ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 11

பெருமானை வழிபடுவதால்

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 6:30 pm

பாடல் 11:

    புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
    அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்
    பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும் நும்
    பந்தமார் வினை பாறிடுமே

விளக்கம்:

வாழும்=வாழ்வீர்களாக; பந்தமார்=பிணைத்து நிற்கும்; புந்தி=மனம்; அந்தமில் அடிகள் என்று முடிவில்லாத ஆற்றல் உடைய பெருமான் என்று பெருமானின் எண்குணங்களில் ஒன்றினை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பேரருள் உடையவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் அருள் செய்யும் திறம் இந்த பதிகத்தின் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன் என்பதை நாம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் சிந்தித்தோம். எண்குணத்தான் என்று அழைக்கப்படும் பெருமானின் எஞ்சிய ஐந்து குணங்கள், தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் என்பனவாகும்.  

பொழிப்புரை:

உயர்ந்த கொள்கைகள் நிறைந்த நல்ல மனதினர் வாழும் பூந்தராய் நகரினில் வாழும் பெருமானை, முடிவு ஏதும் இல்லாமல் என்றும் நிலைத்து நிற்கும் பெருமானை, ஞான சம்பந்தன் அருளிய மாலை கொண்டு புகழ்ந்து வாழும் அடியார்கள் தங்களைப் பிணைத்துள்ள வினைகளின் தன்மை முற்றிலும் மாறிவிடும்.     

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் பூந்தராய் தலத்தில் உறையும் இறைவனை, நமது சிந்தையில் வைத்தால் பல நன்மைகள் விளையும் என்றும் இந்த காரணம் பற்றியே உண்மையான மெய்ஞானம் அடைய விரும்புவோர் பெருமானை தியானம் செய்கின்றனர் என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறும் சம்பந்தர், அடுத்து வரும் பாடல்களில்  பெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை கூறுகின்றார். வேந்தராய் உலகு ஆளலாம் என்றும் நம்மைப் பற்றியுள்ள வினைகள் செயலற்று விட முக்தி நிலையினை நாம் அடையலாம் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நான்காவது பாடலில் மனமும் உடலும் நலம் பெற்று இருக்கும் என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் வினைகளிலிருந்து விடுதலை பெற்று வீடுபேறு அடைய வழி வகுக்கும் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில் நாள்தோறும் இன்பமுடன் இருக்கலாம் என்றும் ஏழாவது பாடலில் நமது பாவங்கள் அழிந்துவிடும் என்றும் ஒன்பதாவது பாடலில் நமது வினைகள் மாளும் என்றும் கூறுகின்றார். எட்டாவது பாடலில் அரக்கன் இராவணன் பால் கருணை கொண்டு அருளியதை குறிப்பிட்டு, இறைவனைப் புகழ்ந்து பாடினால் நமது குற்றங்களும் மன்னிக்கப்பட்டு அவனது அருளினை நாம் பெறலாம் என்று உணர்த்துகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் கூறும் பொருத்தமில்லாத சொற்களை வெறுத்து நீக்கிவிடும் பெருமான் என்று குறிப்பிட்டு, நாமும் அவ்வாறு செய்து, மாற்று மதத்தவர்களின் பொய்யுரைகளை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடல் இந்த பதிகத்தை ஓதுவதால், நம்மை பிணித்திருந்த வினைகள் நீங்கி விடும் என்று கூறப்படுகின்றது. சீர்காழிப் பெருமானை தொழுவதால் கிடைக்கும் பலன்களை ஞானசம்பந்தர் வாயிலாக அறிந்து கொண்ட நாம், பெருமானை வணங்கித் தொழுதும் இந்த பதிகத்தினை ஓதியும் பலன் அடைவோமாக.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.