ஆதலினால் காதல் செய்வீர்!

காதல் என்பது உணர்வுபூர்வமாக ,உணர்ச்சிப் பிரவாகத்தில் எடுக்கக் கூடிய ஒரு நிகழ்வு. எல்லோருக்கும் எங்கோ ஓரிடத்தில் யார் மீதோ ஒரு காதலோ ஒரு ஈர்ப்போ ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை எனலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எதிரே வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகளைச் சுவைத்துப் பார்த்தால்தான் ஒவ்வொன்றின் சுவையும் எப்படி இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். சுவைத்துப் பார்க்காமலே அது நன்றாக இருக்காது. அல்லது நன்றாக இருக்கும் என்று கூறுவது நியாய தர்மம் அல்ல.

அது போல்தான் காதல்.. காதல் என்பது உணர்வுபூர்வமாக, உணர்ச்சிப் பிரவாகத்தில் எடுக்கக் கூடிய ஒரு நிகழ்வு. காதல் இல்லாத உயிரினம் உலகில் இல்லை என்றே சொல்லலாம். எல்லோருக்கும் எங்கோ ஓரிடத்தில் யார் மீதோ ஒரு காதலோ ஒரு ஈர்ப்போ ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை எனலாம்.

மிகப் பெரும் மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும் அம்சமாக காதல் இருக்கிறது. பல பேரின் வாழ்க்கையில் மிகப் பெரும் உயரத்தை இந்த  காதல் ஏற்படுத்தியிருப்பதைப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது. அதனால்தானோ என்னவோ கவிஞர்களின் படைப்புகளில் காதல் நிரம்பித் ததும்புகிறது.

அடங்க மறுக்கும் ஆண்மகனை ஆள்காட்டி விரல் அசைவில் அங்குலம் அங்குலமாக அடக்கிக் காட்டுகிறது இந்த காதல். அம்மாவின் உரத்த குரலுக்கு செவிசாய்க்காத பிள்ளைகளைக் காதலியின் செல்லச் சிணுங்கல்கள் செவி சாய்க்கச் செய்து வருகின்றன.

கால் மேல் கால் போட்டு அமர்ந்து காபியை ரசித்து குடித்துக்கொண்டே டி.வி.யில் வெட்டியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் பிள்ளையை, கடைக்குச் சென்று காய்கறி வாங்கி வா? என சொல்லும் தாயிடம், நீ சும்மா தானே இருக்க.. நீ போயிட்டு வா.. என்று எகிறும் ஆண்கள், காதலில் விழுந்து பெட்டிப் பாம்பாய் சுருண்டு, காதலி சொல்லும் ஒவ்வொன்றையும் அரசரின் அவையில் இருக்கும் அடிமைகள் போல் செய்யும் பருவ மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்க்கையைப் புரிய வைக்கிறது இந்த காதல்.

காதலில் விழுந்தேன் என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். பொதுவாக பள்ளத்தில் விழுவதைதான் 'விழுந்துவிட்டேன்' என்று சொல்வது வழக்கம். ஆனால், காதலில் மட்டும் விழுந்தேன் என்றால் அது வேறு அர்த்தத்தைத் தரும். தெருவிலுள்ள பள்ளத்தில் விழுவது தெரியாமல் நடக்கும் நிகழ்வு. ஆனால் ஒருவனைப் பற்றி அல்லது ஒருத்தியைப் பற்றித் தெரிந்துகொண்டே விழுவது காதலில் மட்டும்தான் நடக்கும் .

தெரிந்துகொண்டே விழுவதால் அதாவது ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டே அதனுள் இறங்குவதால் அது நிச்சயம் எதிர்காலத்தில் வாழ்க்கையை மெருகூட்டத்தான் செய்யும்.

முன்பே சொன்னதுபோல் அனுபவித்துப் பார்த்தால்தான் அருமை தெரியும். பள்ளத்தில் விழுந்தவர்களுக்குத்தான் அதனுடைய வலியும் அந்த பள்ளத்தில் இருந்து வெளியே வருவதற்கான சூட்சுமங்களும் தெரியும். அதுபோல் வாழ்க்கை என்ற மிகப் பெரும் சவால் நிறைந்த பயணத்தை இனிமையாக கடக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காதலில் விழுந்து பார்க்க வேண்டும். அது தரும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைப்  பயணத்தை ஆரம்பித்தால் அந்த வாழ்வு நிச்சயம் வசந்தம் நிறைந்ததாக இருக்கும்.

பரவசம், உணர்வுப் பிரவாகம், உணர்ச்சிப் பெருக்கு, வெட்கம் இதுபோன்ற சொற்களின் பொருளை நீங்கள் உண்மையாக உணர வேண்டுமென்றால் ஒருவரிடம் உங்கள் காதலை முதல்முறை சொல்லிப் பாருங்கள், அத்தனையும் ஒருசேர உங்களுக்கு கிடைக்கும்! யாரிடம் சொல்கிறீர்கள் என்பதிலும் மிகவும் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com