திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

97. மந்திர மறையவை - பாடல் 11

வினைகளும் நீங்குதல்

News image
Updated On :1 ஜூலை 2018, 10:22 am


பாடல் 11:

    நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
    செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்
    சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
    அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே

விளக்கம்:

பதிகத்தினை ஓதுவார்கள் அடையும் பயனாக அவர்களது துன்பங்களும் துன்பங்களுக்கு காரணமான வினைகளும் நீங்குதல் ஆணை என்று கூறுவதால், இந்த பதிகமும் ஆணைப் பதிகமாக கருதப் படுகின்றது. அருவினை=தொலைப்பதற்கு மிகவும் அரிதாக, மிகுந்த வலிமையுடன் உயிர்களுடன் பிணைந்துள்ள வினை; வினைகள அறுக்கும் வல்லமை வாயந்தமையால், கிடைத்தற்கரிய அருந்தமிழ் மாலை என்று சம்பந்தர் கூறுவதை நாம் உணரலாம். புகலி என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. .இந்த பாடலில் செல்வன் என்று சம்பந்தர் இறைவனை அழைக்கின்றார். விலையுடை நீற்றர் என்று பதிகத்தின் எட்டாவது பாடலில் திருநீற்றின் மதிப்பினை உணர்த்தும் சம்பந்தர், திருநீறு அணிந்த செல்வர் என்று பெருமானையும் குறிப்பால் உணர்த்துகின்றார். மேலும் நிலையான இன்பத்தைத் தருவதும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை தருவதும் ஆகிய முக்திச் செல்வத்தினை உடையவர்சிவபெருமான் ஒருவர் தானே. வேறு எவரிடமும் இல்லாத ஒரு பொருளினை அனைவரும் அடைய விரும்பும்
பொருளினை உடைய பெருமானை செல்வர் என்று அழைப்பது தானே பொருத்தம்.      

பொழிப்புரை:

நல்லவர்கள் அதிகமாக வாழும் புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் வாழ்கின்ற ஞானசம்பந்தன், அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வத்தினை உடைய செல்வராகிய சிவபெருமான் உறையும் திருவெண்காடு
தலத்தின் மீது சொல்லிய அரிய தமிழ் பாடல்கள் பத்தினையும் பாடும் வல்லமை வாய்ந்தவர், தமது துன்பங்கள் தீர்க்கப் பெற்று, தங்களை வலிமையாக பிடித்துள்ள வினைகளும் நீக்கப்பெற்று நிலையான பேரின்பம் தரும் முக்தி வாழ்வினைப் பெறுவார்கள். இது எனது ஆணையாகும்.     

முடிவுரை:

வெண்காடு விகிர்தனாரை வணங்கி பதிகங்கள் மூன்று பாடிய பின்னர் திருஞான சம்பந்தர் தனது ஊரான சீர்காழி வந்து சேர்கின்றார். சில நாட்கள் சீர்காழியில் தங்கிய பின்னர் அருகில் உள்ள மயேந்திரப்பள்ளி, குருகாவூர், திருமுல்லைவாயில் (இரண்டாவது முறையாக சென்றது) ஆகிய பல தலங்கள் பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பயணம் மூன்றாவது தல யாத்திரையாக கருதப் படுகின்றது. இந்த யாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழியில் பிள்ளையார் தங்கியிருந்த நாளில், திருநீலகண்டத்து பெரும்பாணரும் அவரது மனைவியார் மதங்க சூளாமணியாரும் பிள்ளையாரைக் காண்பதற்கு சீர்காழி வந்தனர்.

அவர்கள் இருவரும் வருவதை அறிந்த சம்பந்தர், சீர்காழியின் எல்லைக்கு சென்று அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார். அவர்களை அழைத்துக் கொண்டு தோணிபுரத்தார் உறையும் திருக்கோயிலுக்கு செல்ல, ஆங்கே இறைவனை வணங்கிய பின்னர், யாழ்ப்பாணரும் அவரது மனைவியாரும் யாழ் வாசித்ததை சம்பந்தர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்டார். அவர்கள் இருவரின் குரலும் யாழின் இசைக்கு ஒத்ததாக மிகவும் இனிமையுடன் இருந்ததை அனைவரும் பாராட்டினார்கள். பின்னர் அவர்கள் இருவரும் தங்கியிருப்பதற்கு தனியிடம் அமைத்துக் கொடுத்து விருந்தும் அளித்து அவர்களுக்கு சம்பந்தர் கௌரவம் செய்தார். பின்னர் யாழ்ப்பாணர் சம்பந்தரை வணங்கி, அவர் பாடும் தேவாரப் பாடல்களுக்கு இசையமைத்து யாழில் பாடுவதற்கு தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், வரும் நாட்களில் தான் அவரை விட்டு பிரியாது இருக்கவேண்டும் என்றும் விண்ணப்பம் வைத்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தர், இதுவும் பெருமானின் அருளே என்று எண்ணினார். அன்று முதல் யாழ்ப்பாணர் சம்பந்தரை விட்டு பிரியாது இருந்தார். இந்த நிலையில் தில்லை செல்லவேண்டும் என்ற ஆசை சம்பந்தருக்கு ஏற்பட்டது. யாழ்ப்பாணரும் தனது தந்தையும் தன்னுடன் வர, தனது நான்காவது யாத்திரை மேற்கொள்கின்றார். திருஞான சம்பந்தரின் பாடல்களை இசையுடன் இணைத்து பாடி, யாழ்ப்பாணர் மகிழ்ந்தது போன்று நாமும் பாடி மகிழ்ந்து இறைவனின் அருள் பெறுவோமாக.  

இந்த பதிகத்தின் முதல் பாடலில் இந்திரன் முதலானோர் இறைவனை வணங்குவதை குறிப்பிடும் சம்பந்தர் இரண்டாவது பாடலில் பெருமானை சதுரர் என்று புகழ்கின்றார். மூன்றாவது பாடலில் அவனது உருவத்தையும் நான்காவது பாடலில் அவனது வீரத்தையும், ஐந்தாவது பாடலில் வேதங்கள் பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் நிலையையும், ஆறாவது பாடலில் விண்ணவர் மண்ணவர் அனைவரும் இறைவனைத் தொழுவதையும், ஏழாவது பாடலில் அன்பருக்கு அன்பராகவும் அல்லாதார்க்கு அச்சம் ஊட்டுபவனகவும் இறைவன் இருக்கும் நிலையையும், எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனுக்கு அருள் புரிந்தமையும், ஒன்பதாவது பாடலில் அவனது ஆடல் அவன் ஐந்தொழில் புரிவதையும், பத்தாவது பாடலில் வேதியர்கள் இறைவனைத் தொழுவதையும் குறிப்பிடும் ஞானசம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை பாடும் வல்லமை வாய்ந்தவர் தங்களது வினைகள் தீர்க்கப் பெற்று, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல் உறுதி என்றும் அதுவே தனது ஆணை என்றும் கூறுகின்றார். பதிகத்தின் பெருமையை உணர்ந்த நாம், இந்த பதிகத்தினை ஓதி, இதனில் குறிப்பிட்டுள்ள பயனை அடைவோமாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.