பின்னணி
நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தருக்கு அவரது தந்தையார் உபநயனச் சடங்கு செய்வித்தார். இந்த சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து ஞானசம்பந்தரைக் காண வேண்டும் என்ற விருப்புடன் தில்லைச் சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட திருநாவுக்கரசர் சீர்காழி வந்து செர்ந்தார், சீர்காழி வந்து சேர்ந்த திருநாவுக்கரசரை, பல அடியார்கள் புடை சூழ எதிர்கொண்ட சம்பந்தர அவரை அன்புடன் அப்பரே என்று அழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து சீர்காழி நகரத்தில் உள்ள திருக்கோயிலுக்கும் அருகில் உள்ள திருக்கோலக்கா தலத்திற்கும் ஒன்றாக சென்றனர். கோலக்கா சென்று திரும்பியதும் நாவுக்கரசர், பல சோழ நாட்டு தலங்களைக் காண்பதற்கு ஆவல் கொண்டவராக சீர்காழியிலிருர்ந்து புறப்பட்டு செல்ல, சம்பந்தர் பல நாட்கள் சீர்காழியில் தங்கி இருந்தார். அவ்வாறு இருந்த நாட்களில் பல வகையான பதிகங்களை அருளினார். இந்த பதிகங்கள் பல வகையிலும் ஏனைய பதிகங்களிலிருந்து மாறுபட்டு காணப் படுகின்றன. இவற்றுள் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அத்தகைய வித்தியாசமான பதிகங்களில் ஒன்று தான் நாலடிமேல் வைப்பு என்ற வகையைச் சார்ந்த இந்த பதிகம்.
பொதுவாக தேவாரத் திருவாசகப் பதிகங்கள் நான்கு அடிகள் கொண்டவையாக விளங்குகின்றன. ஆனால் இந்த பதிகத்தில் ஆறு அடிகள் இடம் பெற்றுள்ளன. ஒரே சந்தத்தின் அமைப்பில் உள்ள முதல் நான்கு அடிகளை மேல் வேறொரு சந்த அமைப்பில் உள்ள இரண்டடிகளை ஒட்டி வைத்தது போன்று காணப்படுவதால் நாலடிமேல் வைப்பு என்ற பெயர் வந்தது. திருவாவடுதுறை தலத்தின் மீது அருளப்பட்ட, இடரினும் தளரினும் என்று தொடங்கும் பதிகமும் (3.04) இந்த பதிகம் போன்றே காந்தார பஞ்சமம் பண்ணில் அமைக்கப் பட்டுள்ளது. ஆலவாய்த் தலத்தின் மீது அருளிய வேதவேள்வியை என்று தொடங்கும் பதிகமும் (3.108) நாலடி மேல் வைப்பு என்ற வகையில் அமைந்துள்ளது. இந்த மூன்று பதிகங்களையும் திருவாசகத்தில் காணப்படும் திருவம்மானை மற்றும் பொன்னூசல் பதிகங்களை தவிர்த்து உள்ள மற்ற அனைத்துப் பதிகங்களும் நான்கு அல்லது அதற்கும் குறைந்த அடிகளைக் கொண்ட பதிகங்களாக உள்ளன. திருவாசகத்தில் உள்ள பதிகங்களின் பாடல்கள், ஆறு அடிகளும் ஒரே வகையான சந்தத்தில் அமைந்துள்ளன.
பாடல் 1:
இயலிசை எனும் பொருளின் திறமாம்
புயல் அன மிடறுடைப் புண்ணியனே
கயல் அன வரி நெடும் கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி தன்னுள்
நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே
விளக்கம்:
இயல்=இயற்றமிழ்; இசை=இசைத்தமிழ்; முத்தமிழ்களில் இயல் மற்றும் இசைத் தமிழ்களை குறிப்பிட்ட படியால் நாடகத் தமிழையும் குறிப்பிட்டதாக நாம் கொள்ள வேண்டும் பொருள்= மேற்கண்ட மூன்று தமிழால் கருதப்படும் முடிந்த பொருள்; அயல் உலகு=நிலவுலகத்திற்கு வேறான விண்ணுலகம்; கலன் என்பதற்கு உண்ணும் கலன் என்றும் அணிகலன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பிரமனின் கபாலம் உலர்ந்து வெண்மை நிறத்துடன் உண்கலமாக இறைவனின் கையினில் உள்ளது. தானே நிலையானவன் என்பதை உணர்த்தும் பொருட்டு தலைமாலை அணிந்தவனாகவும் இறைவன் காட்சி தருகின்றான். எனவே இரண்டும் பொருத்தமான விளக்கமே. நிறை மதி=நிறைந்த அறிவு, ஞானம். புயல்=மேகம்; மிடறு=கழுத்து; கடி பொழில்=நறுமணம் வீசும் சோலைகள்; நிலன்=நிலவுலகம்
எண்ணரிய சிவஞானம் கலந்து கொடுக்கப்பட்ட பாலினை தனக்கு ஊட்டுமாறு, உமை அம்மையைப் பணித்து தனக்கு இறைவன் நிறைந்த ஞானம் அளித்ததை நினைவு கூறும் சம்பந்தர், அந்த ஞானம் தனக்கு அளிக்கப்பட்டதன் காரணத்தையும் இங்கே கூறுகின்றார். தன்னுள் இருந்து இறைவன் மொழிந்த தேவாரப் பாடல்களை நாள்தோறும் ஓதியும் கேட்டும் உலகத்தவர் உய்யும் பொருட்டு, தனக்கு ஞானம் அளிக்கப்பட்டது என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தமிழ்நாட்டில் பலரும் தேவாரப் பதிகங்கள் பாடுவதற்கு காரணமாக இருப்பவர் திருஞானசம்பந்தர் தானே. தேவாரப் பதிகங்கள் தோன்றுவதற்கும் ஆதாரமாக இருப்பது அம்மையே அப்பா என்று தோணிபுரத்து கோயில் சிகரத்தை பார்த்து அவர் அழுதது தானே, அதனைக் கேட்டு பெருமான் பிராட்டியுடன் கீழே இறங்கி வந்து ஞானப்பால் அளித்து, மூன்று வயது குழந்தையை தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தினை பாடச் செய்தது. இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பாடல் ஒன்றனில் சேக்கிழார், பல உயிர்களும் இன்பம் பெருகி களிக்கும் வண்ணம் இந்த பாடலை பாடிய ஞானசம்பந்தர், உலகத்தவரின் மனத்தினை இந்த பதிகம் மற்றும் பல தேவாரப் பதிகங்கள் சென்று அடைய செயல்படும் உறுப்பாகிய காதினை சிறப்பித்து தோடுடைய செவியன் என்று பாடியதாக கூறுகின்றார். இந்த பெரிய புராண பாடலை நாம் இங்கே காண்போம்.
எல்லையில்லா மறை முதல் மெய் உடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடும் தமிழால் இம்மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப்
பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்
செல்லும் உரை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து
எழுது மறை=அவ்வப்போது ஓலைகளில் பதிவு செய்யப்பட்ட தேவாரப் பதிகங்கள்; எழுதா மறை என்று வடமொழி வேதங்களை குறிப்பிடுவார்கள்; மறையின் முதல் எழுத்து பிரணவ மந்திரம்; தமிழ் என்ற சொல்லின் முதல் எழுத்து த. இதற்கு ஆதாரமாக உள்ளது த் என்ற மெய்யெழுத்து. இந்த இரண்டு எழுத்துகளையும் இணைத்து தோ என்ற எழுத்தினை முதல் சொல்லாக வைத்து தொடங்கப்பட்ட பாடல். மல்லல்=வளமை வாய்ந்த; உரை சிறப்ப என்று தமிழுலகில் வாழும் மக்கள் இந்த தேவாரப் பதிகங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்தினைக் கேட்டு உய்வினையடையும் பொருட்டு;
ஞானசம்பந்தர் அன்று அழுததால் நமக்கு தேவாரப் பதிகங்கள் கிடைத்தன என்பதால், அழுதார் என்று குறிப்பிடாமல் அழுது அருளினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடல் திருஞானசம்பந்தர் புராணத்தின் முதல் பாடலாகும். பூதம்=உயிர்கள்; பொலிதல்=தங்களைத் பிணைத்துள்ள வினைகளின் விளைவால் பற்பல பிறவிகள் எடுக்கும் உயிர்கள் தேவாரப் பாடல்கள் மூலம் படிப்படியாக பக்குவம் பெறுதல்; சமணம் மற்றும் புத்த மதங்களின் தாக்கத்தால் குன்றிய சைவ சமயம் தழைத்துப் பெருகும் பொருட்டு, வேதநெறிகள் தழைத்து வளர்வதற்கு தேவாரப் பதிகங்கள் காரணமாக இருந்தன என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். எனவே தான் அழுத வாயினை சிறப்பித்து, புனித வாய் என்று மலர்ந்து அழுத என்றும் சேக்கிழார் கூறுகின்றார். மற்றொரு பாடலில் அழுது அருளியவர் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். கதிர்காமம் தலத்தின் மீது பாடிய திருப்புகழில். அருணகிரி நாதர் அழுது உலகை வாழ்வித்தவர் என்று ஞானசம்பந்தரை குறிப்பிடுகின்றார்.
வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்க
பூத பரம்பரை பொலிய புனிதவாய் மலர்ந்து அழுத
சீதவளர் வயல் புகலி திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
பொழிப்புரை:
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்று வகையான தமிழ் நூல்களிலும் குறிப்பிடப்படும் முடிவான பொருளாக இருப்பவனே, கருமையான மேகம் போன்ற நிறத்தில் கழுத்தினை உடையவனே, விண்ணவர்களும் உனது திருவடிகளைத் தொழும் வண்ணம், கயல்மீன் போன்று நீண்டு அழகாக உடைய கண்களை உடைய உமை அன்னையுடன் பல தலங்களில் உறைபவனே, உமக்கு அணிகலனாக உள்ளது வெண்தலை மாலையாகும். நறுமணம் நிறைந்த சோலைகள் கொண்ட புகலி நகரினுள் அமர்ந்துள்ள இறைவனே, அடியேனுக்கு நிறைந்த அறிவினை அளித்து, அந்த அறிவினைக் கொண்டு தேவாரப் பாடல்கள் பாட வைத்து, அந்த பாடல்களால் உலகத்தில் உள்ள உயிர்கள் இன்பம் அடியுமாறு அருள் புரிந்தாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


