காதல் அழிவதில்லை!

கலாசாரம்,  நாகரிகம், மொழி, நாடு, அறிவு வளர்ச்சி, மதம், சாதி என பூமியில் பற்பல மாற்றங்கள் வந்த பின்னரும் வந்த நாள் முதல் இந்த நாள் வரை அழியாமலிருப்பது இந்தக் காதல்!
காதல் அழிவதில்லை!

இந்த உலகம் இரவில் உருவானது. பால்வழியில் இரவே இல்லை. அதனால் உலகம் பகலில் தான் உருவானது. இப்படி உலகம் உருவானது குறித்து தெளிவான ஆய்வு முடிவுகள் எப்படி கிடைக்கவில்லையோ, அதுபோன்றுதான் காதல்!

அன்று தோன்றிய உலகம் இன்று பல பரிமாணங்களை எட்டியிருந்தாலும், உயிர்களில் பல மாறுதல்களைக் கண்டிருந்தாலும், அன்று முதல் இன்று வரை ஒரு மில்லி மீட்டர் அளவு கூட மாறாமலிருப்பது காதல்!.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற முதுமொழியை உருவாக்கியவர் காதலிக்காதவராய் அல்லது காதலைப் பற்றி அறியாதவராய் இருந்திருக்கக்கூடும் என்று தான் சொல்ல வேண்டும்.

காதலிக்கப்படும் விதங்கள் மாறிவரும் கலாசார கலப்பிற்கு ஏற்ப, கால வழுவின் காதல் உபரிகளாகியிருக்கலாம்.  ஆனால் கலாசாரம்,  நாகரிகம், மொழி, நாடு, அறிவு வளர்ச்சி, மதம், சாதி என பூமியில் பற்பல மாற்றங்கள் வந்த பின்னரும் வந்த நாள் முதல் இந்த நாள் வரை அழியாமலிருப்பது இந்தக் காதல்!

காதல் மட்டும் எப்படி மாற்றங்களிலிருந்து தப்பிப் பிழைக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்தால், உள்ளுக்குள் எழும் காதல் விஞ்ஞானி, அறிவியல் விஞ்ஞானிகளையெல்லாம் தாண்டி நிற்கிறான்.

அவனுக்கு கிடைக்கும் விடைகள் கருந்துளைகளில் சிக்கித் தவிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் போல வார்த்தைகளால் வார்க்க முடியாததாக இருக்கிறது. அதை அவனுக்கு சொல்லவும் தெரிவதில்லை. ஏனெனில், அது ஒரு புரிதல். வார்த்தைகளல்ல.

கருந்துளை விஞ்ஞானிகள் அறிய முற்படுவதைபோல, காதலை காதலர்கள் அறிய முயற்சிக்கின்றனர். இருவருக்குமே இரண்டிலும் விடை கிடைப்பது போன்று இருக்கும். ஆனால் அடுத்தடுத்து எழும் கேள்விகள் இவர்களை கத்துக்குட்டிகளாக மாற்றிவிடும்.

இத்தனை கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டிருக்கும் இத்தகைய விஞ்ஞானிகளும் , காதலர்களும் முட்டாள்களாகவே சமுதாயத்தால் அறியப்படுவது தான் வாழும் உலகின் நிதர்சனம்.

உலகில் ஒரு சிலவற்றை மட்டுமே பிறர் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாமல் போகிறது. அந்த சுயம்பு பட்டியலின் புனிதப் பிரிவில் மேலான இடத்தைப் பெற்று மேலோங்கி நிற்கிறது காதல்!

எனில், இந்த காதலை பிறர் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாததால்தான் பலர் இதில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுகிறதோ என்னவோ?

கால வழு காதலை தவிர்த்து விடுங்கள். ஓடாத சினிமா திரையரங்குகளும், கரையில் கடலுக்குச் செல்லாத படகுகளும், காவலாளியற்ற பூங்காக்களும் காணாமல் போகும்போது அது மறைந்துவிடும்..

பிறர்  கற்றுக்கொடுக்காமலேயே முன்பு எந்தத் தொடர்பும் இல்லாத இருவரிடையே காதல் எப்படி கண்ணியத்தை ஏற்படுத்துகிறது. பரஸ்பரம் சளைக்காத நலம்விரும்பிகளாக்குகிறது. ஒருவருக்காக ஒருவர் துடிக்கும் பிணைப்பைப் பலப்படுத்துகிறது.

இதற்கான விடையை அறிவியலும் உளவியலும் சேர்ந்து கொடுத்துள்ளன. குழந்தை பிறந்த தாய்மார்கள் ஆக்சிடாஸின் என்ற ஹார்மோன் எழுச்சிக்கு இயற்கையாகவே உட்படுகின்றனர்.

பிறந்த குழந்தையின் தீட்டுத் தோல் உரித்து, மேனி தொட்டு, மார்பு உடைத்து பால் கொடுத்து, புதிய உயிரின் பசியாற்றுவதில்  தாயின் ஹார்மோன்கள் குழந்தைக்கும் சென்று கலப்பதில் தன்னலமற்ற அன்பு பாலமாக உருவாகிறது.

தொப்புள்கொடி அறுத்த பின்னரும் நடக்கும் இத்தகைய பரிமாற்றம் எல்லா உயிர்களையும் அன்பு செய்யத் தூண்டுகிறது. பின்னர் பருவத்தில் எழும் ஹார்மோன்களும், அறிவும் நமக்கான நபரின் மீது அதே அன்பை செலுத்தத் தூண்டுகிறது. காதல் இப்படிதான் அனைவரையும் ஆட்கொள்கிறது.

இன்றளவும் குற்றம் சொல்ல முடியாத ஒரு உன்னத இடத்தில்தான் காதல் உள்ளது. இப்பொழுதோ அது ஒரு கெட்ட வார்த்தையாகத் திரிக்கப்படுகிறது. இந்திய சமுதாயத்தைப் பொருத்தவரை காதலின் அடுத்த நிலை அல்லது வெற்றி என்பது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற வரையறையில் சென்று இணைகிறது.

திருமணத்தில் கலந்தால் வெற்றி இல்லையென்றால் தோல்வி என்பது மற்றவர்களுக்காக காதலின் மீது காதலர்களே போட்டுக்கொள்ளும் பாஸ் மார்க். பாஸ் மார்க் தாண்டி ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கிய காதலர்களெல்லாம் திருமணத்திற்கு பிறகே மதிப்பிடப்படுகின்றனர்.

திருமண வரையறையில் ஒரு காதல் தோற்றால் அதில் காதலின் பங்கு என்ன இருக்கிறது. சொல்லப்போனால் காதலர்கள் கூட தோல்விக்கு விதிவிலக்குதான். பெரும்பாலானோரின் காதல் தோல்வியடைவதற்கு கட்டமைக்கப்பட்ட சமுதாய காரணிகள் மட்டுமே காரணங்களாகி நிற்கின்றன.

அந்த கட்டமைப்புகளின் இடுக்குகளில் மூச்சுவிடமுடியாமல் திணறுகிறதே தவிர ஒருபோதும் காதல் அழிவதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com