ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 11

கண்ணுக்கு இனிய காட்சி

News image
Updated On :17 ஆகஸ்ட் 2019, 6:30 pm

பாடல் 11:

    கண்ணாரும் காழியர் கோன் கருத்து ஆர்வித்த
    தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
    மண் ஆரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
    பண்ணாரப் பாட வல்லார்க்கு இல்லை பாவமே
 

விளக்கம்:

கண்=மூங்கில்; தண்ணார் சீர்=பெருமானின் அருளினால் ஏற்பட்ட குளிர்ச்சியையும் சிறப்பினையும் குறிக்கின்றது. கண்ணார என்ற சொல்லுக்கு கண்ணுக்கு இனிய காட்சிகள் உடைய என்று பொருள் கொண்டு அழகான இயற்கை வளம் நிறைந்த சீர்காழி தலம் என்றும் பொருள் கொள்கின்றனர்.

பொழிப்புரை:

மூங்கில்கள் வளத்துடன் வளரும் சீர்காழி தலத்தின் தலைவனாகிய ஞானசம்பந்தன், பெருமானின் குளிர்ச்சியான திருவருளைப் பெற்றதால் சிறப்பினை அடைந்த ஞானசம்பந்தன், வளம் நிறைந்த மண்ணினை உடைய மணஞ்சேரி பெருமான் மீது இயற்றிய இந்த தமிழ் மாலையினை பண்ணுடன் பொருத்தி பாடும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு பாவங்கள் விளையாது.  

முடிவுரை:

இந்த பதிகத்தை மனம் ஒன்றி பக்தியுடன் ஓதினால், இல்லத்தில் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும், தம்பதிகளின் இடையே பிணக்கு ஏதேனும் இருப்பின் அவை தீர்க்கப்பட்டு மனமொத்த தம்பதியர்களாக வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானை வழிபட்டால் நாம் அடையவிருக்கும் பலன்கள்  உணர்த்தப் படுகின்றன. மணஞ்சேரி இறைவனை பற்றி நின்றால் நமக்கு பாவங்கள் இல்லை என்று பதிகத்தின் முதல் பாடலிலும், இறைவனை புகழ்ந்து பாடினால் வலிமை வாய்ந்த வினைகளும் அழிந்துவிடும் என்று இரண்டாவது, மூன்றாவது மற்றும் பத்தாவது  பாடல்களிலும், இறைவனைச் சென்றடையும் அடியார்களுக்கு துன்பங்கள் இல்லை என்று நான்காவது பாடலிலும், இறைவனின் திருநாமங்களை மற்றும் அவனது புகழினைச் சொல்லும் அடியார்களுக்கு துன்பங்கள் சென்று அடையா என்றும் ஐந்தாவது பாடலிலும், பெருமானை இகழாது புகழும் அடியார்கள் என்றும் இன்பமுடன் வாழ்வார்கள் என்று ஆறாவது பாடலிலும் கூறும் சம்பந்தர், அடுத்த இரண்டு பாடல்களில் பெருமானைப் போற்றி பேசும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்றும் கூறுகின்றார். எனவே நாம் அனைவரும் பெருமானின் திருப்பாதங்களை புகழுவோம் என்று நம் அனைவரையும் ஒன்பதாவது பாடல் மூலம் தூண்டும் சம்பந்தர், பதிகத்தின் கடைப் பாடலில் இசையுடன் பொருத்தி இந்த பதிகத்து பாடல்களை பாடும் அடியார்களுக்கு துன்பம் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். மணஞ்சேரி மணாளனை மனதினால் நினைத்து,  அவனது புகழினை உணர்த்தும் இந்த பதிகத்து பாடல்களை பாடி, இல்வாழ்க்கையில் எந்த குறையும் இன்றி வாழ்ந்து மறுமையில் நிலையான இன்பம் பெற்று மகிழ்வோமாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.