பாடல் 8:
வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த மதியில் வலியுடை
அரக்கனது உரக் கர சிரத்துற அடர்த்து அருள் புரிந்த அழகன்
இருக்கையது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குல நெருக்கு மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே
விளக்கம்:
இந்த பாடலில் இராவணனது செய்கை, கயிலை மலையினை பேர்த்தெடுக்கச் செய்த முயற்சி, தேவிக்கு அச்சம் ஊட்டியதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருமுறை பாடல்களில் தேவி அச்சம் கொண்டதாக மூன்று நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. மிகவும் அதிகமாக குறிப்பிடப்படும் நிகழ்ச்சி, பெருமான் தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்ட நிகழ்ச்சி. இரண்டாவது நிகழ்ச்சி பெருமான் உண்ட நஞ்சு அவரது உடலினுள்ளே சென்று தங்கினால், ஊழிக்காலத்தில் அவரது உடலில் ஒடுங்கும் உயிர்களுக்கு ஏதேனும் தீங்கு விளையுமோ என்ற அச்சத்தினால் தேவிக்கு பயம் ஏற்பட்டது. மூன்றாவது நிகழ்ச்சி அரக்கன் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது ஏற்பட்ட அச்சம். பெருமான் இராவணனின் செயலால் கோபம் கொண்டு அவனை மலையின் கீழே நெருக்கினார் என்று பொருள் கொள்வது தவறு என்றும் தேவியின் அச்சத்தை தீர்க்கும் பொருட்டே அரக்கனின் வலிமையை குறைத்தார் என்பதையும் உணர்த்தவே, உமையன்னை கொண்ட அச்சம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. கோபதாபங்களைக் கடந்த பெருமான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருபதுக்கும் மேற்பட்ட திருமுறைப் பாடல்களில் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி அச்சம் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.8) சம்பந்தர் கயிலாய மலையினை அரக்கன் இராவணன் எடுக்க முயற்சி செய்த போது உமையம்மை அஞ்சவே, அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை சற்று சுளித்து மலையின் மீது ஊன்றி, அரக்கன் சோர்வு அடையுமாறு செய்தார் என்று கூறுகின்றார். சோர்வடைந்த இராவணன் தனது தவறினை உணர்ந்து பெருமானை போற்றி சாமகானம் பாடிய பின்னர் அவன் செய்த தவறினை பொருட்படுத்தாது அவனுக்கு அருள் நல்கிய பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் இறைவனின் திருவடித் தாமரைகளைச் சென்றடைய தவம் செய்யும் முனிவர்கள் போன்றவர்கள் ஆவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருவடிப் பெருமையை உணர்த்துகின்றார். அரக்கனது பற்கள் ஒளி வீசும் வாள் போன்று இருந்தன என்று சம்பந்தர் கூறுகின்றார்.
ஒளிகொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர் வரை எடுத்தலும்
உமை அஞ்சிச்
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு
அருள் செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நல் கொழுந்தினைத்
தொழுவார்கள்
தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள் பெரும் தவம்
உடையவர்களே
மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8) உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே, சிவபெருமான் அடக்கினார் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.
புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) சம்பந்தர் உமையன்னை இராவணனின் செயலால் அச்சம் கொண்டு நடுங்கியதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். மறுக=அச்சம் கொள்ள; தொல்லை மலை=மிகவும் பழமையான கயிலாய மலை; கொல்லை விடை=முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமால், திரிபுர தகனத்தின் போது விடையாக பெருமானை தாங்கிய நிலை; திருமால் விடையாக தன்னைத் தாங்கியதை பெருமான் உகந்து ஏற்றுக் கொண்டான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போர் செய்ய புறப்பட்ட போது, தேவர்கள் பலரும் அந்த போரினில் பெருமானுக்கு உதவும் பொருட்டு பல விதங்களில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றமை குறித்து அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டது போலும். அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களிடம் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொண்டிருந்த தேவர்களால் பெரிதாக என்ன உதவி செய்து விடமுடியும் என்பதையும் மறந்து அவர்கள் கர்வம் கொண்டது தவறான செய்கை தானே. எவரின் உதவியும் தேவைப்படாமல் திரிபுரத்து அரக்கர்களை தன்னால் வெல்ல முடியும் என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் பொருட்டு, தேவர்கள் பங்கேற்ற தேரின் மீது தனது காலினை பெருமான் வைத்த போது தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்ததால் தேரின் மீது பெருமான் செல்ல முடியாமை கண்டு, திருமால் விடையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார், திருமாலின் வேண்டுகோளினை ஏற்று விருப்பத்துடன் பெருமான் விடையின் மீது அமர்ந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு கொல்லை விடை உகந்தான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை உடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.8) சம்பந்தர், இராவணன் கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது உமையன்னை அஞ்சியதைக் கண்டு மகிழ்ந்தார் என்று கூறுகின்றார். இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பிரான் பாடிய பாடல், இந்த விளக்கத்தின் பிறிதொரு பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. மாது=காதல்/பெருமை; தீது அமரா=தீயனவற்றை வெறுக்கும்
காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்
மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
சீர்காழி நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.8) தனது வலிமையை பெரிதாக கருதிய அரக்கன் இராவணனின் வலிமை கண்டு, கயிலாய மலையினை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, உமையன்னை அஞ்சியதாக சம்பந்தர் கூறுகின்றார்; ஏர்=அழகு; ஏர்கொள் மங்கை=அழகுடைய பார்வதி தேவி; சீர்கொள் பாதம்=சிறப்புடைய திருவடி; செறுத்த=வெற்றி கொண்ட; தார்=பூ; கடுந்திறல்=மிகுந்த வலிமை;
கார் கொள் மேனி அவ் வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்து ஒரு விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில்
தார்கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே
திருப்பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.32.10) அப்பர் பிரான் ராவணன் கயிலை மலையை அசைத்தபோது உமையம்மை அஞ்சியதாக குறிப்பிடுகின்றார். மூர்த்தி=தலைவன்; முனிதல்=கோபித்தல்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல்; அடர்த்தல்= நெருக்குதல்; அரிவை=பார்வதி தேவி;
மூர்த்தி தன் மலையின் மீது போகாதால் முனிந்து நோக்கிப்
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல்லரிவை அஞ்சத்
தேத்தெத்தே என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் (5.22) கடைப் பாடலில், அரக்கன் மலையை எடுத்த போது உமையம்மை அஞ்சியதாகவும், தேவியின் அச்சத்தைக் கண்ட பெருமான் சிரித்ததாகவும் கூறுகின்றார். கொன்று=வருத்தி; பெருமான் அப்போது சிரித்த சிரிப்பு நன்மை விளைவித்த சிரிப்பு என்பதை உணர்த்தும் பொருட்டு நன்று தான் நக்கு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். முப்புரம் எரிக்கப்பட்ட போது சிரித்த சிரிப்பு திரிபுரத்து அரக்கர்களுக்கு அழிவை ஏற்படுத்தியது. ஆனால் அரக்கன் இராவணன் கயிலை மலையை எடுக்க .முயற்சி செய்த போது சிரித்த சிரிப்பு அவனுக்கு பல நன்மைகளைத் தேடித் தந்தது.
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப் பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே
கயிலாய மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த போது, அவனது முயற்சி வீண் முயற்சி என்பதை நன்கு அறிந்தவர் சிவபெருமான். எனினும் தனது அருகில் அமர்ந்திருந்த பார்வதி தேவி அச்சம் கொண்டதைக் கண்டு, அந்த அச்சத்தை நீக்கும் பொருட்டு பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றி அரக்கனின் வலிமையை அழித்தார் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.27.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
தீர்த்த மாமலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகை வீரட்டனாரே
தன்னிடம் மிகவும் அதிகமாக விருப்பம் கொண்டிருந்த பார்வதி தேவி, அரக்கன் இராவணன் கயிலை மலையினை எடுக்க முயற்சி செய்த போது அஞ்சியதைக் கண்ட பெருமான், தேவியின் அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் சிரித்தவாறே தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்ற, அரக்கன் அலறி வீழ்ந்தான் என்று உணர்த்தும் பாடல் (4.30.10) இது. மாலினாள்=பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள்; வேலினான்= வேல் ஏந்திய வீரன்; நூலினான்=வேத நூல்களை அருளிய பெருமான்
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
கயிலை மலையினைக் கடந்து புட்பக விமானம் செல்லாது என்று அறிவுரை கூறிய தனது தேர்ப்பாகன் மீது சினம் கொண்ட அரக்கன் இராவணன் தேரிலிருந்து கீழே குதித்து மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தேர்ப்பாகனது அறிவுரையை அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு தசபுராணத் திருப்பதிகத்தின் கடைப்பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலிலும் தேர்ப்பாகன் கூறிய அறிவுரையை மதிக்காது இராவணன் நடந்து கொண்ட விதம் மிகவும் அழகாக கூறப்பட்டுள்ளது. உனது வீரத்தை நீ பெரிதாக நினைத்து, திருக்கயிலை மலையை பெயர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தெளிவாக கூறிய அறிவுரை புறக்கணிக்கப்படுகின்றது. தனது வலிமையின் மீது இராவணனுக்கு இருந்த நம்பிக்கை அவனை எவ்வளவு வேகமாக செயல்படவைத்தது என்பதை மிகவும் அழகாக, விடுவிடு என்று சென்று என்ற சொற்களால் அப்பர் பிரான் கூறுகின்றார். அவனது வீரம் பயனற்றுப், போன தன்மையும் இங்கே கூறப்பட்டுள்ளது.
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீர
மொழி நீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை
நன்று முனியா
விடுவிடு என்று சென்று விரைவு உற்று அரக்கன் வரை உற்று
எடுக்க முடி தோள்
நெடுநெடு விற்று வீழ விரல் உற்ற பாத நினைவு உற்றது என்
தன் மனனே
கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினை நீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர் பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (434) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல் செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவ சித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.
உலகியலில் வாழும் நாம், எத்துனை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாது இருப்பதையும், அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல் வெகுவாக விவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனி அதிகாரம் கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. அந்த ஊடல் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும் நேசமும் கொண்டு தம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது, அந்நாள் வரை அவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் அடிக்கடி காண்கின்றோம். அத்தகைய நிகழ்ச்சியாக, இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் கலைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார்.
கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன் கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்று சொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.
கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே
மறுக்கம்=அச்சம்; வரை=மலை, இங்கே இமயமலையினை குறிக்கும்; மதியில் வலிமை= அறிவற்றவனாகவும் வலிமை மிகுந்தவனாகவும் விளங்கிய அரக்கன் இராவணன்; உரம்=மார்பு; அருக்கன்=சூரியன்; ஏழ்விழவு=ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா; பண்டைய நாட்களில் திருவிழாக்கள் ஏழு நாட்களே நடைபெற்றன போலும். அட்டமி நவமி திதி நாட்கள் நற்காரியங்கள் நடத்த தகுதியற்ற நாட்கள் என்று கருதப் பட்டமையால் அட்டமி நவமி நாட்களில் திருவிழாக்களை தவிர்த்தனர் போலும். குறுக்கை வீரட்டம் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.58.2) அப்பர் பிரான் அட்டமி தினத்திற்கு முந்திய ஏழு நாட்களில் நடராஜப் பெருமான் வீதிவுலா வந்ததாக கூறுகின்றார். கால மாற்றத்தால் திருவிழா நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகின்றன.
ஆத்தமா அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம் எம் பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்டமி முன் சீருடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே
ஆத்தம்=குருவுக்கு செயப்படும் சேவை; பிரமனும் திருமாலும் தங்களது குருவாக கருதி இறைவனை வழிபடுதல்; முதன்முதலில் பிரமன் இறைவனை வழிபட்டு திருவிழா எடுத்தமையால் பிரம்மோற்சவம் என்ற பெயர் வந்தது என்பார்கள். சோத்தம்=ஸ்தோத்திரம் என்றார் வடமொழி சொல்லின் தமிழாக்கம். கீழ் நிலையில் உள்ளவர்கள் மேல் நிலையில் உள்ளவர்களை புகழ்ந்து சொல்லப்படும் மொழிகள். இதனை உணர்த்தும் பொருட்டே இறைவனைக் குறித்து நாம் புகழ்ந்து பாடும் பாடல்கள் அனைத்தும் தோத்திரம் என்றும் ஸ்தோத்திரம் என்றும் அழைக்கப் படுகின்றன. பெருமானினும் பல படிகள் தாழ்ந்தவர்கள் தேவர்கள் என்பதால் அவர்கள் பெருமானை தோத்திரம் செய்வதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார், திருவிழா நாட்களில் வீதிவலம் வரும் பெருமானை நாம் அனைவரும் கண்டு களித்து வணங்குவது போன்று பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்களும் வந்து வணங்குகின்றனர் என்பது ஐதீகம். ஆத்தம் என்பதை ஆப்தம் என்றார் வடமொழிச் சொல்லின் தமிழாக்கமாக கருதி பெருமானுக்கு நெருங்கிய பிரமன் மற்றும் திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தரு=பொதுவாக மரங்களை குறிக்கும் வடமொழித் சொல்லின் தமிழாக்கம்; தருக்குலம் என்று மரங்களில் உயர்ந்ததாக கருதப்படும் கற்பக மரத்தினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். செழிப்புடன் விளங்கும் சீர்காழி தலத்தின் மரங்களை அவைகளின் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு, உயர்ந்த கற்பக மரத்திற்கு சம்பந்தர் இங்கே ஒப்பிடுகின்றார். முந்திய பாடலில் தலத்து அடியார்களின் சிறப்பினை உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் தலத்து திருவிழாக்களின் சிறப்பினை உணர்த்துகின்றார். கொண்டல்=மேகம்;
பொழிப்புரை:
இமயமலைக்கு அரசனாகிய இமவானின் மகளாகிய பார்வதி தேவியின் மனம் கலங்கும் வண்ணம், மிகுந்த வலிமை உடையவனாகவும் அறிவற்றவனாகவும் விளங்கிய அரக்கன் இராவணன் கயிலை மலையினை எடுக்கும் முயற்சியில் அசைத்த போது, அந்த அரக்கனது தோள்கள் மார்பு மற்றும் தலைகள் ஆகியவை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது அழுத்தியவன் பெருமான். பின்னர் அரக்கன் தனது தவறினை உணர்ந்து பெருமானை சாமகானம் பாடி போற்றியபோது அவனுக்கு அருள் புரிந்த அழகனாகிய பெருமானின் இருப்பிடம் சண்பை நகரமாகும். சூரியன் முதலான பல தேவர்களும் கலந்து கொள்ளும் திருவிழாக்கள், அட்டமி தினத்திற்கும் முந்திய ஏழு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவதும், சிறப்பினில் கற்பகச் சோலையினை நெருங்கும் வண்ணம் மக்களுக்கு பல வகையிலும் பயன் அளிக்கும் செழிப்பான சோலைகள் நிறைந்தும், குளிர்ந்த மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்த சோலைகள் உடையதும் ஆகிய நகரம் சண்பை நகரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


