்தின் வல்லமையால் எவராலும் வெல்ல முடியாத நிலையில் இருந்த திரிபுரத்து அரக்கர்களை வெல்லும் ஆற்றல் பெருமான் ஒருவனுக்கே இருந்தமையால், அவர்களை அழிப்பதற்கு பொருத்தமாக விளங்கியவர் என்று சிவபெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சுவண்டர்=பொருத்தமானவர். வான் கதவும்=எவரும் திறக்க முடியாத வண்ணம் இறுக்கமாக மூடிக் கொண்டிருந்த கதவுகள்;
அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.22.8) அப்பர் பிரானும், பெருமான் அணிந்துள்ள கோவண ஆடையினை விரி கோவணம் என்று சிறப்பித்து சொல்கின்றார். புண் தலைய யானை என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். யானையை அடக்குவதற்கு அங்குசம் என்ற ஆயுதத்தை யானைப்பாகர்கள் வைத்திருப்பார். கூரிய முனையைக் கொண்ட அதனால் யானையின் மத்தகத்தில் அழுத்தி அடக்குவார்கள். இவ்வாறு அங்குசத்தால் அடிக்கடி குத்தப் படுவதால் புண் உடையதாக யானையின் மத்தகம் (தலையின் ஒரு பகுதி) காணப்படுவதால் புண் தலை என்று இங்கே கூறுகின்றார்.
வெண் தலையும் வெண்மழுவும் ஏந்தினானை விரிகோவணம்
அசைத்த வெண்ணீற்றானைப்
புண் தலைய மால் யானை உரி போர்த்தானைப் புண்ணியனை
வெண்ணீறு அணிந்தான் தன்னை
எண்திசையும் எரியாட வல்லான் தன்னை ஏகம்பம்
மேயானை எம்மான் தன்னைக்
கண்டலம் கழனி சூழ் அந்தண் நாகைக் காரோணத்து
எஞ்ஞான்றும் காணலாமே
நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.99.5) சுந்தரர் கோவண ஆடையின் மேல் பாம்பினை பெருமான் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். நான்மறைகளை உரைத்ததும் அன்றி, நான்மறைகளின் பொருளையும் விளக்கி கூறியவர் பெருமான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல்
உரை பெருகவ் வுரைத்து அன்று உகந்து அருள் செய்தது என்னே
வரை தரு மாமணியும் வரைச் சந்து அகிலோடும் உந்தித்
திரை பொரு தண் பழனத் திரு நாகேச்சரத்தானே
கோவண ஆடை அணிவதை பெருமான் மிகவும் விரும்புகின்றார் என்பதை உணர்த்தும் பொருட்டு. கோவணம் உகந்த கொள்கையர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இறைவனை கீளும் கோவணமும் அணிந்தவன் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. நமக்கு சம்பந்தர் திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடல் (1.23.1) நினைவுக்கு வருகின்றது. கீள்=கிழிக்கப்பட்ட துணியால் முறுக்கிய கயிறு, கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பினில் கட்டப்படுவது. நீர்வளமும் நிலவளமும் நிறைந்த தலத்தினில் உறையும் இறைவன் ஏன் கோவணம் அணிந்து எளிமையாக இருக்கவேண்டும் என்ற கேள்வி இந்த பாடலில் கேட்கப் படுகின்றது. உலகனைத்தையும் தோற்றுவித்த இறைவன் விரும்பினால் அவனுக்கு கிடைக்காத பொருள் உளதோ. எல்லாம் உடையவனாக இருந்தாலும் எதிலும் பற்று கொள்ளமால் இருக்கும் நிலையை உணர்த்தும் முகமாக, கோவணம் அணிந்து சாம்பல் பூச்சுடன் இறைவன் காணப்படுகின்றான் என்று விளக்கம் கூறுவார்கள். எதனையும் அனுபவிக்காமல் பற்றற்ற யோகியாக தான் இருப்பதை உலகுக்கு உணர்த்தி, உலகப் பொருட்கள் மீதுள்ள பற்றினை விடுத்து வாழும் மனிதர்களுக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டு வீடுபேறு வழங்கப்படும் என்பதை உணர்த்தும் முகமாக பெருமான் இந்த கோலத்தில் இருக்கின்றார் என்று கூறுவார்கள். இவ்வாறு கோவணம் மட்டுமே அணிந்து குறைந்த ஆடையுடன் இருக்கும் இறைவன், ஆடையிலாதவன் என்ற பொருள் பட நக்கன் என்றும் நால்வர் பெருமானார்கள் அழைக்கின்றனர்.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என் கொலோ
கோவண ஆடை அணிந்திருப்பதால் குறை ஏதும் இல்லாதவர் என்று அப்பர் பெருமான் உணர்த்தும் பாடல் (6.09.08) ஒன்றும் நமது நினைவுக்கு வருகின்றது. ஒன்றாலும் குறையிலீர் என்று அப்பர் பெருமான் மிகவும் நயமாக இறைவனின் நிலையினை இங்கே குறிப்பிடுகின்றார். ஒன்றாலும் குறைவில்லை என்ற தொடர் மூலம் சிவபிரான் குறையேதும் இல்லாதவர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேர், குதிரை, யானை போன்ற வாகனங்கள் இல்லை என்ற குறையோ (வாகனம், எருது), உயர்ந்த பட்டாடைகள் இல்லை என்ற குறையோ (உடை, கோவணம் மற்றும் தோலாடை), பொன்னாபரணம் இல்லை என்ற குறையோ (அணிகலன்கள், நாகம் மற்றும் எலும்பு மாலை), உயர்ந்த மாலைகள் இல்லை என்ற குறையோ (எலும்பு மாலை அல்லது தலைமாலை), வாசனை தரும் பொடிகள் பூசவில்லை என்ற குறையோ (மேனியில் பூசுவது திருநீறு), தமது தலமாகிய ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டு உள்ளது என்ற குறையோ இல்லாமால் இருப்பவர் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகின்றது. நிறை=அடக்க குணம்; ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர்.
ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு ஒற்றியூர்
உம் ஊரே உணரக் கூறீர்
நின்று தான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி
நிறையும் கொண்டீர்
என்றும் தான் இவ்வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி
அறிந்தோம் ஏகம்போ
அன்றித் தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே
கோவணம் ஆடையினை அணிந்துள்ள பெருமான் நாணம் ஏதும் கொள்ளாதவர் என்று அப்பர் பிரான் திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.53.1) கூறுகின்றார். நம் போன்றவர் அணியும் கோவண ஆடை போன்றது அல்லவே பெருமான் அணிந்துள்ள கோவண ஆடை. நான்கு வேதங்களும் கோவணமாக விரிந்து நிற்க. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருள் கீளாக தாங்கி நிற்கும் பெருமை வேறு எவருக்கு வாய்க்கும், இத்தகைய பெருமை படைத்த கோவணத்தை அணிந்ததற்கு நாணம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அல்லவா. மாறாக பெருமை தானே கொள்ளவேண்டும். உணர்ச்சிகளைக் கடந்த பெருமான், நாணம் கொள்வதுமில்லை, பெருமை அடைவதுமில்லை. பெருமானைக் கண்டால் தான் தனது கண்கள் துயில் கொள்ளும் என்பதால் தான் அவரை அடிக்கடி சென்று காண்பதாக அப்பர் நாயகி கூறுவதாக அமைந்துள்ள அகத்துறை பாடல்.
கோணல் மாமதி சூடி ஓர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயன் நிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
இந்த பாடலில் பெருமானை சதுரர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சதுரன் என்றால் திறமை உடையவன், சாமர்த்தியசாலி என்று பொருள். எவர்க்கும் இயலாத பல வீரச் செயல்களை புரிந்த பெருமானை சதுரன் என்று நால்வர் பெருமானர்கள் பல பாடல்களில் அழைத்து மகிழ்கின்றனர். கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலாக மாறிய தனது முன்னோர்களை கடைத் தேற்றும் பொருட்டு, கங்கை நதியினை பாதாள உலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்ய, பிரமனும் அவனது தவத்தில் மகிழ்ந்து கங்கை நதியினை கீழே செல்லுமாறு பணிக்கின்றார். ஆனால் தேவ லோகத்தை விட்டுச் செல்வதில் விருப்பம் இல்லாத கங்கை, பூமியையே தனது வேகத்தால் புரட்டி கடலுடன் சேர்க்கும் எண்ணத்துடன், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கத் தலைப்பட்டாள். அப்போது பூமிக்கு நேரவிருந்த அழிவிலிருந்து காக்கும் பொருட்டு கங்கை நதியினை தாங்குவார் எவருமின்றி, பெருமானின் உதவியை பகீரதன் நாட, பெருமானும் அதற்கு இசைந்து தனது சடை முடியில் கங்கையைத் தாங்கினார். இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயரத்திலிருந்து கீழே பள்ளத்திற்கு பாயும் இயல்பு கொண்ட தண்ணீரை, தடுத்து நிறுத்தி தாங்குவதற்கு தனித் திறமை வேண்டும் அல்லவா. இந்த திறமை பெருமானிடம் இருந்ததை குறிப்பிட்டு சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடலை நாம் இங்கே காண்போம். அல்லரே என்று பாடலை முடித்தாலும், எதிர்மறைக் பொருளாக குறிப்பிடுவதாக கொள்ளாமல் சதுரர் என்று சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம்.
கற்குடி தலத்தின் (1.43.1) மீது அருளிய பதிகத்தில், திருஞானசம்பந்தர் பெருமான் கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றதை, தாழ்சடை வைத்த சதுரர் என்று குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். ஒரு மாதினை உடலிலும் மற்றொரு மாதினை சடையிலும் வைத்திருந்தாலும், இன்ப துன்பங்களைக் கடந்தவராக பெருமான் உள்ளார் என்று சம்பந்தர் கூறுகின்றார்.
வடம் திகழ் மென்முலையாளை பாகமாதாக மதித்துத்
தடம் திரை சேர் புனல் மாதை தாழ்சடை வைத்த சதுரர்
இடம் திகழ் முப்புரிநூலர் துன்பமோடு இன்பமது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே
பொழிப்புரை:
பெருமான் மழுவினை தனது படையாக உடையவர்; பாயும் குணத்தினை உடைய புலியினைக் கொன்று அதன் தோலினைத் தனது ஆடையாக அணிந்தவர்; விரிந்த பொருளினை உடைய வேதங்களை கோவண ஆடையாக மகிழ்ந்து ஏற்றுக்கொண்டுளார்; இடப வடிவம் பொறிக்கப்பட்ட கொடியினை உடைய அவர் வெண்காடு தலத்தில் உறைகின்றார். தனது விரிந்த சடையின் இடையே கங்கை நதியை தேக்கி வைத்துள்ள அவர் மிகுந்த திறமையாளர் அல்லவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


